நான் எடுத்த ரஜினி பேட்டி!- பி.எச்.அப்துல் ஹமீது

இலங்கை வானொலி மூலம் தமிழ் கேட்கும் நல்லுலகிற்கு நன்கு அறிமுகமான பெயர் பி.ஹெச். அப்துல் ஹமீது. அழகான தமிழ், திருத்தமான உச்சரிப்பு என வானொலி கேட்கும் நேயர்களின் காதுகளில் தேனொலி பாய்ச்சிய இவருக்கு பன்முக ஆளுமைகள் உண்டு.
வானொலி நிகழ்ச்சி அறிவிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், மேடை நிகழ்ச்சி நடத்துநர், நேர்காணல் செய்பவர், நடிகர் என இவரது ஆளுமையின் பரப்பு அகலமானது.

கலைஞர் தொலைக்காட்சிக்கான ‘இன்னிசை மழை’ நிகழ்ச்சியின் படப்பதிவின்போது சந்தித்து உரையாடியதிலிருந்து…!

இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபன தமிழ்ச் சேவை ஒலிபரப்பில் உங்கள் பணி எப்போது தொடங்கியது? எத்தனை ஆண்டு பணி? மறக்கமுடியாத பெருமைப் படத்தக்க அனுபவங்கள்?

1960ம் ஆண்டு முதல் வானலைகளோடு உறவு. 11வயதில் “சிறுவர் மலர்” என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானேன் . பின்னர் “இளைஞர் மன்றம்” அதனைத் தொடர்ந்து சன்மானம் பெறும் வானொலி நாடகக்கலைஞன். நான் அறிவிப்பாளராக பதவியேற்றது 1967ல்- தொடர்ந்து 32 ஆண்டுகள் பணி,சாதாரண நிலையிலிருந்து “மீஉயர்”  தரம் வரை,  உயர்ந்தேன். சிறிதுகாலம் நிர்வாகப்பொறுப்பும் ஏற்றேன். என்னைப் பொறுத்த அளவில் படைப்பாற்றலுக்கும், நிர்வாகத்துக்கும் எட்டாத்தூரம், அரசியல் செல்வாக்குப் பெற்றவர்களால் ஒலிபரப்புச் சூழல் மாசடைய ஆரம்பித்தபோது 1998ல் பதவியை ராஜினாமாச் செய்து வெளியேறினேன்.

வெறும் அறிவிப்பாளராக மட்டும் இல்லாமல், செய்தி வாசிப்பாளராக, நேர்முக வர்ணனையாளராக, நேயர்களது எழுத்தார்வத்தை வளர்க்கும் வானொலிச் சஞ்சிகை நிகழ்சிகள். சிறந்த வானொலி நாடகங்கள், எத்தனையோ பாடகர்கள், இசைக்குழுக்களை வளர்த்துவிட்ட இசைநிகழ்ச்சிகள். போன்றவற்றின் தயாரிப்பாளராக, இன்று தமிழகத் தொலைக்காட்சிகளே கூட பின்பற்றும், புது நிகழ்ச்சி வடிவங்களை அறிமுகப்படுத்தியவனாக, இலங்கையில், மெல்லிசை. தமிழ் பொப்பிசை போன்றவை உருவாகக் காரணகர்த்தாவாக- இன்று உலகெங்கிலும் வானொலிச்சேவைகளை நடத்தும் ஒலிபரப்பாளர்கள் பலருக்கு பயிற்சிவழங்கியவனாக….என, அங்கு நான் பணியாற்றிய காலம் முழுவதும் பெருமைப்படத்தக்க காலமே.

தமிழ்த்திரை இசைப் பாடல்களின் தகவல்கள் பற்றிய ஞானம் பழகப் பழக வந்ததா? தனி ஈடுபாடு காட்டி வளர்த்ததா?

