பேச்சாளர்களை சவுக்கால் அடிக்க வேண்டும்! கரு பழனியப்பன் பேச்சு

vks-grpஎழுத்தாளரும் திரைப்பட உதவி இயக்குநருமான சந்திரா எழுதிய ‘வழிதவறியது ஆட்டுக்குட்டியல்ல கடவுள்’ கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸில்  நடந்தது.இந்நூலை  பட்டாம்பூச்சி பதிப்பகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

கவிதைத் தொகுப்பு நூலை திரைப்பட இயக்குநர் ராம் வெளியிட கரு.பழனியப்பன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கவிதை நூல் பற்றி கவிஞர்கள் வெய்யில் ,நரன், எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன், இதழாளர்  ப்ரியா தம்பி ஆகியோர் விமர்சனங்களையும் திறனாய்வையும் வைத்தனர்.

விழாவில் இயக்குநர்  கரு.பழனியப்பன் பேசும்போது. “எனக்கு கவிதைகள் என்றாலே ஓசையோடு தான் பரிச்சயம். என் நினைவில் நிற்கும் கவிதைகள் எல்லாமே ஓசைநயம் கொண்டவைதான். அதனால்தான் என் நினைவிலும்அவை  இன்றும் அழியாமல் இருக்கின்றன.

ஆங்கிலக் கவிதைகளாக இருந்தாலும் கூட ராபர்ட் ப்ரோஸ்ட் முதல் வால் விட்மன் வரை யார் எழுதியிருந்தாலும் ஓசையுடன்தான் அவை எனக்குள் பதிவாகியுள்ளன. சங்கப் பாடல்கள் கூட ஓசை யோடுதான் பழக்கம். ஆனால் கவிதைக்கு ஓசை மட்டும் போதுமா என்றால், போதாது. அதையும் தாண்டிய கனம் வேண்டும்.அந்தச் செறிவால்தான்   சங்கப் பாடல்கள் இன்றும் நிலைத்திருக்கின்றன.

vksஎன்னை ஓசையால் மட்டும் கவர்ந்த   கவிதைக்கு  இன்று அது தேவையில்லை என்றாகிவிட்டது. சந்திராவின் கவிதை தொகுப்பில் என்னைக் கவர்ந்தவை என்று ‘தொடர்பற்ற நதி’ ,தனிமை, வண்ணதாசன் கவிதைகள் அம்மாவின் வாசனை, இரவின் குழந்தை போன்று 10  சிறந்த கவிதைகளைச் சொல்லமுடியும் .அவற்றை ஒவ்வொன்றாகப் படிக்கலாம். நான் படிக்க விரும்பவில்லை. பேச்சாளன் படிக்கக் கூடாது. அது குற்றம். மேடைக்குப் பேசவந்துவிட்டு எழுதி வந்ததை வாசிப்பவர்களை மன்னிக்க முடியாது. அவர்களைச் சவுக்கால் அடிக்க வேண்டும்.”என்றார் .தொடர்ந்து பேசிய அவர்,” பெண்கள் எழுதும் போது சங்ககாலம் தொட்டு இன்றுவரை புலம்பல்கள் தான் தென்படுகின்றன.சந்திராவின் கவிதைகளில்  புலம்பல்கள் இல்லை.இவரிடம் காண்பது  வேறு. ‘ நான் ஒருபோதும் என்னை நிராகரித்துக் கொள்வதில்லை ‘என்று கூறும் சுய மரியாதை இருக்கிறது. சுயநலம் பேணு என்கிற பாரதியின் வரி நினைவுக்கு வருகிறது. “என்று கூறி வாழ்த்தினார்.

இயக்குநர் ராம் பேசும்போது” என் படத்தில் உதவி இயக்குநராக சந்திரா பணியுரிந்த போது அவரைப் பாதுகாப்பு கருதி  இரவு படப்பிடிப்பு என்றால் வீட்டுக்குப் போய்விடச் சொல்வேன். . ஏன் எ ன்னைப் பெண்ணாகப் பார்க்கிறீர்கள் என்று கோபப்பட்டார்..சக மனிதராக சக ஜீவனாக பார்க்க வேண்டும் என்று  சொன்னார். பெண்பற்றிய என் பார்வையை மாற்றியவர் சந்திரா. பல்வேறு குடும்பப் பொறுப்பு களோடு அவர் கவிதை எழுதுவது சவால்தான்.

பி ஜேபி ஆள்கிற இந்த நாட்டில், தெருவுக்கு தெரு மூலைக்கு மூலை இந்து அமைப்புகள் உருவாகும் இந்த நாட்டில், எப்போதோ எழுதியதற்கு இப்போது போராட்டம் செய்யும் இந்த நாட்டில், கோட்சேவுக்கு சிலைவைக்க முயல்கிற இந்த நாட்டில் கவிதை எழுதுவது சவால்தான். “என்று கூறி வாழ்த்தினார்.

இதழாளர் ப்ரியாதம்பி பேசும் போது  தனக்குச் சந்திராவின் கவிதைகளைவிட  கதைகள் மிகவும் கவர்ந்ததாகக் கூறியவர், படிக்கும் போது தன் வாழ்க்கை நினைவுகளுடன் தொடர்பு படுத்தி உணர்வதாக்க் கூறினார்.

நீண்ட விமர்சனத்தை கவிஞர் நரன் முன்வைத்தார்.  சந்திரா கதைகளால் பேசப்படுவது  போல அவரது கவிதைகள் ஏன் கவனம் பெறவில்லை?. என்றார்  விஷ்ணுபுரம் சரவணன்.

“சந்திராவின் கவிதைகள் பூடகமின்றி வெளிப்படையாக உள்ளன .முதல் தொகுப்புக்கும் இந்த இரண்டாம் தொகுப்புக்கும் நல்ல முன் நகர்வு உள்ளது இவரது கவிதைகள் காதலர்களுக்கும் கைவிடப் பட்டவர்களுக்கும் நல்ல மருந்து.” என்றார் கவிஞர் வெய்யில் .நிகழ்ச்சியை இதழாளர் ஜெயராணி தொகுத்து வழங்கினார்.

பட்டாம்பூச்சி பதிப்பகம் சார்பில் பத்திரிகையாளர் கலாபன் நன்றி கூறினார்.