‘பொன் மாணிக்கவேல்’ விமர்சனம்

ஜாபக் மூவீஸ் தயாரிப்பில் ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பொன்மாணிக்கவேல்’.

படத்திற்கு இசை டி.இமான், ஒளிப்பதிவு கே.ஜி.வெங்கடேஷ். இது ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.

படமே ஒரு கொடூர கொலையில் தொடங்குகிறது. அதுவும் அதிகாலையில் நீதிபதி வீட்டு வாசலில் கொடூரமாகக் கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க வரும் போலீஸ் தரப்பு விசாரணையில் சற்றே சுணக்கம் ஏற்படவே வழக்கில் உயிர்ப்பூட்ட நியமிக்கப்படுகிறார் டிசி பொன் மாணிக்கவேல். படிப்படியாக கொலைக்கான காரணம் தேடும் அவர் பயணிக்கும் கதையில் கொலைகாரன் யார், எப்படிப் பிடிபடுகிறான் என்பதுதான் மீதிக் கதை.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்மாணிக்கவேலாக பிரபுதேவா வருகிறார். பிட்டான உடம்பு, அலட்டாத உடல்மொழி. எப்போதும் பார்க்கும் ஜாலி பிரபுதேவா இந்தப் படத்தில் இல்லை.மனைவியை தேர்வுக்குத் தயார் படுத்தும் ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் ஆறுதல்.சீரியஸ் நமக்கு செட் ஆகாதுப்பா என பல இடங்களில் பிரபு தேவாவே சொல்லியிருக்கிறார்.

நிவேதா போலீஸ்மனைவி . கொடுத்த நாயகி வேலையை சரியாக செய்திருக்கிறார்.ஆனாலும் காதல் நெருக்கமான காட்சிகளில் தாராளமயம். திடீர் பிரவேசம் தரும் சுரேஷ் மேனன் படத்தின் வேகத்திற்கு உதவுகிறார்.

 ‘போலீஸ் காரன் எங்கே அடிக்கணுமோ, அங்கே அடிக்கணும், எங்கே அமைதியா இருக்கணுமோ இருக்கணும்’ வசனம் பளிச் ஒன்று.

இமான் இசையில் ’உதிரா உதிரா’ பாடல் ரசனை. பின்னணி இசையும் சில காட்சிகளில் பலமாக அமைக்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவுக்கு வலு சேர்த்திருக்கிறது. ‘உதிரா’ பாடல் வண்ணமயம்.

படம் முழுக்க சில லாஜிக் மீறல்கள் உண்டு. என்னதான் அதிரடி போலீஸ் என்றாலும் படம் ஆரம்பித்து 40 நிமிடங்கள் வரை ‘டீ சாப்டு பேசலாமா?!’ எனக் கேட்டுக்கொண்டே ஒன்றும் கண்டுபிடிக்காமல் சுற்றுவது மிகை. நடந்திருப்பது ஒரு நீதிபதியின் கொலை என்னும் சீரியஸ் படத்தின்  முதல் பாதி முழுக்க முரட்டுப் போலீஸ் பெருவளத்தானிடம் மட்டுமே தெரிகிறது.
இரண்டாவது பாதியில் எல்லை தாண்டுகிறது நம்பகம்.

பிரபுதேவாவை புதிய முகத்தில் காட்டியுள்ள வகையில் படத்தை வணிகரீதியாக ரசிக்கலாம்.

மொத்தத்தில் இன்னும் ஒரு புலனாய்வுப் போலீஸ் படமாக கடந்து செல்கிறது ‘பொன்மாணிக்கவேல்’.