பிலிம் நியூஸ் ஆனந்தன்: சில நினைவலைகள்!

நேற்றுதான் நடந்தது போலிருக்கிறது பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள்  மறைந்து ஓராண்டாகிவிட்டது.

ஒரு திரைத்தகவல் சேகரிப்பவராக , வரலாற்றாளராக பிலிம் நியூஸ் ஆனந்தன் என்கிற ஆளுமையை பல ஆண்டுகளாக நான் அறிவேன். அவர் மீது மதிப்பு உண்டு. அவரது சேவை மீது பெருமித உணர்வு உண்டு. புதிய படங்களின் முன்காட்சித் திரையீடுகளில் அடிக்கடி அவரைப் பார்த்ததுண்டு. அப்போதெல்லாம் பத்தோடு பதினொன்றாக  அவருக்கு வணக்கம் செய்து விட்டு கடந்து போகும் ஒருவனாகவே பல காலம்  இருந்திருக்கிறேன்.

நான் ‘பிலிமாலயா’ இதழில் பணியாற்றியபோது ஆசிரியர் எம். ஜி..வல்லபன் சொன்னபடி ஒரு கட்டுரைக்கு பழைய திரைப்படத்திலிருந்து புகைப்படம்  ஒன்று தேவைப்பட்டது.
அவரிடம் அந்த ஒரு புகைப் படத்துக்காகத் தொலைபேசினேன். ”தேடி எடுக்க வேண்டும்” என்றார். ”நான் வந்து கூடவே வந்து தேடுதலில் உதவட்டுமா? ”என்றேன். ”நான் இத்தனை நாள் எவன் உதவியையும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு உங்கள் உதவி எல்லாம் வேண்டாம் ”என்று. சிடுசிடுத்தவர்,வந்து வாங்கிக்கொள்ளச் சொல்லி ஒரு நேரத்தையும் கூறினார்.

எனக்கு ஒரு மாதிரியாகிவிட்டது சங்கடம், வருத்தம் ஒருவித அவமானம் எல்லாமும் சேர்ந்து கொண்டன. அப்போதும் அவர் வயது எழுபதைத்தொட்டுத்  தள்ளாமையில்தான் இருந்தார். நம்மால்  அவருக்கு வீண் சிரமம் ஏன்? கூடவே தேடுதலில் உதவட்டுமா என்ற தொனியில்தான் கேட்டேன். ஆனால் அவரோ தன் ஈகோ தூண்டிவிடப்பட்டது போல,தன் சுயம் சார்ந்த கௌரவ எல்லையில் குறுக்கிட்டு விட்டதாகத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டாரே என,  எனக்குள் வருத்தம். நேரில் போகும் போது அவரை எப்படி எதிர் கொள்வது எனக் குழப்பமாக இருந்தது.

அவர் அனுபவசாலி. பல சாதனைகளைப் பார்த்தவர்தான்.அவர் ஒரு ஈகோயிஸ்ட்டாக அதாவது தன் முனைப்பாளராக இருக்கலாம் தவறில்லை. ஆனால் நம் முதல் சந்திப்பே இப்படி எதிர் மறை எண்ணத்துடன் கசப்பான மனநிலையோடு இருக்கப் போகிறதே என்கிற தயக்கமான மனநிலையுடன் சென்றேன்..

அவர் வீட்டுக்குப் போனபோது பழைய கோபத்தின் சுவடு அவரது பேச்சில் தெரிந்தது.நேரில் என்னிடம் ”ஐம்பது ஆண்டுகளாகத் இந்தத் தொழிலில் இருக்கிறேன். நான் யார் உதவியும் எதிர்பார்ப்பதில்லை. இந்தாங்க நீங்கள் கேட்ட படம்” என்றபடி நான் கேட்ட புகைப்படத்தைக் கொடுத்தார். அவரிடம் ”சாரி சார் ”என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

