நாம் தமிழர் கட்சிப் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்

seeman220-12-2016 சனிக்கிழமை சென்னை அம்பத்தூர் எச்.பீ.எம் பாரடைஸ் திருமண மண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிப் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:

20-12-2016 சனிக்கிழமை சென்னை அம்பத்தூர் எச்.பீ.எம் பாரடைஸ் திருமண மண்டபத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நடைபெற்ற
நாம் தமிழர் கட்சிப் பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த விவசாயத்தையே முடக்கிப்போடும் அளவுக்கு நதிநீர்ப் பிரச்னையில் நாளுக்கு நாள் நடக்கும் திட்டமிட்ட சதிகளையும், உரிமை மீறல்களையும் நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. முல்லைப் பெரியாறு மற்றும் காவிரிக்குக் குறுக்கே அணை கட்டப்படும் அடாவடிகளை மத்திய அரசு உடனடியாகத் தட்டிக்கேட்டுத் தடுக்க வேண்டும். நீதிமன்றங்களே மிகத் தெளிவாகச் சொன்ன பிறகும், தண்ணீர் பிரச்னையில் தமிழ்நாட்டுக்கான அக்கிரமங்கள் தொடர்வது தமிழர்களைத் திட்டமிட்டுச் சீண்டிப்பார்க்கிற செயல்.  காவிரி மற்றும் முல்லைப் பெரியாறு பிரச்னைகளில் அக்கம்பக்க மாநிலங்களின் அத்துமீறல்களும், மத்திய அரசின் மெத்தன அணுகுமுறையும் இனியும் நீடிக்குமேயானால், மிகக் கடுமையான போராட்டங்களை நாம் தமிழர் கட்சி கையிலெடுக்கும். இலட்சக்கணக்கான விவசாயப் பெருமக்களைத் திரட்டி, மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மிக உக்கிரமான போராட்டங்களை நடத்தவும் நாம் தமிழர் கட்சி தயங்காது.

2. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட விவசாய மாவட்டங்களில் மீத்தேன் எரிகாற்று எடுக்கும் திட்டத்தை அரசுத்தரப்பு உடனடியாகக் கைவிட வேண்டும். எரிகாற்று என்கிற பெயரில் விவசாய மண்ணையே பாலைவனமாக்கும் கொடூரத்துக்கு அரசுத்தரப்பு ஒருபோதும் துணை போகக்கூடாது. மீத்தேன் எரிகாற்றுத் திட்டத்துக்கு எதிராக நாளுக்கு நாள் கிளம்பும் எதிர்ப்புகளைப் பார்த்துச் சுதாரித்துக்கொண்ட அரசுத்தரப்பு, இப்போது ‘சாதாரண பெட்ரோல் -கேஸ் பரிசோதனைகளைத்தான் நடத்துகிறோம்’ எனச் சொல்லி,மத்திய அரசு நிறுவனமான ஒ.என்.ஜி.சி மூலமாக மீத்தேன் எடுக்கும் செயல்பாடுகளை மறைமுகமாக‌ச் செய்து வருகிறது. விவசாய வாழ்வாதாரங்களையே அழிக்கக்கூடிய இத்தகைய செயல்பாடுகள் இனியும் தொடர்ந்தால், ஒருமித்த மக்கள் புரட்சியே அந்த மண்ணில் நடக்கும் என்பதை நாம் தமிழர் கட்சி எச்சரிக்கையாகச் சொல்லிக்கொள்கிறது. மீத்தேன் எரிகாற்று அபாயங்களைப் பட்டியலிட்டு தனது இறுதி மூச்சு வரை போராடிய எங்களின் பெரிய தகப்பன் நம்மாழ்வார் அவர்களின் நினைவை நெஞ்சில் சுமந்து, ‘மீத்தேன் எரிகாற்று எடுக்கும் கொடூரத்தை ஒருபோதும் எங்கள் விவசாய நிலத்தில் நிறைவேற்ற விடமாட்டோம்’ என நாம் தமிழர் கட்சியினர் உறுதியேற்றுச் செயல்படுவார்கள்.

