நடிகர் சங்கத் தேர்தல் அரசியல் சார்ந்து நடக்கவில்லை:விஷால்

vishalநடிகர் விஷால் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் நடிகர் சங்கத் தேர்தல் அரசியல் சார்ந்து நடக்கவில்லை என்றார்.அவர் மேலும்கூறியதாவது:-

“நடிகர் திலகம்’ சிவாஜிகணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவதாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 2002-ல் இந்த மணிமண்டபத்துக்காக அரசு இடம் கொடுத்தது. இத்தனை வருடங்களாகியும் நடிகர் சங்கம், மணிமண்டபம் கட்டவில்லை. அரசே இப்போது பொறுப்பேற்று கட்டுகிறது.

நடிகர் சங்க நிர்வாகம் பற்றி நாங்கள் கேள்வி எழுப்பினோம். அதன்காரணம் இப்போது எல்லோருக்கும் தெரியவந்திருக்கும். சிவாஜிகணேசன் இளம் தலைமுறை நடிகர்களுக்கு முன்உதாரணமாக இருக்கிறார். அவருக்கு மணிமண்டபம் கட்டப்படுவது அனைத்து நடிகர்-நடிகைகளுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மணிமண்டபத்தை கட்டுவதற்கு காலதாமதம் செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது. இளம் நடிகர்கள் கலைநிகழ்ச்சிகள் மூலமும் கூட நிதி திரட்டியிருப்போம். அதைச் செய்யவில்லை.

ஆனாலும், இப்போது தீர்வு கிடைத்துள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி. நடிகர் சங்க தேர்தல் அரசியல் சார்ந்து நடக்கவில்லை. குஷ்பு, விவேக், மனோபாலா என்று தனிப்பட்ட முறையில் பலர் எங்களுக்கு ஆதரவு தெரிவித்தவண்ணம் உள்ளனர். எல்லா உறுப்பினர்களையும் ஓட்டுப்போட அழைத்திருக்கிறோம்.

எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், சச்சு என பலரும் நடிகர் சங்கத்தை கட்டிக்காத்தனர். நடிகர் சங்க இடம் 19 கிரவுண்டு இப்போது காலியாக கிடக்கிறது. நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் வெற்றிபெறுவோம். நடிகர் சங்க கட்டிடத்தையும் கட்டுவோம். நான் நடித்த ‘பாயும் புலி’ படத்துக்கு தடை போட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். தயாரிப்பாளர் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். சுமுக தீர்வு ஏற்படும்.”

இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின்போது, நடிகர்கள் கார்த்தி, நாசர், பொன்வண்ணன், நடிகை குட்டி பத்மினி ஆகியோர் உடன் இருந்தனர்.