‘முதல் தகவல் அறிக்கை’ விமர்சனம்

fir44புதுமுகங்கள் ரயான் ராஜ் , கல்பனா ஜெயம் நடிப்பில் பா.ராஜகணேசன் இயக்கியுள்ள படம். வெள்ளித்திரை டாக்கீஸ் சார்பில் மரியம் தயாரித்துள்ளார். இப்படத்தை இயக்கியுள்ள பா. ராஜகணேசன் ஏற்கெனவே ‘விலாசம்’ படத்தை இயக்கியவர்.

 

போலீசாரால் தவறாகப் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் மோசமான விளைவைப் பற்றிச் சொல்லும் கதை.

தஞ்சைப் பகுதியில் சுதந்திரமாக சுற்றித் திரிகிற 4 இளைஞர்கள் மீது கற்பழித்துக் கொலை செய்ததாகப் பொய் வழக்கு போட்டு சிறைக்கும் செல்கிறார்கள் .சிறையிலிருந்து விடுதலையான அவர்கள் தங்கள்  சொந்த ஊரில்  குடும்பத்தாராலேயே அவமதித்து விரட்டப்படுகிறார்கள். தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கிய கயவர்களைத் தேடி பழிவாங்கி கணக்கு தீர்ப்பதே கதையின் முடிவு.

படம் ஆரம்பித்ததும் வரிசையாகக் கொலைகள் சம்பவங்களாகக் காட்டப் படுகின்றன.

அதன்பின் முன்கதை சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.நாயகன் ரயான் ராஜ் , கல்பனா ஜெயம் நாயகி இருவரும் காதலிக்கிறார்கள். டூயட்பாடல்களில் காதல் பாடுகிறார்கள். ஆனால் அந்த வாழ்க்கை தொடரவில்லை.ஆனால் திருமணம் ஆகும் முன்பு நாயகன் சிறை சென்று விடுகிறான்.

இப்படி நாலு பேருக்கும் சிறு சிறு நாலு கிளைக் கதைகள் உள்ளன.
வேறுவேறு ஊர்களைச் சேர்ந்தவர்களை பொய்வழக்கில் செல்லும் சிறைவாழ்க்கை  இணைக்கிறது. சிறையில் ஒன்றாக இருக்கிறார்கள். இனியும் நாம் சந்தித்துக் கொண்டால் பழைய வாழ்க்கை நினைவுக்கு வருமென்று பிரிந்து விடலாம் என்கிறார் ஒருவர்.

ஆனால் தங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் பற்றிய பழிவாங்கும் உணர்வு வந்ததும் ஒன்று சேர்ந்து ஒரு திரையரங்கில் அடைக்கலமாகிறார்கள். அங்கே தங்கிக் கொண்டு திட்டமிட்டு எதிரிகளை ஒவ்வொரு விதமாகக் கொலை செய்கிறார்கள்.

பிரதான நாயகன் ரயான் ராஜ் அடக்கமாக இருக்கிறார்.அளவாக நடித்துள்ளார். நாயகி கல்பனா ஜெயம் மூக்கும் முழியுமாக ஈர்க்கிறார் .உச்சகட்ட காட்சியில் தன் முன்னாள் காதலன்தான் தன் கணவனைக் கொல்ல முயல்வது  என்பது தெரிந்து உயிர்ப்பிச்சைக் கேட்பது நல்ல நடிப்புக்கு உதாரணம்.

போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் வில்லன் முஜீப் நடிகர் கிஷோரை நினைவு படுத்துகிறார். மனதில் பதிகிற முகம்.வில்லத்தனம் காட்டி நடிக்கவும் செய்துள்ளார்.

படத்தில் கதாநாயகனின் காதலியை வில்லன் திருமணம் செய்து கொள்கிறான் என்கிற எதிர்பாராத திருப்பம் நல்ல முடிச்சு.

அந்த நாலு இளைஞர்களும் துடிப்புடன் வலம் வருகிறார்கள். அவர்களுக்கான தனித்தனி குணச்சித்திரம் வெளிப்படாதது படத்தில் உள்ள குறை .

தஞ்சைப் பகுதியில் மன்னார்குடி கோயில் திருவிழாக் காட்சிகள்,  கிராமங்களின் வயல்கள் பார்க்க அழகாகத் தெரிகின்றன.

படத்துக்குஒளிப்பதிவுசெய்துள்ள ஒளிப்பதிவாளர் ராஜபார்த்திபன் பாடல் காட்சிகளில், தான் இருப்பதை உணர வைக்கிறார்.
ரவிராகவ் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். ‘குள்ளச்சி கள்ளச்சி’ பாடல்  மனதில் பதிகிறது.

உணர்ச்சிகரமான சில காட்சியில் பின்னணி இசை முன்னணிக்கு வந்து வசனத்தை கேட்க விடாமல் செய்கிறது.

பழிவாங்கல் கொலைகளில் வில்லனின் கர்ப்பிணி  மனைவியும் கத்தி குத்தப்படும் போது வயிற்றில் உள்ள குழந்தை கையசைப்பது போல் காட்டியிருப்பது  ‘இனி வன்முறை வேண்டாம்’. என்று சொல்லாமல் சொல்வது போல் இருக்கிறது.மொத்தத்தில் வன்முறை வேண்டாம் என்று கருத்து சொன்ன வகையில் ‘முதல் தகவல் அறிக்கை’ முதல்கட்ட வெற்றி பெற்றுள்ளது.