3. தமிழ்நாட்டில் அத்தியாவசியத் தேவையான பால் விலை, எளிய மக்களை மிரட்டுகிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களைத் தத்தளிக்க வைத்திருக்கும் பால் விலை உயர்வை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அதேபோல், மின் கட்டணமும் எவ்வித நெறிமுறையுமின்றி சகட்டுமேனிக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. மின்சாரத் துறையின் நிர்வாகக் குளறுபடிகளைச் சரிசெய்தும், தனியார் முதலாளிகளிடம் குறைந்த விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கியும் இழப்பீட்டை நிவர்த்தி செய்ய வேண்டிய அரசு, மக்களின் மீதே பாரத்தைத் திணிப்பது மனசாட்சியற்ற நடவடிக்கை. ஏற்கெனவே தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில், ‘இனி மின்சாரமே இருந்தாலும், அதனைப் பயன்படுத்த வேண்டாம்’ என்கிற மனநிலை இந்தக் கட்டண உயர்வால் மக்களிடத்தில் உருவாகி இருக்கிறது. இதனால், மறுபடியும் தமிழ்நாட்டை இருள் சூழும் அவலம் தொடர்ந்துவிடாதபடி மின் கட்டண உயர்வை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

4. மதுவினால் நடக்கிற குற்றங்கள் சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என நிகழும் சமூகக் குற்றங்கள் பலவற்றுக்கும் மிக முக்கியக் காரணியாக மதுவே இருக்கிறது. அரசால் விற்கப்படும் மது, அரசின் சட்டம் ஒழுங்குக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு பல கொடூரங்களை நிகழ்த்தி வருகிறது. குடும்பத் தகராறு, சந்தேகம், சல்லாப நோக்கம்,பகைமை, பழிவாங்கல் என மக்கள் மனதில் கட்டுப்பாடற்ற எண்ணத்தை உருவாக்கி, பல குடும்பங்களின் நிம்மதியைப் பறித்துவருகிறது மது. சிறுவர்கள்கூட மதுபானக் கடைக்குப் போகிற அவலம் கண்கூடாக நடக்கிறது. எனவே, இனியும் தாமதிக்காமல் மதுபானக் கடைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக மூட வேண்டும். மதுவை வருமானமாகப் பார்க்காமல், அவமானமாகப் பார்த்து, மது விற்பனையை அரசு உடனடியாகக் கைவிட வேண்டும்.

seeman6grp 5. இயற்கை மீது அக்கறையற்ற போக்காலும், ஆதாய நோக்கத்தாலும் எம்மண்ணின் கனிம வளங்கள் முழுவதுமாகச் சுரண்டப்பட்டிருக்கும் நிலையில், தனி ஒரு மனிதனாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டு எத்தகைய வளைவு நெளிவுகளுக்கும் இடம் கொடாமல் போராடும் மதிப்புயர் அய்யா சகாயம் அவர்களை கனிமவளக் காவலராகவே தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள். அவருடைய விசாரணையும் அறிக்கையும் கனிம வளச் சுரண்டல்காரர்களை அடையாளப்படுத்துவதுடன் மட்டும் அல்லாது அத்தகைய எண்ணம் கொண்டவர்களுக்கு பெரும் படிப்பினையாகவும் அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையில் திரு.சகாயம் அவர்களின் விசாரணையைத் தடுக்கும் விதமாக மர்ம நபர்களால் விடுக்கப்படும் சவால்கள் அனைத்தும் ஒவ்வொரு தமிழனுக்கும் விடுக்கப்படும் சவாலாகவே அமையும். அய்யா திரு.சகாயம் அவர்களின் மிக நேர்மையான நடவடிக்கைகளைப் பாராட்டும் நாம் தமிழர் கட்சி, அவருக்கான பாதுகாப்பை உரிய விதத்தில் வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

