’பட்டாஸ்’ விமர்சனம்

தனுஷ் அப்பா மகன் வேடத்தில் நடித்திருக்கும் படம். ‘எதிர்நீச்சல்’, ‘காக்கிச்சட்டை’, ‘கொடி’ என  பொழுதுபோக்குப் படங்கள் கொடுத்த துரை செந்தில்குமார் இந்த முறை, எளிமையான ஒரு  கதையோடு வந்திருக்கிறார்

அப்பா திரவிய பெருமாள் ’அடிமுறை ’என்கிற தமிழரின் பழைய வீரக்கலையின் நுட்பங்களைத் தனது குருநாதர் நாசரிடம் கற்றுத் தேறுகிறார். ஆனால் அந்தக் குருநாதர் மகனுக்கோ இந்தக் கலை சுத்தமாக மண்டையில் ஏறவில்லை .தன்னை விட்டுவிட்டு தன் அப்பா அவரது மாணவன் தனுஷைப் பாராட்டுவதும் உயர்த்திப்பிடித்துப் பேசுவதும் பிடிக்காத நாசரின் மகன்,மனரீதியாக பாதிப்புக்குள்ளாகிறார். இதனால் அவருக்குள் தனுஷின் மீது பொறாமையும் பகை உணர்ச்சியும் வளர்கின்றன. விளைவு  வில்லனாக மாறுகிறார்.

அவமானத்துடன் வெளிநாடு செல்லும் அவர்,அங்கே  பாக்சிங் குத்துச்சண்டை விளையாட்டை ஆர்வமுடன்  கற்றுக் கொண்டு நம் நாட்டில் அதைப் பரப்பலாம் வியாபாரம் செய்யலாம் என்று வருகிறார் .ஆனால் இங்கோ அடிமுறைகளை கற்பிக்கும் பள்ளி விரிவாக்கப்பட்டுப் பிரபலமாய் இருக்கிறது .அந்தப் பள்ளியைத் தன் வியாபாரத்திற்கு மாற்றிப் பயன்படுத்த நினைக்கிறார் அதற்குத் தனுஷ் குறுக்கே நிற்கிறார் . விளைவு? தனுஷுக்கு  மட்டுமல்ல அவரது குடும்பத்திற்கே பாதகம்  செய்கிறார் .அதில் அப்பா தனுஷ் இறக்கிறார்.  தப்பிப் பிழைக்கும் மகன் தனுஷ் எப்படி வில்லனைப் பழிவாங்குகிறார் என்பதுதான் கதை .இது சாதாரண ஹீரோ வில்லன் பழிவாங்கும் கதை போல் தோன்றினாலும் இதன் பின்னே ’அடி முறை’ என்கிற வீரக்கலையை அழகாக பயன்படுத்தி படத்தை சுவாரஸ்யமாக்கி இருக்கிறார் இயக்குநர் துரை செந்தில்குமார்.

.சென்னையில் தன் வளர்ப்புத் தந்தை முனீஷ்காந்த் ராமதாஸ் மற்றும் நண்பன் ’கலக்கப் போவது யாரு’ சதீஷ் இருவருடனும் சேர்ந்து திருட்டுத் தொழில் செய்து வாழ்கிறார் தனுஷ். ஒரு கொலை குற்றத்துக்காக சிறையில் ஆயுள் தண்டனையை முடித்துவிட்டு விடுதலையாகும் சினேகா, தனுஷைக் கண்டு அதிர்ச்சி. மகிழ்ச்சி.இப்படி. இப்படி, வழக்கமான எளிதான கதையில் தொடங்கும் கதை நம்மை ஈர்க்கிறது .திருடன் ‘பட்டாஸ்’ தனுஷின் தந்தைதான் திரவிய பெருமாள்  இதற்கு முன் கதை விரிகிறது.

  அப்பா, மகன் கதாபாத்திரங்களில் தனுஷ் அம்சமாக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக அப்பா  திரவிய பெருமாள் பாத்திரத்தில் மிகவும் பக்குவமான, உறுதியான, வீரன் என  சிறப்பான நடிப்பை தந்திருக்கிறார். வெகு நாட்களுக்குப் பிறகு சினேகாவிற்கு சரியான பாத்திரம், வீரமும் உறுதியுமான தாய். கன்னியாகுமரியாகவே வாழ்ந்து   சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த இருவரின் பாத்திரங்களும் நடிப்பும் படத்திற்கு பெரும் பலம். ‘அடிமுறை’ என்ற ஆதித்தமிழ் தற்காப்புக் கலை குறித்த காட்சிகளும் சண்டைக்காட்சிகளும்  சபாஷ் போட வைக்கின்றன. முக்கிய பாத்திரங்களில் நடித்தவர்களின் நடிப்பும், அழுத்தமான ஃப்ளாஷ்பேக்கும்தான். தனுஷ், ‘பட்டாஸ்’ பாத்திரத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த துறுதுறுப்பாக இருக்கிறார்.  

 படத்தின் ஆரம்பப் பகுதிகளில் வரும் தனுஷ் – சதீஷ் – முனீஷ்காந்த் நகைச்சுவை ஆங்காங்கே மட்டுமே சிரிக்க வைக்கின்றன. மெஹரீன் பிர்சாதா, நடிப்பில் ஓகே . வில்லன் நவீன் சந்திராவின் நடிப்பில்  பலமில்லை. விவேக் – மெர்வின் இசையில் ‘அடிமுறை’ பின்னணி இசை . சிறப்பு. ‘சிவ தாண்டவ ஸ்தோத்திர’த்தின் மெட்டை பயன்படுத்தி  பின்னணி இசைக்கு கைதட்டல் பெற்றிருக்கிறா. ஓம் ப்ரகாஷின் ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.

  ஒரு வணிகரீதியிலான கமர்ஷியல் படத்தில் நமது பழந்தமிழர் கலையைப் பற்றி அழகாகக் காட்டி கதை சுவாரஸ்யத்துக்கு பயன்படுத்தி உணர்வுகளில் தூண்டலை ஏற்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தி வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார் இயக்குநர்.
பட்டாஸ்  நமத்துப் போகவில்லை..வெடிக்கும்.