நடிகர் சங்கத்துக்கு விஜய் அஜீத் வராதது பற்றி கமல் பேட்டி !

  IMG_0966
நடிகர் சங்கத்துக்கு விஜய், அஜீத் வராதது பற்றி கமல்ஹாசன்  தன்படவிழாவில் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு:

ராஜ்கமல் பிலிம் இண்டர் நேஷனல், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் ‘சபாஷ் நாயுடு’ கமல்ஹாசனின் அடுத்த படமாக உருவாகவுள்ளது.

இது தமிழ்,தெலுங்கு,இந்தி என 3 மொழிகளில் தயாராகிறது.இதன்  தொடக்கவிழா இன்று நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

IMG_0981திரையுலகமே திரண்டிருந்த இந்த விழாவில் நடிகர்கள் கமல்ஹாசன்,  சிவகுமார், பிரபு, எஸ்.வி.சேகர், மனோபாலா, இசைஞானி இளையராஜா,
இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், கே.எஸ்.ரவிகுமார், சபாஷ் நாயுடு’  இயக்குநர் ராஜீவ்குமார், நடிகைகள் ஸ்ருதிஹாசன், கோவை சரளா, குட்டி பத்மினி, நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பொன்வண்ணன், லைகாபுரொடக்ஷன்ஸ்  சுபாஷ்கரன் மற்றும் ராஜுமகாலிங்கம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நடிகர் சங்க கட்டடம் இடிக்கப்பட்டாலும் அந்த இடத்தில் பிரமாண்ட பந்தல்  தற்காலிக குளிர்பதன அரங்கு அமைக்கப்பட்டு இன்று விழாக்கோலம் பூண்டிருந்தது.

படம் பற்றி கமல் ஊடகங்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அவர் பத்திரிகையாளர்களிடம் பேசிய போது ”இங்கே அக்ஷரா ஓடியாடி வேலைசெய்வதைப் பார்க்கும் போது எனக்கு உதவி இயக்குநராக இருந்த பழைய காலம் நினைவுக்கு வருகிறது.” என்று தொடங்கினார்.

கமலிடம் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர்  அளித்த பதில்களும் வருமாறு:

‘சபாஷ் நாயுடு’  பற்றி?

படத்தின் பெயர் ‘சபாஷ் நாயுடு’ தமிழிலும் தெலுங்கிலும் இதே பெயர்தான். இந்தியில் இதன் பெயர் ‘சபாஷ்குண்டு’ கதாநாயகன் பெயர் பிரணாப் குண்டு.

இது எப்படிப்பட்ட படம்?

நாயுடு என்கிற பெயரைப் பார்த்தாலே என்ன மாதிரி மூடு என்பது தெரியும். இது ஒரு ஹியூமரஸ் த்ரில்லர். கலகலப்பாக சந்தோஷமாக சிரிக்கவைக்கும். குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கும். வெறும் குலுக்கல் மட்டும் இருக்காது சிரிக்க வைக்கும்படியும் இருக்கும்.
படத்தை இயக்கும் ராஜீவ் குமாரை எனக்கு 25 ஆண்டுகளாகத் தெரியும். அவர் நம்பகமான ஆள். அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு நான் நிம்மதியாகத் தூங்கலாம். எனவேதான் அவரை இயக்க வைக்கிறோம்

IMG_7077ஸ்ருதி உங்களுடன் நடிக்கிறார். இதை நீங்கள் எதிர்பார்த்தீர்களா?

என்னுடன் ஸ்ருதி நடிப்பது பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறேன். இப்படி  நடக்கும் என்று நினைக்க வில்லை.

ஸ்ருதி இசைத்துறைக்கு போக வேண்டியவர் இங்கே வந்து விட்டார்.

நானும் நடனஉதவி இயக்குநர் இயக்கம் என் று போயிருக்க வேண்டியவன். பாலசந்தர் என்னை திசை திருப்பி விட்டார்.

ஸ்ருதியை நாங்கள் அறிமுகம் செய்து இருந்தால் ஆமாம் கமல்ஹாசன் பெண்தானே என்று சொல்லியிருப்பார்கள் இப்போது அவராக வளர்ந்த பிறகு ராஜ் கமலுக்கு  ஒரு நட்சத்திரமாக வளர்ந்து  நடிக்கிறார்.