6. பாரதீய ஜனதா கட்சி மத்தியில் பொறுப்பேற்ற நாள் தொடங்கி இன்று வரை இந்தியாவையே இந்துத்துவா தேசமாக மாற்றிவிட எல்லாவித நடவடிக்கைகளையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மேற்கொண்டு வருகிறது. சமஸ்கிருதத் திணிப்பு, கட்டாய மதமாற்றம், பகவத் கீதையைத் தேசிய நூலாக்கும் திட்டம், கிறிஸ்துமஸ் தின விடுமுறையை ரத்து செய்யயும் முயற்சி… என பாரதீய ஜனதா ஆட்சியில் அனுதினமும் அரங்கேற்றப்படும் இந்துத்துவா நடவடிக்கைகளை நாம் தமிழர் கட்சி மிகக் கடுமையாகக் கண்டிக்கிறது. இத்தகைய இந்துத்துவா செயல்பாடுகள் நம் மண்ணில் வாழும் இதர மதத்தினரை எப்படியெல்லாம் துன்புறுத்தும் என்பதை மத்திய அரசு நினைத்துப் பார்க்க வேண்டும். முன்னேற்றப் பாதையில் இந்தியாவை முன்னெடுத்துச் செல்லப்போவதாக வாக்குறுதி வழங்கிய பிரதமர் மோடி அவர்கள், தேவையற்ற மதத் திணிப்புகளையும், மத வெறுப்பினையும் உண்டாக்கி, கற்காலத்துக்கு இந்தியாவை இழுத்துச் செல்லும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கிறார். பிறர் மதம் நோகும் செயல்களையும், பிறர் மனம் நோகும் செயல்களையும் செய்வதுதான் பாரதீய ஜனதா அரசின் செயல் திட்டமா? என்று சந்தேகம் கொள்ள நேரிடுகிறது. சார்ந்த முனைப்புகளும் திணிப்புகளும் தொடர்ந்தால், ஒருமித்த இந்திய தேசத்தின் ஒற்றுமையைக் குலைக்கும் நச்சாக அத்தகைய நடவடிக்கைகள் அமைந்துவிடும். எனவே, மதம் சார்ந்த நடவடிக்கைகளில் பாரதீய ஜனதா அரசு, தன் நிலைப்பாட்டை உடனடியாக‌ மாற்றிக்கொள்ள வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

7. எளிய மற்றும் நடுத்தர‌மக்களின் பயண உதவிக்கு தொடர் வண்டித் துறை மட்டுமே ஏதுவாக இருக்கும் நிலையில், சொகுசு வசதிகளை மேற்கொள்ளப் போவதாகவும் அதற்காக நூறு சதவிகித அந்நிய முதலீட்டைக் கொண்டு வரப்போவதாகவும் சொல்லும் மத்திய அரசின் செயல்பாடு கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. கடந்த ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலேயே பயணக் கட்டணத்தை உயர்த்தி அறிவித்த தொடர்வண்டித் துறை, அடுத்து வரப்போகும் பட்ஜெட்டிலும் பயணக்கட்டண உயர்வுக்கு அச்சாரமான வேலைகளைச் செய்துவருவது ஏழை, எளிய மக்களின் தலையில் இடியைப் போடுகிற செயல். அடுத்தடுத்து இத்தகைய நெருக்கடிகளைக் கொடுப்பதன் மூலமாக, தொடர் வண்டித் துறையைத் தனியார் வசம் ஒப்படைக்க பாரதீய ஜனதா அரசு முயல்வது அப்பட்டமாகி வருகிறது. எல்லாவற்றையும் தனியாரிடமே கொடுத்துவிட்டால், பின்னர் எதற்குத்தான் இந்த அரசு? என்ற கேள்வி எழுகிறது. ஓர் அரசு செய்ய முடியாததை, தனியார் முதலாளி ஒருவர் செய்கிறார் என்றால், அது ஆளும் அரசுக்கான அவமானமாகும். கல்வி, மருத்துவம், சாலை என அனைத்தையுமே தனியாரிடம் ஒப்படைக்கத் துடிக்கும் பாரதீய ஜனதா ஆட்சியின் நிர்வாகத்தை மக்கள் கூர்ந்து கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதனை உணர்ந்து தங்களின் தனியார்மய ஆர்வ நடவடிக்கைகளை பாரதீய ஜனதா அரசு இனியாவது மாற்றிக்கொள்ள வேண்டும்.