அவர் ஆண்டுதோறும் டிசம்பர்-31ஆம் தேதி அந்த ஆண்டு ஜனவரி- 1 முதல் அதுவரை வெளியான தென்னிந்திய அளவிலான திரைப்படங்கள் பற்றிய புள்ளி விவரத் தொகுப்பை அச்சிட்டு பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வழங்குவார். அது எல்லாருக்கும் போய்ச் சேரவேண்டும் என்பதில் கவனமாக இருப்பார். அவ்வளவுதான், காலியாகி விட்டது, தீர்ந்து போய்விட்டது என்கிற பேச்சுக்கே இடமில்லை. தேவையான அனைவருக்கும் பிரதிகள் கொடுப்பார். இந்தச் சேவையை 1954 முதல் தன் உடல்நிலை நன்றாக இருக்கும்வரை அவர் செய்து கொண்டே இருந்தார்.

அவர் எப்போதும் தன் இது மாதிரியான புள்ளி விவரத் தொகுப்புக்காக ஒரு படிவம் வைத்திருப்பார். ஒவ்வொரு படம் பார்க்கும் போதும் அதில் விவரங்களைக் குறித்துக் கொள்வார்.  ஒரு திரைப்படத்தின் இயக்கம் யார், தயாரிப்பு யார், நடித்தவர்கள் யார் யார்,  யாருக்கு அது முதல் படம் போன்ற விவரங்கள் எல்லாம் அதில்  அடங்கி இருக்கும். அவரது படிவத்தில் இடம் பெற்றுவிட்டால் அது அரசு கெஜட்டில் இடம் பெற்றது போல அதிகாரப் பூர்வமாகிவிடும்.பத்திரிகைகள், ஊடகங்கள் எல்லாம் அவர் சொன்னதையே அதிகாரப் பூர்வமாக நம்பும். அப்படி ஒரு துல்லியத்தைத் தன் பணியில் காட்டியிருந்தார்; அப்படி ஒரு நம்பிக்கையையும் பெற்றிருந்தார்.

முன்பெல்லாம் இந்த தேதியில் இந்தப் படம் வெளியாகிறது என்று ‘தினத்தந்தி’யில் விளம்பரம் வந்து விட்டால்போதும் உறுதியாக அதை வெளியீட்டு தேதியாகக் குறிப்பிட்டுக் கொள்ளலாம். ஆனால் சமீப ஆண்டுகளாக திரையுலத் தட்பவெப்பநிலை யாராலும் கணிக்க முடியாததாகிவிட்டது. வெளியீட்டு தேதி, விளம்பரம் எல்லாம் வந்தும்கூட  திடீரென வெளியிடமுடியாமல் போய் விடுகிறது. பத்திரிகையாளர் காட்சியெல்லாம் போட்டும் கூட பல்வேறு சிக்கல்களால் படம் வெளிவராமல் போவதுண்டு. இந்தப் போக்கு தன் தகவல் சேகரிப்பு சேவையில் பெரும் சவாலாக பிரச்சினையாக இருக்கிறது என்று என்னிடம் வருத்தப்படுவார்.

கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் யார் எது செய்தாலும் ‘மேலே ஒருத்தன் பார்த்துக் கொண்டு இருக்கிறான்’ என்பார்கள். அதே போல திரையுலகில் எல்லாரைப் பற்றிய தகவல்களையும் அருகிலிருந்து உற்று நோக்கும் ஒருவராக அவர் இருந்து வந்திருக்கிறார். நடிகர்கள், நடிகைகள் எனப் பலருக்கும் அவர்களது இத்தனையாவது படம் இது என்பது தெரியாது அவர்தான் சொல்வார். அந்த அளவுக்கு எல்லாவற்றையும் பதிவு செய்து வந்திருப்பார்.பின்னாட்களில் சில நேரங்களில்  அம்மாதிரியான விடுபட்ட  படிவங்களை என்னிடம் கொடுத்துக் கூட விவரங்களை நிரப்பச் சொல்லியிருக்கிறார்.

