பெண் குழந்தைகள் மேம்பாட்டிற்கு கல்வியே முக்கியம் :த்ரிஷா!

பிரபல தென்னிந்திய திரை நட்சத்திரம்  த்ரிஷா கிருஷ்ணனுக்கு
யுனிசெஃபின் நல்லெண்ண தூதர் கௌரவம் வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தினை தொடர்ந்து திரிஷா குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினரின் உரிமைகளுக்காக குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள லட்சக்கணக்கான குழந்தைகளை பாதிக்கும் ஊட்டச்சத்து குறைபாடு, குழந்தை திருமணம், குழந்தை தொழில்முறை மற்றும் குழந்தைகள் மீதான வன்முறையினை முடிவுக்கு கொண்டு
வருதல் குறித்த முயற்சிகளுக்கு ஆதரவாக செயல்படுவார்.

உலக குழந்தைகள் தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் இதனை அறிவித்த தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கான யுனிசெஃப் நிறுவனத்தின் தலைவர் திரு. ஜோப் சக்காரியா அவர்கள், திரிஷா அவர்கள் வளரிளம் பருவ மற்றும் இளைஞர்களின் அடையாளமாக திகழ்கிறார் என்றும்,
குழந்தைகள் மீது குடும்பத்தில், சமூகத்தில் மற்றும் பொது இடங்களில் நிகழும் வன்முறைகளை மற்றும்
குழந்தை உரிமைகள் மீறல்களை பேசு பொருளாக மாற்றிடும் ஆற்றல் உள்ளவர் என்று குறிப்பிட்டார்.
மேலும் குழந்தைகளின் கல்வி மற்றும் நலவாழ்வு மேம்பாட்டிற்காகவும், குடும்பங்கள் மற்றும்
சமூகங்களில் பெண் குழந்தைகளின் மதிப்பு உயரவும் செயல்பாடுவார் என்றார்.
தென்னிந்தியாவில் யூனிசெஃப்பின் இந்த கௌரவத்தை பெறும் முதல் திரை நட்சத்திரம் திரிஷா என்பது
குறிப்பிடதக்கது.
இந்நிகழ்வில் பேசிய திரிஷா , “இந்த கௌரவம் எனக்கு பெருமிதத்தினை அளிக்கிறது. இந்த
நாளில் குழந்தைகளின் கல்வி, நலவாழ்வு, ஊட்டச்சத்து , குழந்தைகளின் பாதுகாப்பு பற்றிய
விழிப்புணர்வை பரவலாக்கவும ; குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளத்திலுள்ள குழந்தைகள் மற்றும்
வளரிளம் பருவத்தினரின் உரிமைகளுக்காக செயல்படுவதுடன், தமிழ்நாடு அரசின் ஊட்டச்சத்து
குறைபாடற்ற, திறந்தவெளி மலம் கழித்தலற்ற தமிழகம் உருவாக்கும் முயற்சிக்கு ஒத்துழைப்பேன்”
என்றார்.
திரிஷா அவர்கள் 38 தமிழ்படங்கள் உள்ளிட்ட 64 திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 23
தெலுங்கு திரைப்படங்களும் இந்தி, கன்னடம் மற்றும் மலையாளத்தில் தலா ஒரு படங்களும் அடங்கும்.

திரிஷா அவர்கள் டிவிட்டரில் 43 லட்சம் பின்பற்றுபவர்களை கொன்டுள்ளார்.
சிறந்த கதாநாயகிக்கான தென்னிந்திய பிலிம்பேர் விருதினை நான்கு முறை பெற்றவர் 
திரைக்கு வந்த புதிதிலேயே சர்வதேச தமிழ் திரைப்பட விருதினை பெற்றவர். 

யுனிசெஃப்பின்  இவ்விழாவில்த்ரிஷா பங்கேற்றார்.இந்த நிகழ்வில் பங்கேற்ற 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன்   அவர்  கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின் போது பெண் குழந்தைகளின் கல்வி குழந்தை தொழில் மற்றும் குழந்தை திருமணங்களை தடுக்கும் மாய வித்தை என்றார். மேலும் 18 வயது வரை அனைத்து பெண் குழந்தைகளையும் பள்ளியில் தக்க வைத்தல் மூலம் தாய் இறப்பு மற்றும் சேய் இறப்பினையும் குறைப்பதுடன் குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாட்டினையும் தவிர்த்திட முடியும் என்றார். 
இந்த நிகழ்வில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவி திருமிகு. ஆர். நிர்மலா அவர்களும். யுனிசெஃப்பின் தொடர்புகள் நிபுணர் திருமிகு. சுகாட்டா ராய் அவர்கள் மற்றும் குழந்தை உரிமைகளுக்கான தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள், கல்வி நிறுவன பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனா.