பிரபுதேவா தொடங்கி வைக்கும் “சென்னையில் திருவையாறு” இசைவிழா!

prabudeva2சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக லஷ்மன் ஸ்ருதியின் “சென்னையில் திருவையாறு”விழா திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் டிசம்பர் 18 முதல் 25வரை   சென்னை காமராஜர் அரங்கத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலை நாட்டுவதுதான் இந்த விழாவின் நோக்கம். இந்த ஆண்டு இசைவிழாவிற்கு வயது பதினொன்று.

இவ்வினிய விழா இன்று 18 ஆம் தேதி) பிற்பகல் 12.05 மணிக்கு “வியாசை கோதண்டராமன்” அவர்களின் நாதஸ்வர  இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

மதியம் 2.50 மணிக்கு கர்நாடக சங்கீத கலைஞர்களில் மூத்தவரும் பல்வேறு சிறப்புகளும் பெற்றவருமான மரியாதைக்குரிய “பத்மபூஷண்” பி.எஸ். நாராயணசாமி”அவர்களின் தலைமையில் ஒரே மேடையில் 500 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ”பஞ்சரத்ன கீர்த்தனைகளை” ஒன்றாகச் சேர்ந்து பாடுகின்றனர்.
மாலை 5.00 மணிக்கு ”சென்னையில் திருவையாறு”சங்கீத வைபவத்தின் துவக்க விழாவினை நடனப்புயல் பிரபுதேவா கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கின்றார்.

இசை ஆழ்வார் விருது!

இந்த விழாவில் வயலின் மேஸ்ட்ரோ, இசைமாமேதை பத்மஸ்ரீ ”அ.கன்னியாகுமரி”அவர்களின் வாழ்நாள் இசைச்சேவையை பாராட்டும் முகமாக அவருக்கு” இசைப் பேரரசி பத்மபூஷன் பி.சுசீலா அவர்கள் இசை ஆழ்வார் பட்டமும் தங்கப்பதக்கமும் வழங்கி கெளரவம் செய்ய உள்ளார்.

”எம்.எஸ்.சுப்புலட்சுமி”அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்பு நிகழ்ச்சி!

அதனை தொடர்ந்து மாலை 5.15 மணிக்கு கர்நாடக இசைஉலகின் பேரரசி பாரதரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும் விதமாக டாக்டர் சுதாராஜா வழங்கும் நூறு கலைஞர்கள் பங்கேற்கும் கர்நாடிக் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்வில் கர்நாடிகா சசிகிரண் அவர்களுடைய இயக்கத்தில் காயத்ரி வெங்கட்ராகவன், எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களின் கொள்ளுப்பேத்தி ஐஸ்வர்யா, கீபோர்டு சத்யநாராயணன் ஆகியோர் சிறப்பு பங்கேற்க நடனக் கலைஞர் ஸ்மிதா பக்த மீராவாக நடனமாடும் மாபெரும் இசைவிருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரவு 7.00 மணிக்கு பியானோ இசைக்கலைஞர் அனில் சீனிவாசன், பாடகர்கள் நரேஷ் ஐயர், சைந்தவி ஜி.வி.பிரகாஷ், புல்லாங்குழல் கலைஞர் பிரவிண் கோட்கிண்டி ஆகியோர் பங்கேற்கும் சிறப்பு இந்தியப் பாரம்பரிய இசை நிகழ்ச்சியோடு முதல்நாள் நிறைவு பெறும்.

உணவுத் திருவிழா 2015!

’சென்னையில் திருவையாறு’ இசைவிழாவுடன் இணைந்த உணவுத் திருவிழா இன்று கோலாகலமாக துவக்கப்படுகிறது.

பிரபல திரைப்பட இயக்குநர் கே.பாக்யராஜ் உணவுத்திருவிழாவில் 30 அடி உயர, முருங்கைக்காய்களால் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட, உலக பிரசித்திபெற்ற ஈஃபில் கோபுரத்தை 18.12.2015 இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணிக்கு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார்.

உணவுத்திருவிழாவின் சிறப்பு அம்சமாக இந்த ஆண்டு வீடுகளில் மாடித் தோட்டம் அமைக்க விரும்புபவர்களுக்கு உதவுவதற்காக சிறப்பு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முப்பதாயிரம் சதுர அடியில் அமைக்கப்படும் பிரமாண்டமான அரங்கத்திற்குள் தமிழகத்தின் முன்னணி உணவகங்களின் நாற்பதுக்கும் மேற்பட்ட உணவு அரங்கங்களும், 300 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய வகையிலான வசதிகளும் செய்யப்படுகின்றன.

உணவுத்திருவிழாவின் ஒரு பகுதியில் தனி மேடை அமைக்கப்பட்டு, தமிழகத்தின் தலைசிறந்த சமையல்கலை வல்லுநர்களின் அனுபவங்கள், பிரபல சமையல் கலைஞர்கள் மற்றும் உணவுக் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் செயல் விளக்க நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. சமையல்கலை மற்றும் அறிவுத் திறன் போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். சிறுவர்களுக்கான பொழுது போக்கு அம்சங்கள் மற்றும் விளையாடுவதற்கான வசதிகள், குழந்தைகளோடு வரும் ரசிகர்களையும் திருப்திப்படுத்த சிறுவர்களைக் கவரும் உணவு வகைகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பனிக்கட்டிகளில் வித்தியாசமான கலைப்படைப்புகளையும்,  சிற்பங்களையும் செதுக்கும் அரங்குகள், நிபுணர்கள் வழங்கும் சமையல் குறிப்புகள் என்று பல வித்தியாசமான ஏற்பாடுகள்  இந்த உணவுத் திருவிழாவின் சிறப்பம்சங்களாக அணிவகுக்கின்றன.

இந்த வகையில் பிரபல உணவகங்கள் தங்கள் சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் தரமான உணவு வகைகளை, ஒரே இடத்தில் நீங்கள் விரும்பும் வகையில் வழங்குகின்ற பாங்கு இசைப்பிரியர்களை ஈர்த்து திக்கு முக்காட வைக்க இருக்கிறது. தானிய வகை உணவுகளும், காய்கறி உணவுகளும், கீரை மற்றும் பழவகை உணவுகளும்  இங்கே சுடச்சுட மணக்க இருக்கின்றன. இவ்வாறாக பல்வேறு சிறப்பம்சங்களோடு உணவுத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து ஐந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கின்றது.