வருடனான என்  முதல் சந்திப்பே அவ்வளவு மகிழ்ச்சியாக அமையவில்லைதான்.சில மாதங்கள் உருண்டன.  மறு முறை நான் அவரைப் பார்த்தபோது அவரைப் பற்றி நான் நினைத்த மாதிரி அவர் இல்லை . எல்லாவற்றையும் மறந்து விட்டார்.நான்தான்  அதை மனதில் வைத்துக்கொண்டிருந்திருக்கிறேன் எனப் புரிந்தது.நாளடைவில்  என்னுடன் சகஜமாகியிருந்தார். ‘பிலிமாலயா’வில் பணியாற்றிய அனுபவத்தில் எதைப்படித்தாலும் அதிலுள்ள எழுத்துப்பிழை, சொற்பிழை எனக்குப் பளிச்செனத் தெரியும்.இந்த விஷயத்தில் மற்றவர்களைவிட எனக்குள் ‘விளக்கு’ விரைவாக எரியும். அப்படி என்னைப் பழக்கியிருந்தார் ஆசிரியர் வல்லபன்.

ஒவ்வொரு சமயம் பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்கள் கொடுக்கும் தகவல் தொகுப்பில் ஏதாவது எழுத்துப்பிழை இருந்தால் நான் அது பற்றிச் சுட்டிக் காட்டுவதுண்டு. அவர் ஏற்றுக் கொள்வார்.
‘அந்த வேலையை எப்போதும் அவசரகதியில் முடிக்க வேண்டியிருக்கும்.அன்று  டிசம்பர்-31 வரை வெளியாகும் படம் கூட தேதி உறுதி செய்ய முடியாத நிலை இருக்கும். எனவே பிழை நேர்ந்து விடுகிறது’ என்பார் சமாதானமாக. என்றாலும் அதற்காக வருத்தப் படுவார். அப்படிச் சொன்னதில் இவன் நம் கொடுக்கும் தொகுப்பை படிப்பவன் மட்டுமல்ல  உன்னிப்பாக உற்று நோக்குபவன் என்று என்னை மனதில் குறித்துக் கொண்டிருக்க வேண்டும். என் மேல்  ஒரு கண் வைத்து விட்டார் என்பதை பின்னாளில் உணர்ந்தேன்

பிறகு ஒரு நாள் ஒரு சந்தர்ப்பத்தில் அவர் என்னை அழைத்தார். ”நான் ஒரு வேலை வைத்திருக்கிறேன்.நீங்கள் வந்தால்தான் சரியாக இருக்கும்  .  முடிந்தால் வாருங்கள்.செய்வீர்களா?” என்றார் தொலைபேசியில்.   ”நிச்சயமாக வருகிறேன் ”என்று கூறிவிட்டுப்  போனேன். அவர்கள் வீட்டில் ஒரு நாய் இருக்கும் புதிதாக யாரைக்கண்டாலும் பெரிதாகக் குரல் கொடுக்கும்.  அவர் வந்து கதவு திறந்து அமர்த்தியதும் சாந்தமாகி விடும் .ஆரம்ப காலத்தில் அது சீறிப் பாய்ந்த போது எனக்குப் பீதியாக இருக்கும். போகப்போக பழகிவிட்டது. பிறகெல்லாம் இந்தப் பயல் அவ்வப்போது வருபவன் என்று மோப்ப சோதனைகளைக் குறைத்துக்கொண்டு விரைவில் வீட்டுக்குள் விட்டு விடும்.