8. ஆயிரக்கணக்கான மக்களின் அச்சத்தையும் எதிர்ப்புப் போராட்டத்தையும் புறந்தள்ளி, கூடங்குளத்தில் அணு உலையைக் கொண்டுவந்த மத்திய அரசு, இப்போது மேலும் இரு அணு உலைகளை அங்கே நிறுவப்போவதாக அறிவித்திருப்பது அதிகாரத் திமிரையே காட்டுகிறது. மக்கள் எத்தகைய போராட்டங்களை நடத்தினாலும், அதையெல்லாம் கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் நினைத்ததைச் செய்யும் மனநிலையிலேயே மத்திய அரசு செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கூடங்குளம் அணு உலை செயல்பாட்டுக்கு வந்த பிறகும், மக்களுக்கு உரிய தற்காப்புப் பயிற்சிகளை வழங்காத அரசுத் தரப்பு, பேரிடர் ஆபத்துகள் வந்தால் யார் பொறுப்பேற்பார்கள் என்பதையும் அறிவிக்கவில்லை. அணு உலை செயல்பாட்டால் ஏற்கெனவே மக்கள் அனுதினமும் உயிர்நடுங்கிக் கொண்டிருக்கும் நிலையில், மேலும் இரு அணு உலைகள் திறக்கப்படும் என்கிற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். அனுதின மரண அவதியிலிருந்து கூடங்குளம் மக்களைக் காப்பாற்றவும், உரிய தற்காப்பு மற்றும் பாதுகாப்புப் பயிற்சிகளை வழங்கவும் அரசுத் தரப்பு உடனடியாக முன்வர வேண்டும்.

9. தனி ஈழம் மட்டுமே ஒவ்வொரு தமிழருக்குமான தாயக‌ விடுதலை. தமிழ்த் தேசியத்துக்கான தேச விடுதலையும் அதுவே. எனவே இலங்கையில் உடனடியாகப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ”ஒரே இலங்கைக்குள் ஒற்றை ஆட்சிக்குள் வாழ்கிறீர்களா… இல்லை, தனித் தமிழீழமாக மீள்கிறீர்களா?” எனக் கேட்டு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இதற்கு இந்தியப் பெருந்தேசம் முயற்சி எடுக்க  வேண்டும். சிங்கள அரசின் சிநேகித அரசாக இருக்கும் பாரதீய ஜனதா அரசு, பொது வாக்கெடுப்பு கோரிக்கையைப் புறந்தள்ளினால், சர்வதேச முயற்சியாக அதனை மாற்ற நாம் தமிழர் கட்சி எல்லாவித முனைவுகளையும் எடுக்கும். போர் நடந்த காலம் தொடங்கி முகாம்களில் தவிக்கும் இன்றைய வாழ்க்கை வரையிலான‌  ஈழத்தமிழர்களின் துயரங்களை சர்வதேச ஜனநாயகசக்திகளிடம் வெளிச்சமிட்டுக்காட்டி, பொது வாக்கெடுப்பைச் சாத்தியப்படுத்த அத்தனை விதமான அரசியல் முயற்சிகளையும் நாம் தமிழர் கட்சி நிச்சயம் மேற்கொள்ளும்.