சாதி மறுப்பு கருத்துள்ள நீங்கள் ‘சபாஷ் நாயுடு’ என்று சாதி தலைப்பு வைத்து இருப்பது ஏன்?

குடிகாரன் பற்றி எடுத்து விட்டுத்தான் மதுவிலக்கைப் பற்றி பேச முடியும் .அப்படித்தான் இதுவும். தலைப்பைப்  பார்த்து எதுவும் முடிவு செய்யக் கூடாது.

அந்த ‘சபாஷ் நாயுடு ‘  கதாபாத்திரம் துப்பறியும் சாம்புவை அடிப்படையாக வைத்ததா?

துப்பறியும் சாம்பு மட்டுமல்ல அவருக்கும் முன்னோடியாகப் பலரும் இருந்திருக்கிறார்கள். இது வேறு மாதிரியான தோற்றம், வித்தியாசமான பார்வையில் இருக்கும்.

IMG_1127குறிப்பாக பல்ராம் நாயுடுவை வைத்து எடுக்கக் காரணம்?

நீங்கள் இங்கு ஏன் வந்து இருக்கிறீர்கள்? உங்களுக்கு பிடித்ததால் இங்கு  வந்திருக்கிறீர்கள்.

அது போல பல்ராம் நாயுடுவை எனக்குப் பிடிக்கும் இது பல்ராம் நாயுடு பாகம் 2-மாதிரியும் இல்லை. இது தனியான விதத்தில் இருக்கும்.

‘சபாஷ் குண்டு’ தலைப்பில் பல்பு உள்ளதே விஷயம் இல்லாத வர்களைத்தானே பல்பு என்பார்கள்?

விஷயம் இல்லாதவர்களைத்தான் பல்பு என்பார்களா?. தாமஸ் ஆல்வா  எடிசன் என்றால் பல்பு தானே நினைவுக்கு வரும்? எடிசன் பல்பா? பல்பே எடிசன்தானே. போட்டவுடன் எரிவது பல்புதானே? போட்டவுடன்  எரியாதது டியூப்லைட்தான்.

மீண்டும் இளையராஜாவுடன் இணைந்து இருப்பது பற்றி?

அவருடன் இணைந்து இருப்பது மகிழ்ச்சி. படத்தில் 4 பாடல்கள். அதை புதுவிதமாக மேம்படுத்தும் முயற்சிகள் நடக்கவுள்ளன. முக்கியமாக இளையராஜா அவர்கள் அனுமதியுடன் அவருடன் அமெரிக்காவின் ‘டிஸட்ரிக்–78 ‘என்கிற இசை தயாரிப்பாளர்கள் இணையவுள்ளார்கள். இதுமாதிரி நடனம். சண்டைப் பயிற்சிக்கும் ஹாலிவுட் கலைஞர்கள்இணையவுள்ளார்கள்.
உங்கள் காமெடி படங்களில் இருக்கும் கிரேஸி மோகன் இதில் இல்லையே?

இதில் 3 எழுத்தாளர்கள் 3 மொழிகளில் இருக்கிறார்கள். தமிழுக்கு நான் எழுதுகிறேன். அது மட்டுமல்ல கிரேஸி மோகன் என் எல்லா படங்களிலும் இருப்பார். அவர் மட்டுமல்ல  மௌலி, சுகா, முடிந்தால் ஜெயமோகனிடமும் கதையைப் படித்துக் காட்டுவேன் .

‘மருதநாயகம்’  படத்தையும் மீண்டும் தொடங்குவீர்களா?

முதலில் இதை முடிப்போம். பிறகு அதைப் பார்ப்போம்.

உங்கள் படத்தில் பிரெஞ்சுப் படங்களின் தாக்கம் இருக்கும் என்று நீங்களே கூறியிருக்கிறீர்கள். இதில் அது இருக்குமா?

என் படங்களில் சிவாஜியின் தாக்கம் இருக்கும். பார்த்த படங்களின் தாக்கம் இருக்கும் .உரிமை வாங்கித்தான் ஹாலிவுட் கதைகளையே எடுப்பவன் நான். அதற்கு இதில் அவசிய மில்லை. இது முழுக்க அசல் கற்பனை.