வீடு சென்ற போதுதான்  ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான தகவல் தொகுப்பு தயார் செய்ய வேண்டியிருந்தது தெரிந்தது.. அவர் விவரங்களைச் சொல்லிக் கொண்டே வருவார். நான் எழுத வேண்டும். அப்படியே எழுதினேன். எழுத்துப்பிழையில்லாமல் வர, நான் உத்திரவாதம் . இதை அவரும் நம்பினார். அவை பெரும்பாலும் பட்டியல், ஆண்டு, பெயர்கள் இப்படியே போய்க்கொண்டிருக்கும். அதை அவர் தன் நினைவேடுகளிலிருந்து புரட்டிக் கண்ணை மூடிக் கொண்டே சொன்னார் .நான் எழுதினேன். போகும் போது கையில் ஒரு காகித உறையைக் கொடுத்தார் நான் மறுக்கவே ,’ ‘மறுக்கக் கூடாது ,இங்கே பார்க்கக் கூடாது. வீட்டில் போய்ப் பாருங்கள்” என்றார் பிடிவாதமாக . அவர் பணியில் நம் பங்கும் இருக்கட்டுமே என்றுதான் நான் மறுத்தேன். அவர் விடவில்லை வீடு வந்து பார்த்த போது எனக்கு இன்ப அதிர்ச்சி, அது நான் எதிர்பார்க்காத சன்மானமாக இருந்தது.

அவரிடம் ஒரு முறை அன்பளிப்பாக எண்ணி திரையுலகம் சார்ந்த ஒரு  தொகுப்பு நூலைக் கொடுத்தேன்.  அவர் உடனே அதன் விலையைப் பார்த்து விட்டு ”ஒரு நிமிஷம் இருங்கள் ”என்று உள்ளே போய்  உரிய  பணத்துடன் வந்தார். நான் வாங்க மறுத்தேன்.  ”இதற்கான தொகையைத் தருகிறேன்.காசு வாங்க வில்லை என்றால் புத்தகம் வேண்டாம்”என்றார் கண்டிப்பாக.
”ஒவ்வொரு புத்தகமும் எவ்வளவு சிரமத்துக்குப்பின் வருகிறது என்று எனக்குத் தெரியும் ,” எனக்  கூறிவிட்டுப் பணத்தைக் கொடுத்து விட்டுத்தான் வாங்கினார்.

எப்போதும் அவர்  விவரங்கள் கூறும் போது பிரபலமானவர்கள் பற்றிய விவரங்கள் துல்லியமாக இருக்கும். எல்லாவற்றையும் தன் கோப்புக் குறிப்புகள் அடிப்படையில் சரிபார்த்துக் கொண்டுதான் சொல்வார்.

ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது சில இயக்குநர்கள் பற்றிய விவரங்களைப்  பேசிக் கொண்டிருந்தார் .ஒரு ஞாபகப் பிழையாக அனுமோகன், அஸ்வினிகுமார் பற்றி மாற்றிக் கூறினார் . ஆனைக்கும் அடி சறுக்குமல்லவா?
நான் சற்றே தயக்கத்துடன் அந்தக் கவனக்குறைவான பிழையைச் சுட்டிக் காட்டினேன் . அஸ்வினிகுமார் இயக்கிய ‘என் கணவர் ‘ படம் பற்றியும் பவ்யமாகக் கூறினேன்.

ஒருகணம் அமைதியாக இருந்தார். பிறகு கேட்டார் ”நீங்க பீல்டுக்கு வந்து எத்தனை வருஷம் ஆகுது.? ”. அவர் அப்படிக் கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.  ‘நல்லாத்தானே போய்க்கொண்டிருந்தது பெரியவர் கோபித்துக் கொண்டு விட்டாரோ,முந்திரிக் கொட்டைத்தனம் செய்து விட்டோமோ’ என ஒரு பதற்றம்.
”ஐந்து வருஷமாகுது ” என்றேன் எச்சிலை விழுங்கியபடி. எனக்குத் தெரிந்தவை கொஞ்சம்தான் ஆனால் தெரிந்ததில் தெளிவாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.
.
நான் சொன்னதில் தவறில்லை என்றாலும் ஒருவேளை அவரிடம் எதிர்வாதம் செய்து விட்டோமோ? என யோசித்த போது,சட்டென்று சிரித்தபடி கை குலுக்கினார். ” எனக்குப் பெருமையா இருக்குசார்.. சின்ன வயசிலேயே இப்படித் தெளிவா பொறுப்பா இருக்கிறது. சந்தோஷம் ” என்றார்.

