‘மிருகா’ விமர்சனம்

ஒரு மனிதன் மிருகமாக மாறிக் குற்றச் செயல்கள் செய்வது பற்றிய கதை.ஸ்ரீகாந்த்,ராய் லட்சுமி பிரதான வேடமேற்க ஜெ.பார்த்திபன் இயக்கியுள்ளார்.

பணக்கார விதவை பெண்களை நல்லவன் போல் நடித்து அவர்களை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு அவர்களின் சொத்துக்களை அனுபவிப்பது, தன் மீது சந்தேகம் வந்ததும் அவர்களை தடயம் இல்லாமல் கொன்றுவிட்டு வேறு மாநிலம் தப்பிச்சென்று விடுவது தான் அர்விந்தின் (ஸ்ரீகாந்த் ) வழக்கம்.

அப்படி ஒருமுறை கோவாவில் தன் மனைவி, மாமியார், மகன்,மகள், மற்றும் அதனை நேரில் பார்த்த சாட்சியையும் கொல்வதைப் பக்கத்து வீட்டுப் பெண் தன்னுடைய மொபைல் ஃபோனில் படம் பிடித்து அர்விந்தை மிரட்டுகிறார். அவளுடைய மிரட்டலுக்கு அஞ்சி அவளது திட்டப்படி, அவளுடைய அக்கா ராய் லட்சுமியை திருமணம் செய்துகொண்டு அவளுடைய தொழிற்சாலைக்கு நிர்வாக இயக்குநராக பதவி ஏற்கிறார் ஸ்ரீகாந்த். தங்கையின் விருப்பப்படி அக்காவையும், அவர் குழந்தை மற்றும் இன்னொரு தங்கையையும் கொன்று சொத்துக்களை இருவரும் பகிர்ந்து கொண்டார்களா? இல்லை அவள் சதி செய்து ஸ்ரீகாந்த்தை சிறைக்கு அனுப்பினாரா? என்பது தான் இந்த ‘மிருகா’ படத்தின் மையக்கதை.

முதல் காட்சியிலேயே ஸ்ரீகாந்த் தன் குடும்பத்தையே கொன்று ஒட்டுமொத்த பார்வையாளர்களின் வெறுப்பை சம்பாதிக்கும் எதிர்மறையான கேரக்டரில் முதல் முறையாக நடித்திருக்கிறார்.பதற்றமடையும் காட்சிகளில்  தடுமாற்றத்தையும் கொலை செய்யும் போது முழு வில்லதனத்தையும் சர்வ சாதாரணமாக வெளிப்படுத்தி தன் நடிப்பின் முதிர்ச்சியை உணர வைக்கிறார்: ஸ்ரீகாந்த்துக்கு பொருத்தமான ஜோடியாகவும் காதல், ரொமான்ஸ் மற்றும் தாய்மை உணர்வையும் அளவாக வெளிப்படுத்தி நிறைவை தருகிறார் ராய் லட்சுமி. க்ளைமாக்ஸில் புலியுடனும் மிருகனுடனும் போராடும் தருணங்கள் படம் என்பதையே மறந்து ரசிக்க வைத்து விடுகிறார்.

கிராஃபிக்ஸ் புலி நிஜப்புலியின் உணர்வை தருவது நிஜமே. க்ளைமாக்ஸில் புலியின் ஆளுமையை அதிகம். அதனை உருவாக்கிய குழுவினருக்கு பார்வையாளர்கள் சார்பாக பாராட்டுகள்.

ஸ்ரீகாந்த் செய்யும் கொலைகளுக்கு ஆழமான மனதை தொடும் காரணம் இல்லை , ராய் லட்சுமியிடம் ஸ்ரீகாந்த் சொல்லும் காரணங்களும் அவர் அதை நம்புவதும் நம்பும்படியாக இல்லை.
இது திரைகதையின் பலவீனத்தை உணர்த்துகிறது.


 படத்தின் இரண்டாவது பாதியை ராய்லட்சுமியும் ஸ்ரீகாந்தும் தூக்கி நிறுத்துகிறார்கள். குறிப்பாக ராய் லட்சுமி வில்லனிடம் இருந்தும் புலியிடமிருந்து தன்னையும் பிள்ளையையும் தற்காத்துக்கொள்ளச் செய்யும் போராட்டம் அனுதாபத்தை அள்ளும். இதுவரை கவர்ச்சி பதுமையாக வலம் வந்த ராய்லட்சுமி தனக்கு நடிக்கவும் தெரியும் என்று நிரூபித்துள்ளார். டூயட் பாடும் வெறும் சாக்லேட் பாய் அல்ல எதிர்மறை கதாபாத்திரத்திலும் ஒளிர முடியும் என்று ஸ்ரீகாந்தும் மெய்ப்பித்துள்ளார்.ஆனால் புலி சார்ந்த காட்சிகள் மிகவும் நீளம், கத்திரி போட்டிருந்தால் படம் இன்னும் வேகம் கூடியிருக்கும்.