‘மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்’ விமர்சனம்

100 கோடி ரூபாய் பொருட் செலவில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், அர்ஜுன், பிரபு, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், அசோக் செல்வன் என பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள படம் மரைக்காயர் (அரபிக் கடலின் சிங்கம்).சிறந்த படம், சிறந்த ஆடை வடிவமைப்பு, சிறந்த கிராபிக்ஸ் என மூன்று பிரிவுகளில் இந்த சினிமா தேசியவிருது வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

16ஆம் நூற்றாண்டில் கேரளாவின் சாமுத்ரி ராஜ்ஜிய கடல்படைத் தளபதியாக விளங்கிய குஞ்சாலி மரைக்காயரின் கதை இது எனப்படுகிறது. இவரே இந்திய கடற்படை எல்லையில் முதல் கடற்படை பாதுகாப்பை உருவாக்கியவர் என்றும் கூறப்படுகிறது.

போர்ச்சுகீசியர்களுக்கும் அவர்களது சில அடிவருடிகளுக்கும் சிம்ம சொப்பனமாக உருவாகிறார் குஞ்சாலி மரைக்காயர். திருமணத்திற்காகச் சென்ற அவரது குடும்பத்திற்கு நிகழ்ந்த துயர சம்பவம் அவரை ஒரு வீரவலிமையான போராளியாக உருவாக்குகிறது. பிறகு குஞ்சாலி தன் எதிரிகளை எப்படி எதிஐஃகொண்டு வீழ்த்தினார். அவர் சந்தித்த தடைகள் துரோகங்கள் என்ன என்பதே திரைக்கதை.

படத்தின் முதல் பாதியில் ரசிகர்கள் சோர்வடைவதை தவிர்க்க முடியவில்லை. அழுத்தமான வசனங்கள் இல்லை. ஒரு மாவீரனுக்கான முறையான அறிமுகக்காட்சி இல்லை. இரு காட்சிகளுக்கும் இடையே தொடர்ச்சி இல்லை என பல சிக்கல்களோடு போகிறது முதல் பாதி. இரண்டாம் பாதியில் யுத்த காட்சிகளை நோக்கி நகரும் இந்த சினிமா கொஞ்சம் இருக்கையில் நம்மை நிமிரச் செய்கிறது. மோகன்லாலின் கதாபாத்திரம் இன்னுமே வலுவுடன் அமைக்கப் பட்டிருக்கலாம். பல முன்னணி நடிகர்கள் இதில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் நேர்ந்த சிக்கலை உணர முடிகிறது.

போர்க் காட்சிகளைப் படமாக்கிய விதம் சிறப்பு. பெரிய திரையில் இப்பிரம்மாண்டத்தை நிச்சயம் ரசிக்கலாம். சாபு சிரிலின் கலை வேலைப்பாடுகள் மற்றும் பெரிய மெனக்கெடலுக்கு பாராட்டுகள். திருவின் ஒளிப்பதிவு இக்கதைக்கு சரியான தேர்வு.

தொழிநுட்பம் மற்றும் பிரம்மாண்டத்தில் செலுத்திய உழைப்பை கொஞ்சம் திரைக்கதை அமைப்பிலும் செலுத்தி இருக்கலாம். கடின உழைப்பைக் காட்டியிருக்கும் படக்குழுவுக்கு பாராட்டுகள்.