பாலசந்தருக்கு மயிலாப்பூரில் சிலை வைக்க அரசுக்கு இயக்குநர் சங்கம் கோரிக்கை!

kb-pmதமிழ் திரைப்பட இயக்குனர் சங்கம் சார்பில் மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தரின் உருவப்பட திறப்பு நிகழ்ச்சி வடபழனி ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் இன்று காலை நடந்தது.

இயக்குநர் பாரதிராஜா இதில் பங்கேற்று பாலசந்தரின் உருவப் படத்தை திறந்து வைத்தார்.

பிறகு மேடையில் கண்கலங்கிய படி பேசிய அவர்..”கே.பாலச்சந்தர் அவர்கள் தான் எனக்கு பாதி பலம், மீதி பலம் இங்கு இருக்கின்ற இயக்குநர்கள் நீங்கள். நான் இப்போது எனது பாதி பலத்தை இழந்து தவிக்கிறேன். நீர்க்குமிழி முதல் பொய் படம் வரை சிறந்த படைப்புகளை வழங்கி உள்ளார்.முதல்  கடைசிப் படங்கள் பெயர்கள்  மூலம்  கூட வாழ்க்கையின் நிலையாமையை  செய்தியாகச் கூறியிருக்கிறார் அவரது புகழ் என்றும் மறையாது” என்று பேசினார்.

கலைபுலி எஸ்.தாணு  கே.பாலசந்தரிடம் பல வருடங்களாக உதவியாளராக பணியாற்றிய மோகன் என்பவருக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

அதன் பின்  இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசிய போது…

”வளசரவாக்கத்தில் உள்ள தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் தற்பொழுது படைப்பகம் என்ற பெயரில் இயங்கி வருகிறது இனிமேல் அது கே.பாலசந்தர் இல்லம் என்ற பெயர் மாற்றத்துடன் இயங்கும்.”என்றார்.

பின்னர் இயக்குநர் சங்கத்தின் தீர்மானங்களை ஆர்.கே.செல்வமணி வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:–

வளசரவாக்கத்தில் உள்ள இயக்குநர் சங்க அலுவலகத்துக்கு  ‘பாலச்சந்தர் இல்லம் ‘என பெயர் சூட்டப்படும்.பாலச்சந்தர் திரைப்பட விழா சென்னையில் ஒரு வாரம் கொண்டாடப்படும். பாலச்சந்தர் இயக்கிய முக்கிய படங்களை தேர்வு செய்து ஒரு வாரம் சென்னை தியேட்டர்களில் திரையிடப்படும்.

மயிலாப்பூர் லஸ் கார்னரில் பாலசந்தருக்கு சிலை நிறுவவும் அவர் வாழ்ந்த வீட்டின் அருகில் உள்ள தெருவுக்கு பாலசந்தர் பெயர் சூட்டவும் அரசை கேட்டுக் கொள்கிறோம்.

பிப்ரவரி முதல் வாரம் சென்னையில் பாலசந்தர் நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும் இதில் பாலசந்தர் அறிமுகப்படுத்திய நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்பர். பாலசந்தர் பெயரில் அரசு விருது வழங்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் இயக்குநர்கள் விக்ரமன், எஸ்.ஏ.சந்திரசேகர், வி.சேகர், ஆர்.கண்ணன், எஸ்.பி.முத்துராமன், பாலாஜி சக்திவேல்,பேரரசு, பார்த்திபன், ரவி மரியா, மனோபாலா, வசந்த், ஆர்.வி. உதயகுமார், ஆர்.சுந்தரராஜன், பாலசேகரன்,தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, டி.சிவா புஷ்பா கந்தசாமி,பிரமிட் நடராஜன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

kb-poto