திரையிசைப்பாடல்களைப் பற்றிய, ஞாபகசக்தியைப்பற்றி கேட்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீண்டகாலம் அந்தச்சூழலில் வாழ்ந்தது ஒரு காரணமாயிருக்கலாம். தவிர மனிதமூளைக்கொரு சக்தி உண்டு. (நம் எல்லோர்க்கும் உண்டு)அன்றாடம், நாம் கேட்கும் ஒலிகளும், பார்க்கும் காட்சிகளும், நமது மூளையில் பதிந்து நம் உயிருள்ளவரை, நிலைத்திருக்கும். தேவையைப் பொறுத்தே அது மீட்டு எடுக்கப்படும். நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் ஒருவர் பாடலைப்பாட ஆரம்பிக்கும் போது அதனால் தூண்டப்பட்டு அப்பாடல் தொடர்பான நினைவுகள் எனக்கு வருகின்றன. அவரவர் துறை சார்ந்து, இந்த ஆற்றல் எல்லோருக்கும் உண்டு.

இசைத் துறையில உங்களுக்கு நெருக்கமானவர்கள் யார்?

சில காட்சிகளையும், சில பொருள்களையும், சில மனிதர்களையும் கூட தூரத்தில் வைத்து ரசிப்பதே நலம். நெருங்கினால் ஏமாற்றமும், வெறுப்பும் கூட வரலாம். மிகச்சிலர் மட்டுமே, நெருங்கிய பிறகும் என்னை வியக்க வைத்தவர்கள்–இசைத்துறையில் குறிப்பாகச் சொல்வதானால், (மிகமுக்கியமாக-இசைஞானமும் கொண்ட கமல்) ஏ.ஆர்: ரஹ்மான். எஸ்.பி.பி. , பி.பி.எஸ் , எம்,எஸ்.வி   , யேசுதாஸ்.

பாரம்பரிய கர்நாடக இசை பற்றி…உங்கள் ஆர்வம், ஈடுபாடு எப்படி உள்ளது?

மிக இளம்வயதில் பள்ளியில், ஓரளவு கர்நாடக இசை கற்றதுண்டு. வானொலியில் பணியாற்றும்போது, மூத்த அறிவிப்பாளர் திரு. எஸ்.கே.பரராஜசிங்கம்(சங்கீதபூஷணம்) அவர்களுடன் இசை பற்றி அதிகம் பேசிப்பேசி ராகங்களைப் பற்றிய கேள்விஞானத்தை ஒரளவு பெற்றேன். தவிர, எல்லா இசைப்பாணிகளிலும், காதுகளை இம்சைசெய்யாத இசையை விரும்பி ரசிப்பதுண்டு.

வானொலி ரசிகர்கள் பற்றி என்ன உணர்கிறீர்கள்?  வானொலி அளவுக்கு தொலைகாட்சி, ரசிகர்களுடன் அணுக்கமாக–நெருக்கமாகவில்லை என்கிற கருத்தை ஏற்க முடிகிறதா?

ஆம். உண்மைதான். தொலைக்காட்சியை visual media என்பார்கள். வானொலி என்றால் என்ன தெரியுமா? தொலைக்காட்சியில் ஒரு தடவையில் ஒருகாட்சியைத்தான் பார்க்கலாம். ஆனால் வானொலியைக் கேட்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் வெவ்வேறுவிதமான காட்சிகளே கற்பனைத்திரையாக உருவாகும்.ஏனென்றால் ஒவ்வொருவரது கற்பனையும் ஒன்றுக்கொன்று மாறுபடும். அந்த வகையில், நம் குரலால், வார்த்தைகளால் கற்பனைச் சித்திரங்களை உருவாக்கமுடிகிறது.

