‘பொன்மகள் வந்தாள்’ விமர்சனம்

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஜே.ஜே.ப்ரெட்ரிக் இயக்கத்தில்
ஜோதிகா வழக்கறிஞராக பிரதான வேடமேற்று நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள்.

இந்தப் படத்தில் பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பார்த்திபன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

பொது முடக்கத்தால் திரையரங்குகள் இயங்காது மூடப்பட்டுள்ள நிலையில், ஒடிடி தளத்தில் முன்னணியிலுள்ள அமேசானில் நேரடியாக இந்தப்படம் வெளியாகியுள்ளது.

ஒரு பெண்ணின் மர்ம மரணத்தின் பின்னணியைக் கண்டுபிடித்து, நீதியை நிலைநாட்ட இன்னொரு பெண் நிகழ்த்தும் போராட்டமே ‘பொன்மகள் வந்தாள்’.இது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தியுள்ள கதை எனலாம். பெண்கள் தனக்கு நேரும் அநியாயத்தை, அவலத்தை வெளியே சொல்ல முன்வராத மனப்போக்கை ஒரு சாதகமாக எடுத்துக் கொண்டு தப்பிக்கும் குற்றவாளிகள் பிடிபட வேண்டுமென்றால் , பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வெளியே வந்து பேச வேண்டும் என்கிற கருத்து வெளிப்படும் வகையில் படக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஜோதி என்ற பெண் ஒரு சைக்கோ .அவள் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்படுவதாக படம் தொடங்குகிறது. அவள் ஊட்டியில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் 5 குழந்தைகளை கடத்திக் கொன்றதாகப்பழி சொல்லப்படுகிறது. பெண் குற்றவாளி தங்களைச் சுட்டதால் தாங்களும் பதிலுக்குச் சுட்டதில் குற்றவாளி இறந்துவிட்டதாகவும் அவள் வடநாட்டைச் சேர்ந்த பெண் என்றும் போலீஸார் கூறுகின்றனர். .இது போலியான என்கவுண்டர் என்று ஜோதிகா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்.

கொல்லப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள். இதற்காக ஜோதிகா பல்வேறு அவமானங்களுக்கு ஆளாகிறார்.வில்லனாக வரும் தியாகராஜன், அவருக்காக வாதாடும் பார்த்திபன் ஆகியோரின் நரித்தனமான சூழ்ச்சிகளையெல்லாம் வீழ்த்தி, வழக்கில் ஜோதிகா எப்படி வென்று ஜோதி நிரபராதி என்பதை நிரூபிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.

வெண்பா, ஜோதி என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஜோதிகா. குறிப்பாக, கொல்லப்பட்ட ஜோதியின் மகள் நான் தான் என்று உண்மையை உடைக்கும் காட்சி, நீதிமன்றத்தில் தியாகராஜன் வாயாலே உண்மையை வெளிக்கொண்டுவரும் காட்சிகள் பரபர ரகம். அதேபோல, கடத்தப்பட்ட தனது மகளை ஜோதி மீட்கும் காட்சியிலும், ஜோதிகா மின்னுகிறார்.பல்வேறு உணர்வுகளைக்காட்ட நல்வாய்ப்பு இப்படம் . இதில் அத்தனை உணர்வுகளையும் அப்படியே திரையில் கொண்டு வந்து அபாரமான நடிப்பால் ஜோதிகா மனதில் நிற்கிறார். பாத்திர நேர்மை செய்து வசனங்களாலும் உடல் மொழிகளாலும் தன்னை நிரூபித்துள்ளார்.
எதிர் தரப்பு வழக்கறிஞராக வரும் பார்த்திபன், தனக்கே உரிய கேலி கிண்டல் பாணியில் நீதிமன்றத்தில் வாதிடும் காட்சிகள் சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன. வில்லத்தனத்தில் குறையில்லாமல் மிரட்டியுள்ளார் தியாகராஜன்.

பாண்டியராஜன்,விஜே ஆஷிக்,சுப்பு பஞ்சு, வினோதினி வைத்தியநாதன், அக்‌ஷரா கிஷோர், வித்யா பிரதீப், கிரேன் மனோகர், கஜராஜ் என யாருடைய நடிப்பும் சோடை போகவில்லை. அவர்கள் மனதில் பதிகிறார்கள்.

ராம்ஜியின் ஒளிப்பதிவும், கோவிந்த வசந்தாவின் இசையும் பின்னணியும் படத்துக்குக் கூடுதல் பலம் .ரூபனின் எடிட்டிங் நேர்த்தி.

படத்தில் பெரும்பாலான காட்சிகள் நீதிமன்றத்தில் நடந்தாலும், தனது கச்சிதமான திரைக்கதை மூலம் படத்தை விறுவிறுப்பாக்கியுள்ளார் இயக்குநர். இடைவேளை காட்சியில் வைத்திருக்கும் திருப்பம் எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

’காலதாமதமாக கிடைக்கும் நீதியும் அநீதியே’ என்கிறது படம். அதுமட்டமல்ல பெண்களுக்கான பாலியல் வழக்குகளில் ஆதாரங்களைப் பார்க்காமல், உண்மையை பார்த்து நீதி வழங்க வேண்டும், என்பதையும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறது.

”அவமானம்னு நாம மறைக்குற சின்ன உண்மைல கூட எத்தனையோ கெட்டவங்க நல்லவங்க ஆயிடுறாங்க” , ”யாரை இந்த உலகம் தேவதையா பார்த்திருக்கணுமோ அவங்களை சைக்கோவா மாத்தி உங்களை எல்லாம் நம்ப வெச்சிருக்காங்க”, ”நாங்க தோத்துட்டோம்னு சொல்றதுக்கு இது கேம் இல்லை . ஜஸ்டிஸ்” போன்ற சில வசனங்கள் பளீர் சுளீர் ரகம்.

சிறு சிறு குறைகளைப்புறந்தள்ளிவிட்டுப்பார்த்தால் ‘பொன்மகள் வந்தாள்’ தனித்தே தெரிகிறது.

பெண் குழந்தைகளிடம் ஆண்களிடம் எப்படிப் பழக வேண்டும் என அறிவுரைப்பது போல, பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படிப் பழக வேண்டும் என்பதை ஆண்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கருத்து இக்காலத்துக்குத் தேவையே.அதை இப்படம் அழுத்தமாகச்சொல்லியிருக்கிறது..