 அந்தக்கணம் எனக்குள் மகிழ்ச்சியும் பூரிப்பும் பெருமையும் ஜிவ்வென பரவியதை உணர முடிந்தது.

நான் அவரைப் பார்க்கப் போன ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு தருணத்திலும் அவருக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டே இருக்கும் அவற்றில் பல எங்கிருந்தோ வருகிற அனாமதேய அழைப்புகளாகவே இருக்கும். இருந்தாலும் அவர் சலிக்காமல் பேசுவார்.

போனை எப்போது எடுத்தாலும் ” ஆனந்தன்” என்பார்  ‘குலேபகாவலி’யில் எம்ஜிஆருடன் நடித்த நடிகை யார்? மயக்கும் மாலைப் பொழுதே பாடலில் தோன்றியவர்கள் யார்? ராஜராஜ சோழன் எத்தனை மணிநேரப் படம்.? முக்தா சீனிவாசன் சிவாஜியை வைத்து இயக்கிய முதல் படம் எது? ஜெய்சங்கரின் 100 வது படம் எது? என்கிற மாதிரி பழைய கேள்விகளாகவே பெரும்பாலும் இருக்கும்.அவற்றுக்குச் சலிக்காமல் பதில் சொல்வார். அழைப்பவரின் முகம் தெரியாமல் இருந்தாலும், ஓர் அசரீரிபோல அவர்களுக்குத் தகவல் தானம் வழங்கிக் கொண்டே இருப்பார். சில சமயம் ஒரு நிமிடம் என்று காத்திருக்க வைத்துவிட்டு கோப்புகளைப் பார்த்துவிட்டுப் பதில் சொல்வார்.

எவ்வளவு பெரிய ஆளுடன் உரையாடிக் கொண்டு இருந்தாலும் இதுமாதிரி அழைப்புகளைத் தவிர்க்க எண்ணவே மாட்டார். ”நம்மீது நம்பிக்கையுடன் கேட்கிறார்கள். அதை உதாசீனம் செய்யக்கூடாது” என்பார்.

அவரது பிற்காலத்தில் கண் சரிவரத் தெரியா விட்டாலும் அப்போதும் சொல்லிக் கொண்டுதான் இருந்தார்.கையெட்டும் தூரத்தில் தான் தொலைபேசி வைக்கப்பட்டு இருக்கும் எடுத்துப் பேசுவார்.. யார் கேட்டாலும் கொடுக்க , கைக்கெட்டும் தூரத்தில் விசிட்டிங்கார்டு போல அச்சிட்ட முகவரித்தாள் இருக்கும்..

எல்லாரைப் பற்றியும் தகவல்கள், வாழ்க்கைக் குறிப்புகள் திரட்டிவைத்திருக்கும் அவரைப்பற்றி விரிவாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நெடுநாள் விருப்பம்  எனக்கு .அதற்காக அவரை அணுகிய போது மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்.

அவரைச் சந்திக்கும் மீடியாக்காரர்கள் நடிகர், நடிகைகள், இயக்குநர்,படம் வெளியான ஆண்டு, படநிறுவனம் போன்று செய்திக்கான கச்சாப் பொருட்களை கறந்து செல்பவர்களாகவே இருப்பதுண்டு.

அவரைப்பற்றியோ அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியோ பெரிதாகப் பதிவில்லை என்றே கூறலாம். நான் அவரது சிறுவயதுப் பருவம் முதல் பதிவு செய்ய விரும்பினேன்: நான் கேள்வி கேட்க, அவர் பதில் சொல்ல உரையாடல் தொடர்ந்தது. இது நடக்கும் போது அவர் மிகவும் தள்ளாமையில் இருந்தார். நீண்ட நேரம் பேசினால் மூச்சு வாங்கும் .இருந்தாலும் ஆர்வத்துடன் பேசுவார். ஒவ்வொரு முறை தொடங்கும் போதும் தடைசெய்யக் கூடாது. நாமாகவும் நிறுத்தக் கூடாது என்று  எண்ணி’ உங்களுக்குப் போதும் என்கிற வரை, முடியும் என்பது வரை சொல்லுங்கள் எப்போது வேண்டுமானாலும்  தோன்றும் போது நிறுத்திக் கொள்ளலாம் ‘என்று கூறியிருந்தேன்.