எத்தனை ஆண்டுகள் சென்றாலும், என்னென்ன நவீன விஞ்ஞானக் கருவிகள் வந்தாலும், வானொலியின் சக்தியை அசைக்கமுடியாது. காரணம்? தொலைக்காட்சியை நமது ஐம்புலன்களையும் ஒருமுகப்படுத்தியே பார்க்கவேண்டும். நேரமும் பாழாகும். ஆனால் மனிதனது அன்றாட அலுவல்களுக்கு இடையூறு செய்யாமல் செவிவழியாகச் சென்றடையக்கூடியது வானொலி மட்டுமே.இங்கு அதனைச் சரியாக, பயனுள்ளதாகச் செய்கிறார்களா? என்பதுதான் கேள்வி. இக்கேள்விக்கு, நான் பதில் சொல்வது நாகரீகமாக இருக்காது.

இலங்கை வானொலி செய்த திரை இசைச் சேவையை தமிழக வானொலிகள் செய்யவில்லை என்பதை ஏற்கிறீர்களா?

அகன்ற பாரதபூமியின் குரலாய் ஒலிக்கும் அகில இந்திய வானொலியைப்பற்றி, வானொலித்துறையில் இன்னும் மாணவனாக இருக்கும் இந்தச்சிறியவனிடம் அப்படிக் கேட்பதே தவறு. நீங்கள் அப்படிக் கேட்பதன் காரணத்தைச் சிந்தித்துப்பாருங்கள்-இலங்கையில் தேசிய ஒலிபரப்புக்கு மேலதிகமாக,வர்த்தக ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டபோது. இந்தியாவில் வர்த்தக ஒலிபரப்பு என்ற ஒன்று, இருக்கவில்லை, தேசியரீதியலான ஒலிபரப்பு மட்டுமே இருந்தது.மிக நீண்ட காலம் கழித்தே “விவிதபாரதி” ஆரம்பிக்கப்பட்டது. வர்த்தக ஒலிபரப்பில் நமக்கிருந்த சுதந்திரம், திரையிசைப்பாடல்களை அதுவும் நல்ல திரையிசைப் பாடல்களைத் தாராளமாக ஒலிபரப்ப முடிந்தது. விளம்பரம்-15% ,தகவலும் பொழுதுபோக்கும்-85% என்ற அடிப்படையில் ஒலிபரப்பினை நடத்தினோம். அகில இந்திய வானொலிக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தன. ஒரேயொரு சேவையின் மூலம். பொழுதுபோக்கு அம்சங்களைவிட அபிவிருத்தி தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எனவே ஜனரஞ்சகமான திரையிசையினூடாக நேயர்களை ஈர்க்கும் போட்டியில் நாங்கள் முந்திக்கொண்டோம். அவ்வளவுதான்.

திரை இசையை ஓர் இலக்கியமாக அறிமுகம் செய்து ரசனையை மேம்படுத்தியது இலங்கை வானொலி, வெறும் அவசர கூச்சலாக- வியாபார இரைச்சலாகிவிட்டன தமிழக பண்பலை வானொலிகள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இன்றைய தனியார் வானொலிகளை மனதில் வைத்துக்கொண்டுதானே இப்படியொரு கேள்வியைக் கேட்கிறீர்கள்? இது காலமாற்றத்தினால் வந்த நிலை. வானொலி ஒரு நூதனமான சாதனமாக இருந்த காலத்தில். அதில் எது ஒலித்தாலும் கேட்டார்கள். ஆனாலும். நாம் சமூகப் பொறுப்போடு கடமையைச்செய்தோம். காரணம்! அன்று. வானொலிச் சேவை ஒரு அரசு நிறுவனம் என்ற சூழலில் நடைபெற்று வந்தது-வர்த்தக ஒலிபரப்பிலும்கூட. கல்வி, தகவல், பொழுது போக்கு என்ற மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு சுதந்திரமாக நிகழ்ச்சிகளை வடிவமைத்தோம், தனிக்காட்டு ராஜவாக இருந்தோம். இன்று போட்டிகள் மலிந்து விட்டன.

