படமாகும் ரஜினி வசனம் ‘ கெட்ட பையன் சார் இவன் ‘

ikps111-பிரபலமான பாடல்களின் பல பல்லவிகள் பட்த் தலைப்பாகியுள்ளன. பிரபல நாவல்களின் தலைப்புகள் படப் பெயராகியுள்ளன. அதே போல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய வசனங்களும் படத் தலைப்பாகி வருகின்றன. ‘இது எப்படி இருக்கு’, ‘என் வழி தனி வழி’ , ‘கதம் கதம்’  ,’ போடா ஆண்டவனே நம்ம பக்கம் ‘ தலைப்புகளைத் தொடர்ந்து ‘முள்ளும் மலரும்’ படத்தில் சூப்பர் ஸ்டார் பேசிய  ‘கெட்ட பையன் சார் இந்தக் காளி ‘ வசனமும் ‘ கெட்ட பையன் சார் இவன் ‘ என்கிற படப் பெயராகியுள்ளது.

‘சதுரங்க வேட்டை’ திரைப்படத்தின் மூலம்  காந்தி பாபுவாக நம் மனதில் இடம் பிடித்த வித்தியாச நடிகர் நட்டிதான் இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார்.

படத்தை இயக்குபவர்  அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர் ராஜன். யாரிந்த தீபக் சுந்தர் ராஜன்?.

‘ பயணங்கள் முடிவதில்லை’ , ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘மெல்லத் திறந்தது கதவு’,  ‘ராஜாதி ராஜா’ போன்ற  வெள்ளி விழா கண்ட பல வெற்றிப் படங்களை இயக்கியவரும்  நடிகருமான ஆர். சுந்தர்ராஜனின்  மகன் தான் இந்தத் தீபக்.

அப்பா இயக்குநர்  என்பதால்  எல்லாம் தனக்குத்தெரியும் என மகன் அப்படியே திரைப்படம் இயக்க வந்து விடவில்லை. முறையாக இயக்குநர் ஏ. எல்..விஜய் யிடம்   ‘தாண்டவம்  ‘,   ‘தலைவா  ‘,   ‘சைவம்  ‘ போன்ற படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றி சினிமா பற்றிய பாடங்கள் படித்து விட்டுத்தான் இப்போது “ கெட்ட பையன் சார் இவன் “ திரைப்படத்தின் மூலமாக இயக்குநராகியுள்ளார்.

இதே படத்தில் ஏ.எச்..காஷிஃப் என்பவர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவரும் ஒரு வாரிசுக் கலைஞர்தான்.  இசைப்புயல் ஏ.ஆர் .ரஹ்மானின்  தங்கை மகன்தான் இந்த காஷிஃப்..

கடந்த காதலர் தினத்தன்று வெளியான ” போ போ என் “ என்கிற ஒற்றைப் பாடல் மூலம் எட்டுத் திக்குகளையும் எட்டிப் பார்க்க வைத்தவர்தான்  இந்த  காஷிஃப்.

ஒளிப்பதிவு கெளதம் ஜார்ஜ். இவர் பி.சி.ஸ்ரீராமின்  மாணவர் .பி.சி.ஸ்ரீராமிடம் ‘ஷமிதாப்’,   ‘ஐ  ‘ ,  ‘ ஓ காதல் கண்மணி ‘  போன்ற படங்களில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ளார்.

செந்தில் சிவகுமார் படத்தொகுப்பாளாராகப் பொறுப்பேற்றுள்ளார்.   இவர் புகழ் பெற்ற படத்தொகுப்பாளர் , இயக்குநர் பி. லெனினின்  மாணவர்.இந்தப் படத்தின் மூலமாகப் படத்தொகுப்பாளராக அறிமுகமாகிறார்.
.

இத்தனைப் புது முகங்களை அறிமுகப்படுத்துகிற ‘6 ஃபேஸ் ஸ்டுடியோஸ் ‘ (6 FACE STUDIOS) தயாரிப்பு நிறுவனத்திற்கும், இதுதான்  முதல் படம்.

திரைத் துறையில் நவீன் பிரபாகரன், சுரேஷ் கண்ணன், வெங்கடேஷ்  , ஆக்டோஸ்பைடர் எஸ்.துரை என நண்பர்கள் இணைந்து  விநியோகஸ்தர்களாகத்  தங்களது முத்திரையைப் பதித்துள்ள இவர்கள் ,இப்போது  தயாரிப்பாளர்களாகக்  களமிறங்கியுள்ளனர்.

திறமைசாலிகள் பலரின் வாரிசுகளும் புகழ் பெற்ற கலைஞர்களின் உதவியாளர்களும் ஆர்வமுள்ள இளைஞர்க ளும்  ஒன்றிணைந்துள்ள இப்படத்தின் மீது இப்போதே நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்  கூடி வருவதை உணர முடிகிறது.

இப்படத்தின் தலைப்பு போஸ்டரை கலைப்புலி தாணு வெளியிட்டார்.