’நடிகையர் திலகம்’ விமர்சனம்

 

  நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு தான் ‘ நடிகையர் திலகம் ’. இப்படத்தில் சாவித்ரியின் வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார் .

1950 மற்றும் 60 களில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பணம், பேர், புகழ் என்று அனைத்திலும் உச்சத்தில் இருந்த சாவித்ரி, சொந்தப் படம் தயாரித்து நஷ்ட்டம் அடைந்து, சொத்துக்களை இழந்து தனது 46 வயதில் உயிரிழந்தார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த சாவித்ரி, நடனம், நாடகம் ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, பிறகு சினிமாவில் எப்படி நுழைந்தார். அவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கை, நடிகையாக பயணத்தை தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவான நடிகர் ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்துகொண்டது. தனது காதல் திருமணத்திற்கு வந்த எதிர்ப்பை சமாளித்து ஜெமினி கணேசனுடன் வாழ தொடங்கியவர், நடிகையாக உச்சத்தை தொட, அதுவே அவரது குடும்ப வாழ்க்கையில் குழப்பத்தை ஏற்படுத்தியது. பிறகு ஜெமினி கணேசனிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்தது, சொந்தப் படம் தயாரித்து அதனால் ஏற்பட்ட நஷ்ட்டத்தினால் தனது சொத்துக்களை இழந்தவர், மதுவுக்கு அடிமையாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கோமாவில் பல மாதங்கள் இருந்து, பிறகு உயிரிழந்தது என அவரது முழு வாழ்க்கையையும் இப்படம் பேசுகிறது.

ஒருவரது வாழ்க்கையைப் பற்றி திரைப்படமாக எடுத்தால் அதில் சில கற்பனைகளும் இருக்கும், அப்படி சில கற்பனைகளோடு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தாலும், நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின்.

சாவித்ரி வேடத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், இதுவரை எந்த படத்திலும் வெளிப்படுத்தாத திறமையை இந்த படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெமினி கணேசன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் துல்கர் சல்மான் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

கோமாவில் விழும் நடிகை சாவித்ரி குறித்து நிருபர் சமந்தா கட்டுரை எழுத தொடங்குகிறார். அவருடன் பயணிக்கும் புகைப்படக் கலைஞர் விஜய் தேவரகொண்டா ஒருதலையாக சமந்தாவை காதலிக்கிறார்.

இயக்குநரின் கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. ஜெமினி கணேசனாக நடித்துள்ள துல்கர் சல்மான், சாதாரணமாக நடித்துவிட்டு பாராட்டு பெற்றுவிடுகிறார்.

விஜயா வாஹினி ஸ்டுடியோ, பரணி ஸ்டுடியோ, பழைய சென்னை என்று படத்திற்காக போடப்பட்ட செட்கள் மூலம் கலை இயக்குநர் அவினாஸ் கோலாவும் மிரட்டியிருக்கிறார்.

படத்தின் மிக முக்கிய பலம் ஒளிப்பதிவாளர் டேனி சாலோ. இவர் பிரெஞ்சு நாட்டு ஒளிப்பதிவாளராம். இவர் பயன்படுத்தியிருக்கும் லைட்டிங்கும், கொடுத்திருக்கும் கலர் டோனும், பீரியட் படம் பார்ப்பது போல அல்லாமல், அந்த காலக்கட்டத்திற்கே நம்மை அழைத்துச் செல்வது போல இருக்க, இசையமைப்பாளர் மிக்கி ஜெ.மேயரின் பின்னணி இசை அந்த காலக்கட்டத்தில் நம்மை வாழ வைத்துவிடுகிறது. இசையும், ஒளிப்பதிவும் ஏதோ பழைய சாவித்ரி படத்தை பார்த்த அனுபவத்தையே கொடுக்கிறது.

படத்தில் தமிழை விட தெலுங்கின் ஆதிக்கம் தான் அதிகமாக உள்ளது. சில பாடல்களில் கூட தெலுங்கு வாடை வீசுகிறது. சாவித்ரியின் வாழ்க்கையை மாற்றிய படங்கள் என்று ஒரு சில படங்களின் படப்பிடிப்பை காட்டுகிறார்கள், அதில் தமிழ்ப் படங்களைக் காட்டிலும் தெலுங்குப் படங்கள் தான் அதிகமாக இடம்பெற்றிருப்பது, தமிழ் ரசிகர்களிடம் இருந்து இப்படம் அன்னியப்படும் விதத்தில் இருக்கிறது. இருந்தாலும், கதையை கையாண்ட விதமும், அதை விபரித்திருக்கும் விதம், காட்சிகளில் இருக்கும் பிரம்மாண்டம் உள்ளிட்டவை எந்த மொழிக்காரர்களையும் ரசிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.