வானொலி என்பது குடிசைக் கைத்தொழில் போலாகிவிட்டது. இணையத்தளத்திலோ நினைத்தவரெல்லாம் வானொலி ஆரம்பிக்கலாம் என்ற நிலை. வானொலி ஒன்றை நடத்தவேண்டுமா? இட்டு நிரப்ப இருக்கவே இருக்கின்றன பல்லாயிரக்கணக்கான திரையிசைப்பாடல்கள். எனவே வனொலிப் பெட்டிகளெல்லாம் வெறும் பாட்டுப்பெட்டிகளாகிவிட்டன.(நம்மவர்கள் புலம்பெயர்ந்து வாழும் மண்ணிலெல்லாம் வானொலி நடத்துபவர்கள் தமிழையாவது சிதைக்காமல் பயன்படுத்துவதில் மகிழ்ச்சி) இன்று வானொலி; தொலைக்காட்சி எல்லாமே தனியார் மயம் என்றாகிவிட்ட நிலையில் வர்த்தகநோக்கு மட்டுமே மேலோங்கிவிட்டதில் வியப்பில்லை. ஆனால் இந்த நிலை, இங்கு மட்டுமே. மேலை நாடுகளில்  வேற்று மொழிகளில் ஒலிபரப்பனை நடத்துவோர், வர்த்தக நோக்கோடுமட்டுமன்றி, மக்களுக்குப் பயனுள்ளவகையில் அவரவர் ரசனைக்கேற்ப வானொலிச்சேவைகளைத் தரப்படுத்தி வழங்குகிறார்கள். இயந்திரமயமாக இயங்கும் அந்த வாழ்க்கைச்சூழலில், வானொலி மக்களது உற்றதோழனாக விளங்குகிறது. இங்கே எந்த வானொலியைக்கேட்டாலும் ஒரே விதமான தொலைபேசிச் சம்பாஷனைகள் (தொலைபேசியில் பேசுவதற்கென்றே ஒரு சிறுகூட்டம் அலைகிறதுபோலும் )-சுமார் 50 பேர் அல்லது 25ஆகக்கூட இருக்கலாம்- அவர்களே தினந்தோறும் திரும்பத்திரும்பப் பேசுகிறார்கள்.

bha2vijayantonyஅறிவிப்பாளராக- நேர்காண ல் செய்பவராக -நிகழ்ச்சி தொகுப்பாளராக மறக்க முடியாத அனுபவம்? எதில் முழு திருப்தி கிடைக்கிறது?

இரண்டிலுமே வெவ்வேறு அனுபவம். முகம்தெரியாத நேயர்களது நெஞ்சுக்கு நெருக்கமாக வானொலியில் உரையாடுவது ஒரு சுகம். நேர்காணல் செய்யும்போது நாம் சந்திக்கும் மனிதர்களிலிருந்து நிறையக் கற்றுக்கொள்ள முடிகிறது, மேடையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிப்பது ஒற்றைக்கம்பியில் சர்க்கஸ் வித்தை செய்வதுபோல், மிக அவதானமாகச் செய்யவேண்டியது. ரசிகர்கள் நம்மீது வைத்துள்ள மதிப்பைக் குலைக்காமல் வார்த்தைகளைக் கையாளவேண்டும். அதிகப்பிரசங்கியாக இல்லாமல் அதே வேளை அங்கும் அறிவுபூர்வமான தகவல்களைத்தர முயற்சிக்கவேண்டும்.

நேர்காணல் செய்தவர்களில் மறக்க முடியாத நபர் யார்?

