‘பாகுபலி -2 ‘ விமர்சனம்

bahu--2கட்டப்பா பாகுபலியைக் கொன்றது ஏன் என்பதற்கு விடையே இரண்டாம் பாகம் படம்.

முதல் பாகத்தில் சிவகாமியால் அரசராக பாகுபலி அறிவிக்கப்பட்டான். இரண்டாம் பாகத்தில் அரசராக பல்வால்தேவனுக்கு முடி சூட்டப்படுகிறது. அதன் பிறகு நடக்கும் பகைமையே  பாகுபலியின் கொலைக்கு காரணமாகிறது.

பாகுபலியின் மரணத்திற்கு  யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு நபர் முக்கிய காரணமாகிறார். அவர் யார்?, எதற்காக அவர் பாகுபலியைக் கொலை செய்கிறார்?, என்ற கதைக்கு இயக்குநர் ராஜமௌலி அமைத்த திரைக்கதை, கிராபிக்ஸ் நிறைந்த காட்சிகள் நம்மை படத்துககுள்  பதைபதைப்புடன் அழைத்துச் செல்கின்றன.

முதல் பாகத்தில்  இருந்த பிரம்மாண்ட காட்சிகள் கண்களை மிரட்டின.இதில் கதையும் காட்சிகளும் கவர்கின்றன., போர்களின் வியூகங்களும் இந்த பாகத்தில் இருந்தாலும், கதாபாத்திரங்களின் நடிப்பு காட்சிகளின் பிரம்மாண்டத்தை தாண்டி ஈடு செய்கின்றன..

திரைக்கதை விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் கதாபாத்திரங்களாக அறிமுகமான நடிகர்கள், இந்த பாகத்தில் தங்களது நடிப்பை வெளிக்காட்ட இயக்குநர் ஏராளமான வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.பிரபாஸ் – அனுஷ்கா இடையிலான காதல், படத்திற்கான தேவையாக மட்டும் இன்றி, கதைக்கான தேவையாகவும் இருக்கும் விதத்தில் உள்ளன.

முதல் பாகத்தில் சாதாரணமாக தெரிந்த நாசர், இந்த பாகத்தில் ஆரம்பத்திலேயே ரசிகர்களின் கவனமெ  பெற்றுவிடுகிறார். அனுஷ்கா சிவகாமியைப்போல  பெயர் வாங்கும் அளவுக்கு நடித்திருக்கிறார்.

ஆரம்பம் முதல் முடியும் வரை அனைத்து காட்சியும் பரபர என்று நகர்கிறது. காதல் காட்சியில் கூட இந்த பரபரப்பு இருக்கும்படி பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் ராஜமவுலி.

அனைத்துக் காட்சியிலும் கிராபிக்ஸ் இருப்பதும், எதைக் காட்டினாலும் ரசிகர்கள் பிரமிப்படைய வேண்டும் என்ற எண்ணத்தில் காட்சிகளை வடிவமைத்திருப்பதும், சில இடங்களில் மாயாஜால படத்தை பார்ப்பது போல உணர்வை தருகிறது. இருந்தாலும், படத்தின் பலமாக இருக்கும் இயக்குநர் ராஜமௌவுலியின் கற்பனைக்கு, உயிர் கொடுக்கும் விதத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன.

முதல் பாகத்தில் பாடல் மற்றும் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்த இசையமைப்பாளர் மரகதமணி, இதில் பின்னணி இசைக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். படத்தின் நீளம் இரண்டரை மணி நேரத்தை தாண்டினாலும், படத்தில் எந்த இடத்திலும் ரசிகர்களை சோர்வடையாத வகையில் எடிட்டரின் கைவண்ணம் அமைந்திருக்கிறது. சண்டைக்காட்சிகள் அதிகமாக இருந்தாலும், அவை அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது.

பாடலாசிரியராக கார்க்கி ஜொலிக்கவில்லை என்றாலும், வசனகர்த்தாவாக பல இடங்களில் ஜொலிக்கிறார்.

bahubali2படைத் தளபதியின் விரல்களை வெட்டியதால் அனுஷ்காவை கைது செய்து அரசர் விசாரணை நடத்திக் கொண்டிருக்க, அங்கு வரும்  பிரபாஸ், பெண்களை தொட்டவனின் விரலை வெட்ட கூடாது, அவன் தலையை வெட்ட வேண்டும், என்று கூறி, தனது கத்தியை எடுத்து அவனது தலையை வெட்டும் காட்சியில், திரைஅரங்கமே அதிரும் .

இப்படி படம் முழுவதுமே காட்சிகள், வசனங்கள் மூலமாக கைதட்டல் பெறும் ராஜமௌவுலி, கதாபாத்திரங்களும், அவர்களைப் பற்றியும் எந்தவித குழப்பமும் இன்றி விவரித்திருப்பதுடன், இறுதியில் படம் பார்ப்பவர்களுக்கு எந்தவித குழப்பமும் ஏற்படாமல் படத்தை முடிக்கிறார்.

பாடல் காட்சிகளில் மட்டுமே பிரம்மாண்டத்தை காட்டி வந்த இந்திய சினிமாவுக்கு, கதையில் பிரம்மாண்டத்தை கையாளும் வழியை காட்டியுள்ள இயக்குநர் ராஜமவுலி ‘பாகுபலி’ மூலம் இந்திய சினிமாவே தன்னை திரும்பி பார்க்கச் செய்தார். ஆனால், ‘பாகுபலி-2’ மூலம் இந்திய சினிமாவே அவரை வியந்து  பார்க்கும் என்பது நிச்சயம்.இதற்குமேல் என்ன உள்ளது என எல்லாரையும் பேச வைத்துவிட்டார்.

100% இது ஒரு தொழில் நுட்பக்கலைஞரின் படமாக உயர்ந்து நிற்கிறது.

பொதுவாக ஹாலிவுட் படங்களில் பிரமாண்டம் இருக்கும்.ஆனால் மனதில் ஒட்டாது.இது இந்தியத்தன்மையோடு நம் கலாசாசாரத்தோடு இருப்பதால் நம்பகத்தோடு உள்ளது.ரசிக்கவும் முடிகிறது.வெல்டன் ராஜமௌலி!