‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ‘ விமர்சனம்

ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘ பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே ”
சின்னத்திரையில் பிரபலமான ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட் ,மது, ஜெயச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ப்ளே பாயாக சுற்றி திரியும் அரவிந்த் சமூக ஊடகங்களில் நட்பாகும் பெண்களுக்கு வலைவீசுவான். காதலிப்பது போல் நடித்து அவர்களை அந்தரங்கப் புகைப்படங்கள் எடுத்துமிரட்டி அவர்கள் மூலமே காசு பார்ப்பான். அல்லது விற்று இணைய வெளியில் வெளியிடச் செய்து பணம் சம்பாதிப்பான். இதுவே தனது போக்கு என இருப்பவன்.

அவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் வெளியே தெரிந்தால் அவமானம் என்று யாரிடமும் சொல்லாமல் தனக்குள்ளேயே புழுங்கிக் கொண்டு இருப்பதுண்டு.

அப்படி ஒருத்தி அவனை நம்பியவள் தற்கொலை செய்து கொள்கிறாள்.
போலீஸ் பிடியில் அந்தப்புகார் செல்கிறது. போலீசார் துப்புத் துலக்க ஆரம்பிக்கிறார்கள்.

நந்தினியையும் அப்படித்தான் காதலிக்கிறான். அரவிந்தை நந்தினியும் முழுதாக நம்புகிறாள்.இருவரும் கொடைக்கானலுக்கு ஜாலி டூர் செல்கிறார்கள். மலை உச்சியில் கூடாரம் அடித்துத் தங்குகிறார்கள்.

இந்த உலகத்திலேயே தான் தான் மகிழ்ச்சியானவள் என்று காதல் பரவசத்தில் நந்தினி நினைக்கிறாள். அவர்கள் வந்த ஜீப் பழுதாகிவிட்டதால் கூடாரத்தில் அவளைத் தனியாக இருக்கச் சொல்லிவிட்டு அரவிந்த் மெக்கானிக் கடை தேடிச் செல்கிறான்.

அப்போது வரும் ஒரு தொலைபேசி அழைப்பால் அவனது குட்டு வெளிப்படுகிறது.அரவிந்தின் அந்தரங்கம் அவளுக்குத் தெரிகிறது.அவனது கோரமுகத்தை அறிந்த அவள், அதிர்கிறாள். காதலன் என்று நம்பி மோசம் போய் விட்டோமே எனப் பதறுகிறாள்.
திரும்பி வந்த அவனிடம் சண்டை போடுகிறாள். பல பெண்களுக்குத் துரோகம் செய்தவன் என்று சீறுகிறாள். வாக்குவாதம் நடக்கிறது. ஆனால் அவனோ இதுவரை கெட்டவனாக இருந்து தவறுகளைச் செய்தது உண்மைதான் என்றும் ஆனால் இனிமேல் திருந்தி விட்டதாகவும் கூறுகிறான். நந்தினியிடம் தான் வைத்தது உண்மையான காதல்தான் என்றும் இனி நல்லவனாக இருப்பேன் என்று கூறிச் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் மன்றாடுகிறான்.
அவளை உண்மையிலேயே காதலிப்பதாகவும் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் எவ்வாவோ கெஞ்சுகிறான்.
ஆனால் அவளோ அவனை வெறுக்கிறாள். அந்தச் சமயத்தில் அவனைத்தேடி போலீஸ் கொடைக்கானல் வந்து விடுகிறது.
அவர்களுக்குள் மோதல் நடக்கிறது .முடிவு என்ன என்பதுதான் மீதிக்கதை.

சின்னத்திரையில் பரவலாக அறியப்பட்ட நடிகரான ராஜ்கமல் தான் படத்தின் கதாநாயகன் . எதிர்மறை நிழல் படிந்த கதாபாத்திரம்தான். அவரும் தன்னால் முடிந்த அளவுக்குப் புகுந்து விளையாடி இருக்கிறார் .செல்போன் மூலம் சிக்கிக்கொள்ளும் பெண்களிடமும் காதல் வசனம் பேசிக் கவரும் போதும், தன் வலையில் சிக்கியவர்களிடம்
மிரட்டும் போதும் நல்ல, கெட்ட என இரு முகங்களைக் காட்டியிருக்கிறார். நாயகியாக நடித்த ஸ்வேதா பண்டிட் சுமார் முகம் என்றாலும் நல்ல நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.ஒரு காதலியாகக் கொஞ்சும் போதும் துரோகம் அறிந்து குமுறும்போதும் போதும் நன்றாகவே நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆபாசப்படம் எடுக்கும் நாசகாரக் கும்பல் பின்னலில் உள்ளவனாக வரும் ஆப்பிரிக்க நடிகரும் நன்றாகவே வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.

வை- பை மூலம் செல்போன்களின் தகவல்கள் திருடப்படுவதைக் காட்டி , தொழில்நுட்ப வசதிகள் எந்தளவுக்கு ஆபத்தானது குறிப்பாகப் பெண்களுக்கு எவ்வளவு ஆபத்தானது என்று எச்சரித்து இருக்கிறது படம்.

நகைச்சுவைக் காட்சிகள் என்ற பெயரில் சில அசட்டுத்தனமான காட்சிகள் உள்ளன. பாடல் காட்சிகளில் கொடைக்கானல் மலைப்பகுதியைச் சுற்றி அலைந்து திரிந்து படம்பிடித்துள்ளார்கள். அப்போது சதீஷ்குமாரின் ஒளிப்பதிவும் விவேக் சக்ரவர்த்தியின் இசையும் கைகோர்த்து செய்துள்ள பயணம் ரசிக்க வைக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் காதலியிடம் நாயகன் மன்றாடுவது நாடகத்தனமாக உள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி பற்றி கதை சொல்ல வந்த படம், உருவாக்கத்தில் பழைய முறையில் உருவாகியுள்ளது.தொழில்நுட்ப ரீதியில் மிகவும் சுமாரான காட்சிகளே உள்ளன.

‘பெண் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே’ என்றுதான் படத்தின் கதை சொல்கிறது.தணிக்கை கெடுபிடிகளுக்காகத்தான் பெண் ‘பென் ‘ஆக மாறியுள்ளது.

செல்போன்களைக் கொண்டு பெண்கள் எப்படி வீழ்த்தப்படுகிறார்கள்? ஒரு சாதாரண செல்போன் மூலம் பெண்கள் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்கிற நல்லதொரு விழிப்புணர்வுக் கருத்தைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் வரதராஜ்.

இந்தக் கருத்தைச் சொன்ன நோக்கத்திற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.அவ்வகையில் படம் அவருக்கு வெற்றி எனலாம். ஆனால் சினிமா முன்னேறியுள்ள வளர்ச்சியின் அளவுக்குக் காட்சிகளில் தரத்தின் உயரம் இல்லை.

மொத்தத்தில் இந்தப் படம் ஜனதா சாப்பாடு.

தன்னால் முடிந்த உயரத்துக்கு பூப்பறித்துள்ளார் இயக்குநர் வரதராஜ்.