முதன்முதலில் சந்தித்த அன்றைய சுழல்பந்து வீச்சாளர், திரு எஸ்.வெங்கட்ராகவன், சுத்தானந்த பாரதியார், குன்றக்குடி அடிகளார், என ஆரம்பித்து நூற்றுக்கணக்கில் சொல்லலாம். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு அனுபவம். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். ‘தீ’ படத்துக்காக இலங்கை வந்திருந்தபோது வானொலிக்காக நான் கண்டநேர்காணலை மறக்கவே முடியாது,

(அவருக்கும் அதுவே முதல் வானொலிப் பேட்டி என்று நினைக்கிறேன்.) காரணம், நான் முதலில் ஒரு கேள்வியைக் கேட்கிறேன்..உடனே பதில் வராது.. மேலே கூரையைப் பார்ப்பார் பின், வலது இடது பக்கம் தலையை திருப்பிப்பார்ப்பார், (ஒலிப்பதிவு இயந்திரத்தில் ஒலிப்பதிவு நாடா ஒடிக்கொண்டேயிருக்கும்) சில வினாடிகளுக்குப்பிறகு.. ஆமாம்! என்ற ஒற்றைச் சொல் பதிலாய்வரும். அடுத்த கேள்விக்கும் நீண்ட தாமதத்தின் பின் இல்லை என்ற ஒற்றைச் சொல். அடுத்துவரும் கேள்விகளுக்கு.. பெரும்பாலும் நீங்கள் சொல்வது சரி என்ற ஆமோதிப்பு, அப்படியே அரைமணி நேரத்துக்குமேல் ஒடிவிட்டது. நான் பேந்தப்பேந்த விழிப்பதைப்பார்த்து உடன் வந்திருந்த நடிகரும் நண்பருமான திரு.வி.கோபாலகிருஷ்ணன் அவர்கள் விலா எலும்பு நோகும் அளவுக்கு சத்தம்போடாமல் சிரித்துக்கொண்டிருந்தார். சந்திப்பு முடிந்து அவர்களை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்து அமைதியாக இருந்து யோசித்துப்பார்த்தேன்.

இந்த ஒலிப்பதிவை எப்படியும் வானொலியில் ஒலிபரப்பவே முடியாது. (இன்று வரை ஒலிபரப்பவும் இல்லை)அன்றைய ரஜினிக்குத் தமிழ் சரளமாகப் பேசவராது என்பது அல்ல காரணம், நான் கேள்விகளைக்கேட்ட விதத்தில்தான் பிழை என்பதை உணர்ந்து கொண்டேன்.

நான் கேட்ட கேள்விகளுக்கு அப்படி ஒற்றைச் சொல்லிலும் பதில் சொல்லலாமே  என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன். உதாரணமாக வேலை பார்த்தீர்கள் அல்லவா? என்று கேட்டால்-ஆம்! என்றுதானே பதில் வரும். அந்த அனுபவங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டிருந்தால் தொடர்ந்து பதில் தந்திருப்பார், என்னுடைய எல்லாக் கேள்விகளுமே நான் தெரிந்து வைத்திருந்ததை அவரிடம் சரிபார்க்கும் பாணியிலேயே அமைந்திருந்ததை உணர்ந்து, அன்றுமுதல் என்னைத் திருத்திக்கொண்டேன். அவர்களைப் பேசவைப்பது எப்படி என்பதைப் படிப்படியாக முயன்று என்னைப் பண்படுத்திக்கொண்டேன். அந்த வகையில் நேர்காணல் செய்வது எப்படி என எனக்கு வழிகாட்டியவராகவே சூப்பர் ஸ்டாரை மதிக்கிறேன்.

உங்கள் ஆளுமையின் பின்னணியில் யாராவது இருக்கிறார்களா? உங்களை உருவாக்கியவர் என்று யாராவது?

எதையுமே இலட்சிய நோக்காகக்கொண்டு முன்னேறியவனல்ல-காரணம், வ றுமைக்கோட்டுக்கும் கீழே வாழ்ந்த சூழல். ஒவ்வொரு சந்தர்ப்பமும் என்னைத் தேடிவந்தன, செய்வதைச் செவ்வனே செய்யவேண்டும் என்ற உந்துதலுக்குக் காரணம், எல்லோருக்கும் பொதுவான அந்த ஏக இறை ஒன்றே.