10. மண்ணை இழந்து வீட்டை இழந்து நாட்டை இழந்து உயிரையாவது காத்துக்கொள்ள தாயக தமிழகத்திற்கு ஓடி வந்து தஞ்சம் புகுந்திருக்கிற எமது தொப்புள்க்கொடி சொந்த்கங்களான ஈழத்தமிழ் உறவுகளை சிறப்பு முகாம் என்ற பெயரில் வதை முகாம்களில் அடைத்துவைத்திருப்பது மாபெரும் கொடுமையாக நாம் தமிழர் கட்சி கருதுகிறது. மேற்கண்ட சிறப்பு முகாம்களை உடனடியாக மூடி அடைபட்டுக்கிடக்கின்ற ஈழத்தமிழ் உறவுகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.மேலும் அவர்கள் மேல் பதிவு செய்யபட்டிருக்கிற அனைத்து வழக்குகளையும் உடனடியாக ரத்து செய்யவும் இப்போதுகுழு வாயிலாக மத்தி மாநில அரசுகளை நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

11. கடந்தகால‌ காங்கிரஸ் அரசுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத வகையில், ஈழப் பிரச்னையில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளையே பாரதீய ஜனதா அரசு பதவியேற்ற நாள் தொடங்கி தொடர்ந்து செய்து வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சேயை இனப்படுகொலையாளனாக அறிவிக்கக் கோரி தமிழர்கள் மட்டும் அல்லாது உலகெங்கிலும் போராட்டங்களும் சட்ட முயற்சிகளும் நடந்துவரும் நிலையில், அதிபர் தேர்தலில் ராஜபக்சே வெற்றி பெற பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருப்பது ஒட்டுமொத்தத் தமிழ் மக்களின் முகத்திலும் பூசப்பட்ட கரியாகவே கருதப்படும். இதற்கிடையில், தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதும், கொடூரமாகத் தாக்கப்படுவதும் ஆட்சி மாறினாலும் காட்சி மாறாத அவலமாகவே தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், தமிழக மீனவர்கள் ஐவரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றியதுபோல் சிங்கள அரசுடன் சிநேகம் காட்டி நாடகமாடியது பாரதீய ஜனதா அரசு.  வரும்சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் காலூன்ற பாரதீய ஜனதா கட்சி வகுக்கின்ற இந்த நயவஞ்சக‌த் திட்டத்தை தமிழக மக்கள் அறியத் தவறவில்லை. கடந்த காலத் தேர்தல்களில் காங்கிரஸைக் கருவறுத்தது போலவே, ஈழம் மற்றும் மீனவர் பிரச்னையில் நாடகமாடும் பாரதீய ஜனதா கட்சியையும் தமிழ்நாட்டில் நுழைய முடியாத அளவுக்கு நாம் தமிழர் கட்சி துரத்தி அடிக்கும். தமிழன் திருப்பி அடித்தால் எப்படி வலிக்கும் என்பதை காங்கிரஸ் உணர்ந்தது போலவே வரும் சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியும் நிச்சயம் உணரும்.