நீங்கள், ரஜினி போன்ற மூத்த நடிகர்கள் எல்லாம் நடிகர் சங்க கட்டடம், கிரிக்கெட்  போன்ற செயல்பாடுகளில் கலந்து கொண்டீர்கள்? ஆனால் விஜய், அஜீத் போன்றவர்கள் எதற்கும் வரவில்லையே ஏன்?அவர்களுக்கு உங்கள் அறிவுரை  என்ன?

அறிவுரை எனக்கும் பிடிக்காது ,கேட்கமாட்டேன்  நானும் அவர்களுக்கும் சொல்லப் போவதில்லை.
அவர்கள் இந்த நேரத்தில் ஒதுங்கி இருக்கக் காரணங்கள் பல இருக்கும்.இது ஒரு குடும்பம் அவர்கள்  என் சகோதரர்கள்..  வரநினைக்கும் போது தேவையான நேரத்தில் வருவார்கள்.சங்கத்தின் கதவு திறந்தே இருக்கும்.

லைகாவுடன் இணைந்துள்ளது பற்றி.?

தயாரிப்பில் லைகாவுடன் இணைந்துள்ளது மகிழ்ச்சி. இணைந்ததில் வியாபாரம் என்பதை விட நட்பு பெரிய காரணமாக இருக்கிறது.’மருதநாயகம்’எனக்குத்தான் எனக்குத்தான்  என்று லைகா பிடிவாதமாக இருக்கிறார்கள். அதற்கு முன் ஒரு முயற்சியாக இந்தப் படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

படப்பிடிப்பு திட்டங்கள் எப்படி?

மே.16-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்குகிறோம். ஜூன் இறுதியில் அங்கு முடிக்கிறோம். ஜூலையில் இங்கு எடுப்போம். மே, ஜூன்,ஜூலையில் முடிப்பதாகத் திட்ட மிட்டிருக்கிறோம். 10 முதல் 15 சதவிகிதம் தான்   இங்கு எடுப்போம். பிரம்மானந்தம், ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்கள். ஸ்ருதிக்கு ஜோடி மனுநாராயணன்.
அவர் ஏ.ஆர்.ரகுமானின் ‘பாம்பே ட்ரீம்ஸ்’, கதாநாயகன்.

அப்படியானால் மே 16ல் இங்கு தேர்தலில் வாக்களிக்க மாட்டீர்களா?

இதுதான் என் திட்டம். நான் வாக்களிக்காவிட்டால் என்ன? என் வாக்கை யாரோ அளித்து விடுவார்களே. ஏற்கெனவே இப்படி நடந்திருக்கிறது. நானும் ஒரு இந்தியக் குடிமகன் என் வாக்கை யாரோ அளித்து விட்டார்கள். தேர்தல் ஆணையத்தில் பலரும் எனக்கு நண்பர்கள்தான் இதுபற்றி அவர்களிடமே கேட்டிருக்கிறேன்.வாய்ப்பு அமைந்தால் வாக்களிப்பேன்.

உங்கள் ரசிகர்கள் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள்?

அது அவரவர் விருப்பம். நற்பணி மன்றப் பணிகளில் அரசியல் வரக் கூடாது.  மன்றத்தில் யாரும் அரசியலோடு உள்ளே வரவேண்டாம் .  உள்ளே வரும் போது அரசியல்  என்பதை செருப்பைப் போல வாசலில் கழற்றி விட்டு வர வேண்டும்.போகும் போது  தேவை, பாதுகாப்பு என்றால்  போட்டுக் கொள்ளலாம்.  சேவை என்பதற்காக சொன்ன இந்த உதாரணத்தை தவறாக யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது”

இவ்வாறு கமல் பதிலளித்தார்.  நிகழ்ச்சியில் ஸ்ருதிஹாசன், இயக்குநர் ராஜீவ் குமார் ,ஒளிப்பதிவாளர் ஜெயகிருஷ்ணா கம்மாடி, எடிட்டர் ஜேம்ஸ் ஜோசப்,  இந்தி வசன கர்த்தா -நடிகர் சௌரப் சுக்லா,நடிகர்கள் ஆனந்த் மகாதேவன், பரத் தபோல்கர்,சித்திக் ஆகியோரும் பேசினார்கள்.

முன்னதாக படத்தின் தொடக்க விழாவில் லைகா நிறுவனம் நடிகர் சங்க கட்டட நிதியாக ஒரு கோடி வழங்கியது குறிப்பிடத்தக்கது.