‘போகன்’ விமர்சனம்

bogan1 - Copyகூடு விட்டு கூடு பாயும் கற்பனைதான் ‘போகன்’  படத்தின்  கதை.

‘தனி ஒருவன்’ படத்தின்  வெற்றிக்குப்பின் அதே கூட்டணியாக ஜெயம் ரவி கதாநாயகனாகவும், அரவிந்த் சாமி வில்லனாகவும் நடித்துள்ளனர். ஹன்சிகாதான் நாயகி. இயக்கம் – லக்ஷ்மன்.

அரவிந்தசாமி ராஜ குடும்பத்து வாரிசு.  அவரது தந்தை  சொத்துக்களை ஊதாரித்தனமாக  அழித்துத் தற்கொலையும் செய்து கொள்கிறார். சிறு வயதிலேயே தந்தையால் எல்லாம் இழந்து விட்டாலும்  மகன் அரவிந்தசாமிக்கு ராஜாபோலவே வாழ்க்கையை அனுபவிக்க ஆசை.

ஒரு பக்கம் சுற்றுலாப் பயணிகளின் கைடாகவும், இன்னொரு பக்கம் பார்களில் சில்லறைத் திருட்டுக்களிலும் ஈடுபட்டு வருகிறார். போலி ஆவணங்கள் காட்டி   அரசின் தொல்லியல் துறையில் வேலைக்கும் சேர்ந்து விடுகிறார். அது மட்டுமல்ல  சித்தர் போகரின் ஓலைச்சுவடியைத் திருடி, கூடு விட்டு கூடு பாயும் சக்தியைப் பெறுகிறார்.

அப்புறமென்ன? அவரது சேட்டைகள் ஆரம்பமாகின்றன.

லலிதா ஜூவல்லரியின் மேனஜர் உடலுக்குள் புகுந்தும், வங்கி ஊழியரான ஜெயம் ரவியின் தந்தை நரேன் உடலுக்குள் புகுந்தும் லட்சம் லட்சமாய்ப் பணத்தை லவட்டுகிறார். துணைக்கமிஷனரான ஜெயம் ரவி,  தன் தந்தை மேல் விழும் பழியைத் துடைக்க அரவிந்தசாமியைக் கைது செய்கிறார்..

ஆனால் அரவிந்தசாமியோ அசராமல் சிறிதும்  பதற்றமின்றி ஜெயம் ரவியின் உடலுக்குள் புகுந்து கொள்கிறார். அரவிந்தசாமியின் உடலில் சிக்கிக் கொள்ளும் ஜெயம் ரவி சிறையில் மாட்டிக் கொள்ள, ஜெயம் ரவியின் உடலில் இருக்கும் அரவிந்தசாமியோ வெளியில் சுதந்திரமாக  நடனமாடுகிறார்.

ஜெயம் ரவி எப்படித் தன் உடம்பை மீட்டு வெளியில் வந்து அரவிந்தசாமியை வெல்கிறார் என்பதுதான் படத்தின் முடிவு.

Bogan-audio-and-trailer-date-revealed - Copyராஜ வம்சத்து ஆதித்யாவாக அரவிந்தசாமி . நல்ல பொருத்தம் ,நன்றாகவும்  நடித்துள்ளார். அனுபவி ராஜா அனுபவி  என எல்லாவற்றையும் அனுபவிக்க எண்ணும்  அவர்தான் போகன்.

சொர்க்கம் இந்த உலகிலேதான் உள்ளது என போகனான அரவிந்தசாமியின் அறிமுக காட்சியிலேயே இயக்குநர் லக்ஷ்மன் அழகாகக் காட்டியுள்ளார். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை அரவிந்தசாமியே வியாபித்திருக்கிறார்..

அவர் எது செய்தாலும் பேசினாலும் ஒவ்வொரு அசைவும் அழகாக உள்ளது.
டெபுடி கமிஷ்னர் விக்ரமாக ஜெயம் ரவி . அவரது அளவான நடிப்பு சிறப்பு. அரவிந்தசாமியாக உலா வரும் சமயத்தில், ஹன்சிகா உணவு ஊட்டி விடும் பொழுது ஜெயம் ரவி அழும் காட்சி ரசிக்கவைக்கும்படி உள்ளது.  நாசர், சட்டென தன் வில்லத்தனத்தைக் காட்டும் பொழுது அதை அழகாய்ச் சமாளிக்கிறார்  ரவி.

அழகு பொம்மையாக ஹன்சிகா. குடித்து விட்டு அவர் செய்யும் அமர்க்களம் ஜாலி ரகளை.

ஆடுகளம் நரேன், வருண், அக்ஷரா, பொன்வண்ணன்,  நாகேந்திர பிரசாத், சிந்து ஷ்யாம், பிரகாஷ் ராஜன் ஆகியோரும் த்ததமது பாத்திரங்களில் பதிகிறார்கள்.
இமானின் பின்னணி இசை படத்தின்  போக்கிற்கு சீராக உதவியுள்ளது. செளந்தர் ராஜனின் ஒளிப்பதிவில்,பிரம்மாண்டம்  மிளிர்கிறது. குறிப்பாக பாடல் காட்சிகளில்.

யார் உடம்புக்குள் யார் என்ற குழப்பம் பார்வையாளர்களுக்கு ஏற்படாத வண்ணம் கச்சிதமாய்த் திரைக்கதை அமைத்ததற்கு இயக்குநர் லக்ஷ்மனுக்கு நிச்சயமாக ஒரு சபாஷ் போடலாம்.

‘போகன்’   ஒரு புதுமையான திரை அனுபவம்தான்.