வழிகாட்டியவர்கள் வரிசையில் என்றால், எனக்கு அகரத்தை ஆரம்பித்து வைத்த ஆசிரியரும் மட்டுநகர் எழுத்தாளருமான ஆ.பொன்னுத்துரை அவர்கள், இலக்கியத்தை கற்றுத்தந்து அதில் ஈடுபாட்டையும் ஏற்படுத்திய தலைமை ஆசிரியர் பண்டிதர் எஸ்.சிவலிங்கம் அவர்கள், வானொலிநிலையத்தில் “இளைஞர் மன்றம்” நிகழ்ச்சியில் பங்குபற்றும் போது மேலும் இலக்கியத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்தி ஒழுக்கத்தையும் கற்றுத்தந்த “வானொலி அண்ணா”  வகவம் வ.அ.ராசையா அவர்கள், அறிவிப்பளரான போது பயிற்சி அளித்து பொறுப்புணர்வோடு ஒலிபரப்பில் கடமையாற்றுவது எப்படி எனக் கற்றுத்தந்த மூத்த அறிவிப்பாளர்  எஸ்.கே.பரராஜசிங்கம் அவர்கள், புதிய தலைமுறையைச் சார்ந்தவன் என்றாலும் சமவயதொத்தவனாகப் பழகி அன்பால் அரவணைத்துத் தட்டிக்கொடுத்த மூத்த அறிவிப்பாளர் திரு.எஸ்.பி மயில்வாகனன் அவர்கள். வானொலி நாடகத்தயாரிப்பில் எனக்கு வழிகாட்டிய ஜனாப். எம்.எச்.குத்தூஸ் அவர்கள்.

வானொலிக்கு வெளியே 1992ம் ஆண்டு தமிழகத்தில் என் முகத்தை நேயர்களுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்திய எனது பால்ய நண்பர் கலைமாமணி வி.கே.டி பாலன் அவர்கள், 94ல் இருந்து இன்றுவரை எனக்கு மிகச்சிறந்த களங்களைத் தமிழகத்தில் (வானொலியில் ஆரம்பித்து தொலைக்காட்சிவரை) அமைத்துத்தரும் என் நன்றிக்குரிய நண்பர், கலைஞர் தொலைக்காட்சியின் தலைமைப்பொறுப்பிலிருக்கும் திரு.ரமேஷ்பிரபா அவர்கள், தமது குடும்பத்தில் ஒருவனாக என்மீது பாசம் கொண்ட ராஜ் தொலைக்காட்சியின் சகோதரர்கள் நால்வரும், ஐரோப்பிய மண்ணிலே எனக்குப் பெரும் களங்களை அமைத்துப் பிரம்மாண்டமான பாராட்டுவிழாவும் நடத்திய நண்பர் “தமிழமுதம்” எஸ்.கே.ராஜென்.இத்தனைக்கும் மேலாய் நானடைந்த வெற்றிகளை எல்லாம் தாமடைந்த வெற்றிகளாய் கருதி குதூகலித்து உனக்கு தோள்தந்து இன்றுவரை துணையாய்  நிற்கும் எனது நண்பர்கள்.

குரல்வளத்தை எப்படி மாறாமல் பராமரிக்க முடிகிறது? உணவுக் கட்டுப்பாடு ஏதாவது உண்டா?

ஒன்றுமே இ ல்லை-தாய்மொழியை., தாயை நேசிப்பதுபோல் நேசிக்கிறேன். (வெறித்தனமாக இருப்பது வேறு, நேசிப்பது வேறு) பேசும்போது தமிழ் அட்சரங்களைக் கடித்துக் குதறாமல் அழகாகவும், இனிமையாகவும் பேசுவது எப்படி என எனக்கு வழிகாட்டியவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள். குண இயல்புகளைச் செம்மையாக வைத்திருக்கிறேன். குரல் இனிமையாயிருக்க இவைபோதும்.