12. எவ்வளவு நீண்ட நெடிய பயணமும் ஒரு காலடி தடத்தில்தான் தொடங்குகிறது. அந்த வகையில் மாற்று அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவைக்கும் கட்டாயத்துக்கும் நாம் ஆளாகி இருக்கிறோம். தேசியத்துக்கு தேசியமோ, திராவிடத்துக்குத் திராவிடமோ நிச்சயம் மாற்றாகாது. ”எதிர்வரும்  2016… படைப்போம் புதிய அரசியல் வரலாறு” என்கிற முழக்கத்துடன் வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமிறங்க முடிவெடுத்திருக்கிறது. எந்த அரசியல் கட்சியோடும் கூட்டில்லாது எமது மக்களோடு சேர்ந்து எமது மக்களுக்காக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும், மற்றும்  புதுச்சேரி, காரைக்காலிலும் நாம் தமிழர் கட்சித் தனித்துப் போட்டியிட முடிவெடுத்திருப்பதை மிக மகிழ்வோடு இந்தப் பொதுக்குழுவில் அறிவிக்கிறது. தமிழ்த் தேசிய இன அரசியலை மையப்படுத்தி எத்தனையோ கட்சிகளும் இயக்கங்களும் இத்தனை வருட காலங்களில் தொடங்கி நடத்தப்பட்டிருந்தாலும், 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போகும் முதல் தமிழ்த் தேசிய இன  கட்சியாக நம்முடைய நாம் தமிழர் கட்சி தனிப்பெருமை கொள்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் என அனைத்து இடங்களிலும் நம் கட்சி வேட்பாளர்கள் தமிழ்த் தேசிய இன  அரசியலுக்கான விதையாகக் களம் காணுவார்கள் என்பதைப் பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சி அறிவிக்கிறது.

13.  எதிர்வரும் 2015 மே 18 அன்று தமிழர் இன எழுச்சி அரசியல் மாநாட்டை நாம் தமிழர் கட்சி நடத்த இருக்கிறது. இதுகாலம் வரை சாதிக்காக, மதத்துக்காக, இந்திய தேசிய அரசியலுக்காக, திராவிட அரசியலுக்காகத் திரண்ட தமிழன், முதன் முறையாகத் தமிழுக்காகவும் தமிழர்க்காகவும் திரள வேண்டிய இன எழுச்சி அரசியல் மாநாடு இது. தமிழ்த் தேசிய எழுச்சியை உலகுக்கு உணர்த்தும் நாளாக – தமிழர் மறுமலர்ச்சித் திருவிழாவின் பந்தல்காலாக நம்முடைய மாநாடு அமைய வேண்டும். நம் கட்சியின் பொறுப்பாளர்களும் தொண்டர்களும் தங்களின் உற்றார், உறவினர், நண்பர்கள், குடும்பத்தினர் என அனைவரையுமே நம் இன எழுச்சி மாநாட்டுக்கு அழைத்து வர வேண்டும்.  இல்லத்தின் நிகழ்வைப்போல், கோயில் திருவிழாவைப்போல் நம் இனத்தின் திருவிழாவுக்கு எல்லோரும் கூட வேண்டும். மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மொத்தமாக நான்கு மணி நேரம் நடக்க இருக்கும் நம் இன எழுச்சி அரசியல் மாநாட்டில் தமிழ்த் தேசியப் பிள்ளைகள் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். இனத்துக்காக நான்கு மணி நேரத்தை ஒதுக்க ஒவ்வொரு தமிழ்ப் பிள்ளைகளும் தயாராக வேண்டும். 2015 மே 18-ம் தேதியை நாட்காட்டியில் இன எழுச்சி நாளாகக் குறித்து வைத்துக்கொண்டு, நாம் அனைவரும் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தத் திட்டமிட வேண்டும். இது, நாம் தமிழர் கட்சியினருக்கான அறிவிப்போ அறைகூவலோ இல்லை. இனத்தின் எழுச்சிக்கு படை திரட்டி வரச்சொல்லும் உத்தரவு.