இயலாமையையும் மீறி உற்சாகமாகப் பேசிக் கொண்டிருப்பார். அப்போது அவர் மனைவி வந்து ‘போதும்ப்பா’, என்பது போல என்னிடம் கண்ணால் கெஞ்சுவார்.. உடனே அத்துடன் நிறுத்திக் கொண்டு.. ‘இன்னொருநாள் வருகிறேன்’ என்று  வந்து விடுவேன்.

அது ஓர்  இணைய இதழில் எழுதி வெளிவந்தது. அதைப் பார்த்துவிட்டு அவருக்கு மிகவும் மகிழ்ச்சி அவரைப் பற்றி எவ்வளவோ செய்திகள் வந்திருந்தாலும் அது பர்சனலாக, அந்தரங்க பூர்வமாக நெருக்கமாக இருந்ததாகக் கூறினார். இந்தக் கட்டத்தில் அவரால் சரியாகப் படிக்க முடியவில்லை தன் பேத்தியை விட்டுப் படிக்கச் சொல்லித்தான் கேட்பாராம். படிக்கும் போதே ‘இப்படியெல்லாம் இருந்தியா தாத்தா?’ என்று பேத்தி பெருமையுடன் கேட்டதை கண்களில் மகிழ்ச்சி மின்ன என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

அவரிடம் இப்படியாகப்  பேசி ஒலிப்பதிவு  செய்து சுமார் ஆறேழு மணி நேரம்  பதிவு செய்தேன். பலவிதமான தகவல்கள் ,சம்பவங்கள்  என நிறைய்ய நினைவுகளைப் பகிர்ந்தார்

அப்போது ஏராளமான ‘ஆப் த ரெக்கார்ட்’ தகவல்களையும் கூறினார். அவர் திடீரென ஒரு நாள் காலமானதும் எனக்குப் பெரிய ஏமாற்றம், அதிர்ச்சி. ஒருவித கையறுநிலையை உணர்ந்தேன் அதற்கு மேல் அவரது தொடரைத் தொடரவில்லை. காரணம் அவர் உயிருடன்  இருந்து வெளிவந்தால்தான் அதிலுள்ள தகவல்களின் – சம்பவங்களின் உண்மைத் தன்மை உணரப்படும். அவர் இல்லாமல் நன்றாக இருக்காது. எனவே அப்படியே விட்டுவிட்டேன். அவரது கடைசிக் காலத்தில் அவர் நீண்டநேரம் பேசியது,உரையாடியது  அனேகமாக என்னுடன்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.அப்படி பேசிக் கொண்டிருக்கும் போது சாப்பிடச் சொல்லியிருக்கிறார். மறுக்காமல் நான் சாப்பிட்ட போது அதற்கு மகிழ்ச்சியோடு நன்றி கூறியிருக்கிறார். என்னே உயரிய பண்பு!

அவர் தன் கண்பார்வை பழுது பட்டிருந்ததற்காக  மிகவும் வருத்தப் படுவார். பார்வை இல்லாமல் உயிர் வாழ்வதே வீண் என்பார் அடிக்கடி. அவர் பல ஆண்டுகள் திரட்டிய தகவல்கள் படங்கள் அரசுத் துறையால் கொண்டு செல்லப்பட்டது என்ன நிலையில் இருக்கிறதோ என்று கவலைப்படுவார். அவர் மனைவி ஓர் அப்பாவி. அவரை உதவிக்கு வைத்துக் கொள்ளலாமே என்றால்.. ” நான் பெரிய தவறு செய்துவிட்டேன். அவளை இந்தத் துறையில் எந்தப் பயிற்சியும் இல்லாமல் விட்டு விட்டேன். இந்த விஷயத்தில் அவளுக்கு எதுவுமே தெரியாது. சொன்னால் நம்ப மாட்டீர்கள் ரகுவரன் யார் பிரகாஷ்ராஜ் யார்  என்கிற வேறுபாடு கூட அவளுக்குத் தெரியாது என்றால் பாருங்கள்”. என்பார். பாவம் நல்ல இல்லறத் துணையாக மட்டுமே இருந்திருக்கிறார்  அவரது திருமதியார்.