உங்களை யாராவது பாட அழைத்தார்களா..? பாடிய அனுபவம் உண்டா?

கவியரசர் கண்ணதாசனுக்கு நிறைவேறாமல்போன ஆசையைப்போல், எனக்கும் இளவயது முதல் நிறைவேற முடியாமல்போன ஆசைதான் அது. முடியாததால்தான் பாடக்கூடியவர்களைப்  படாத பாடு படுத்திக்கொண்டிருக்கிறேன்.
இவ்வளவு இசை ஞானமுள்ள நீங்கள் ஏன் இன்னும் இசையமைப்பாளர் ஆகவில்லை?
ஒவ்வொரு அரிசிமணியிலும் அது யாருக்குப் போய்ச்சேரும் என்ற விதி எழுதப்பட்டிருக்கிறது. வேலி தாண்டமுடியுமா?

மறக்க முடியாத விசிறி பற்றி…?

ஒருவரல்ல பலர், 1983ம் ஆண்டு. நான் கொல்லப்பட்டுவிட்டேன் என்ற வதந்தி, பத்திரிகைகள் மூலமும் பரவியபொழுது மனம் துடித்த நேயர்கள் மூன்று தினங்களுக்குப் பிறகு என்குரல் வானொலியில் கேட்டதும் இறைவனுக்கு நன்றி செலுத்தி எனக்கு எழுதிய கண்ணீர் கடிதங்கள் பல. அவர்களை என் வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது.

இசை, பாடல்கள் தவிர வேறு துறை ஆர்வம் எதில்..?

மேடைநாடகங்கள் பல தயாரித்திருக்கிறேன். நடித் தும் இருக்கிறேன். வனொலி நாடகங்களோ கணக்கிலடங்காது (நடிகர் திலகமே தொடர்ந்து கேட்டு என்னைப்பாராட்டிய நாடகமும் அவற்றிலொன்று) திரைத்துறையில் இலங்கையில் உருவான, பல மொழிமாற்றுப்படங்களுக்குக் குரல் கொடுத்திருக்கிறேன். ஒரேயொரு படத்தில் (வானொலியில் ஒலிபரப்பாகி பிரபலம் பெற்று பிறகு திரைப்படமாக உருவாகிய “கோமாளிகள்” எனும் இலங்கைத்திரைப்படத்தில்) பாட்டுவாத்தியராக, பிராமணர் வேஷத்தில் நடித்திருக்கிறேன். வானொலிக்காக பல மெல்லிசைப்பாடல்களை இயற்றியிருக்கிறேன்.

தமிழகத்தில் “தெனாலி” படத்தில் கமல் யாழ் மொழிவழக்கில் பேச உதவியிருக்கிறேன். கடைசிக்கட்டத்தில் கொஞ்சம் முகத்தையும் காட்டியிருக்கிறேன். அந்தப்படத்தில் வரும் “ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா…”என்ற பாடலில் கமல் பாடும் வரிகளை அடியேன் இயற்றியிருக்கிறேன். மணிரத்தினம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “கன்னத்தில் முத்தமிட்டால்” படத்தில் வரும்….சிஞ்ஞோரே..சிஞ்ஞோரே..என்ற சிறு பாடலையும் இயற்றும் வாய்ப்பும் கிடைத்தது.

உங்கள் குடும்பம் பற்றி..?

காதல் திருமணம், கலப்புத்திருமணம், இறைவன் எனக்களித்த மிகப்பெரியகொடை எனக்கு வாய்த்த மனைவி. ஒரே மகன். கணிணித்துறையில் பட்டம் பெற்ற அவருக்கும் கலை ஆர்வமுண்டு, பல ஆங்கில மேடை நாடகங்களைத் தயாரித்திருக்கிறார்.
-அ.செல்வன்