14. கட்சிக் கட்டமைப்பு, இன எழுச்சி அரசியல் மாநாடு, சட்டமன்றத் தேர்தல் என 2016 வரையிலான நம் செயல் திட்டங்களுக்குப்’புலிப்பாய்ச்சல்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. ‘புலிப்பாய்ச்சல்’ என்பது,  கூட வருவோரைக் கூட்டிக்கொண்டு ஓடுவது, விலகி நின்றால் விட்டுவிட்டு செல்வது , தடையாக இடையூறாக எவர் வந்தாலும் அவர்களை ஏறி அடித்துவிட்டு செல்வது. பெரிய அளவிலான ஊடகச் சக்திகளோ, விளம்பர வசதிகளோ, பண இருப்புகளோ இல்லாமல் உண்மையும் நேர்மையுமாக மட்டுமே இயங்க இருக்கும் நாம் அனைவரும், நமது உயிருக்கினிய மேதகு பிரபாகரன் பிள்ளைகள் என்பதை 2016-ல் நிச்சயம் நிரூபிக்க வேண்டும். தமிழ்த் தேசிய அரசியலின் முதல் தளிராக குறிப்பிடத்தக்க வெற்றியையும், சொல்லிச் சிலிர்க்கத்தக்க பேராதரவையும் நம் கட்சி நிச்சயம் வரும் தேர்தலில் பெறும். அத்தகைய புரட்சிக்கான புறப்பாடாக மக்களைத் திரட்டவும், ஒருங்கிணைக்கவும், மாற்றத்தைத் தூண்டவும் நாம் ஒவ்வொருவரும் தயாராக வேண்டும்.

15. கடந்த கால காங்கிரஸ் அரசாக இருந்தாலும் சரி… தற்போதைய பாரதீய ஜனதா அரசாக இருந்தாலும் சரி… இரு அரசுத் தரப்புகளுமே காலங்காலமாகத் தமிழர்களை அவமானப்படுத்துவதையே முதன்மை இலக்காக வைத்துக்கொண்டு, ராமலீலா கொண்டாடி வருகின்றன‌. எமது மூதாதைப் பாட்டன் ராவணனைத் தவறாகச் சித்தரித்து அவர் உருவம் மீது பாய்ச்சுவது வெறும் அம்பு மட்டும் அல்ல… அது ஒவ்வொரு தமிழனையும் வலிய இழுக்கும் வம்பு. ராமலீலா என்கிற பெயரில் எமது பாட்டன் ராவணன் மீது அம்பெய்து அவமானப்படுத்தும் செயலை இனியும் செய்யாதீர்கள் என்பதை மிகுந்த நனிநாகரிகத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறோம். அதையும் மீறி ராமலீலா தொடர்ந்தால், எங்கள் பாட்டன் ராவணனின் புகழ்பாடும் ராவண பெருவிழா கொண்டாடுவோம். தமிழ்நாட்டின் அத்தனைத் தெருக்களிலும் எம் பாட்டனினின் பெருமையைக் கொண்டாடும் விதத்தில் இந்த விழா நடக்கும்.

16. பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது என்பதை நடுகல் மரபினராகிய நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். இயற்கை வழிபாட்டை நாங்கள் ஏற்கிறோம். பகவத் கீதையையோ, பைபிளையோ, குரானையோ எங்களுக்கான வேதமாக நாங்கள் ஏற்க வில்லை. உலகப் பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்; எங்கள் வழிபாடு இயற்கை; எங்கள் தெய்வங்கள் முன்னோர்கள். பெரும்புகழ் இறையோன் முருகன், வாழ்வியல் நெறிகட்டி வள்ளுவப் பெருந்தகை, தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம்  கண்ணகி,வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டும், எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன்,அருண்மொழிச்சோழன்,அரசேந்திர சோழன்,பூலித்தேவன்,தீரன் சின்னமலை,வேலு நாச்சியார்,பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தியும் வரும் தைப்பூச நாளில் புதிய எழுச்சிக்கு நாம் தயாராகப் போகிறோம். ஆம். வரும் தைப்பூச நாளில் தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்கவும் வீரத்தமிழர் முன்னணியைத் தொடங்க இருக்கிறோம். வலிமைமிகுந்த தம்பிகளின் மார்தட்டலில் எழுச்சியோடு தொடங்கப்பட இருக்கும் வீரத்தமிழர் முன்னணி தமிழ்ப் பண்பாட்டுக் காவல் அரணாகத் தீரத்தோடு செயல்படும்.