பிலிம் நியூஸ் ஆனந்தனின் மனைவியும் பிலிம் நியூஸ் ஆனந்தியாக இருப்பார் என நான் நினைத்ததால் அவர் கூறியது வியப்பளித்தது.

தமிழ்ச்சினிமாவின்- ஏன் தென்னிந்திய சினிமாவின் ஆவணக்காப்பகம் போலிருந்தவர் அவர். ஓர் அரசு செய்ய வேண்டிய பணிகளை ஒரு தனிமனிதராக நின்று செய்து காட்டியவர்.அவர் எப்போதும் தன்னை ஒரு பத்திரிகையாளராகவே நினைப்பார். கூடுதல் தகுதியாகவே பத்திரிகை தொடர்பாளர் பணியை நினைப்பார். எப்போதும் பத்திரிகையாளர்களை விட்டுக் கொடுக்கவே மாட்டார்.

எப்போதும் தன்போக்கும் ,நோக்கும்,பணியும்,பயணமும் நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். காலந்தவறாமை, சொன்ன சொல் காப்பாற்றுதல், பிரதிபலன் பாராமல் தகவல் உதவி செய்வது அவரது தனித்தன்மையான குணங்களாகும். இவற்றை கடைசிவரைக் காப்பாற்றியது அவரது சிறப்பு. காலமாற்றங்களில் இந்த அவசரயுகத்தில் இக்குணங்களை அவரது மகன் டைமண்ட்பாபுவால் கூட கடைப்பிடிக்க முடிவதில்லை.

இனி டிசம்பர் 31 -ல் திரையுலகப் புள்ளிவிவரத் தகவல் தொகுப்பை  யார் தரப்போகிறார்கள்?

எனக்குள்ள வருத்தம் அவர் இத்தனை ஆண்டுகள் சிரமப்பட்டு குருவி மாதிரி சேகரித்தவற்றை  உலகளாவிய வகையில்  முறையாக இணையத்தில் ஆவணப்படுத்தியிருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும்?. இன்னொரு வருத்தம் ,நான் இவ்வளவு பழகியும் அவருடன் ஒரு புகைப்படம் கூட எடுக்க வில்லை. என்னே என் துரதிர்ஷ்டம்?

அவர் ஒரு தனிமனிதரல்ல ,நிறுவனம். ஆனால் அவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஒரு சிவாஜியைப் போல ஒரு இளையராஜாவைப் போல அவருக்கும் தகுதிக்குரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பதே நிஜம்.

ஒரு நிகழ்ச்சியில் கமல் ஆதங்கத்துடன் கூறினார் ” இவர் அருகில் இருப்பதால் இவரது அருமை நமக்குத் தெரியவில்லை. வெளிநாட்டில் இவர் இருந்திருந்தால் இந்நேரம் கொண்டாடியிருப்பார்கள். சிலை வைத்திருப்பார்கள்.” என்றார்:

அதையே நானும் வழி மொழிகிறேன்.

வாழும் போதே அவரை அங்கீகரித்திருக்கலாம் ; ஒரு விழா எடுத்துப் பெருமை சேர்த்திருக்கலாம் . என்ன செய்வது ? அங்கீகாரம் தரும்போது மறந்துவிட்டு அஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்வதுதானே நம்மவர்களின் மனோபாவம்?

— அருள்செல்வன்