‘முதல் நீ முடிவும் நீ ‘விமர்சனம்


இசையமைப்பாளர்  தர்புகா சிவா முதல் முறையாக இயக்குநராகி இயக்கியிருக்கும் படம் தான் “முதல் நீ முடிவும் நீ”.   இப்படம் நேரடியாக ஜீ5 ஓடிடி தளத்தில்  வெளியாக இருக்கிறது.


80களில் பறவைகள் பலவிதம் என்றொரு படம் வந்தது.கல்லூரி வாழ்க்கை நண்பர்கள் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திப்பது பற்றிய கதை அது .அதேபோல் பள்ளி வாழ்க்கை நண்பர்கள் மீண்டும் சந்திப்பது பற்றிய கதைதான் இது.


ப்ளஸ் ஒன் படிக்கும்  பள்ளி வாழ்க்கையில் தொடங்குகிறது கதை.  அனு, கேத்ரின், சைனீஸ், வினோத், துரை, பிரான்சிஸ், ரேகா, ரிச்சர்ட், உள்ளிட்ட சிலர் ஒரே பள்ளியில் படிக்கும் நண்பர்கள்.

பள்ளி சேட்டைகள், காதல், கொண்டாட்டம், ஜாலியாக பள்ளி வாழ்க்கை . இதில், அனுவும் வினோத்தும் காதலர்கள். அமைதியாகச் செல்லும் இவர்களது காதல் வாழ்க்கையில் மற்றொரு பெண் எட்டிப் பார்க்க, சந்தேகம்,மோதல் வெடிக்கிறது. இருவரும் பிரிகிறார்கள். சற்று அனுசரித்து ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாததால் அவர்களின் வாழ்க்கை எங்கே போய் நிற்கிறது என்பது தான்  படத்தின் மீதிக் கதை.
நாயகனாக கிஷன் தாஸ், அழகான தோற்றம் இயல்பான நடிப்பு என  வினோத் என்ற கதாபாத்திரத்தில் பொருந்துகிறார் . பள்ளி வாழ்க்கையில், நண்பர்களோடு அரட்டை, காதல், எனத் தனது கதாபாத்திரத்திற்குத் தேவையான அம்சங்களை வெளிக்காட்டி இருக்கிறார்.

சைனீஷ் மற்றொரு கதாநாயகன்  என்று சொல்ல வேண்டும் .  எதையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாது பார்க்கும் பெண்களை எல்லாம் காதல் செய்யும் ஒரு கதாபாத்திரம்தான்.    இக் கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஷ்,படத்திற்குப் பலமாக வந்து நின்று நகைச்சுவைப் பொறுப்பையும் ஏற்றிருக்கிறார். 


 இவருடன் சுரேந்தர் பாத்திரத்தில் நடித்த கெளதம் ராஜ் நல்ல கூட்டணியில் பக்கபலமாக இருந்திருக்கிறார்.
நாயகியாக வந்த அம்ரிதா (அனு), அழகான தேவதை. பள்ளி மாணவியாக வந்து செல்லும் காட்சிகளில் மோனாலிசா போல தேவதையாக வந்து கண்களுக்கு விருந்து படைக்கிறார். மேலும், கேத்ரின் பாத்திரத்தில் பூர்வா ரகுநாத், துரை பாத்திரத்தில் ஷரன் குமார், ப்ரான்சிஸ் பாத்திரத்தில் ராகுல் கண்ணன், ரேகா பாத்திரத்தில் மீதா ரகுநாத், ரிச்சர்ட் பாத்திரத்தில் வருண் ராஜன், திருமால் பாத்திரத்தில் நரேன், விக்கி பாத்திரத்தில் ஹரினி ரமேஷ் கிருஷ்ணன் என ஒவ்வொருவரும்  பாத்திரமாக வந்து ஒளிர்கிறார்கள்.

சுஜித் சரங்கின் ஒளிப்பதிவு படத்திற்குப் பக்கா பலம்.  90’கள் காலக்கட்டத்தில் இருந்த ஒவ்வொன்றையும் மிக கவனமாக காட்டி அக்காட்சிகள் ஒவ்வொன்றிற்கும் உயிர் கொடுத்திருக்கிறார் இயக்குநர். 

பள்ளியில் நாம் படிக்கும் போது பார்த்த, ரசித்த, பல விஷயங்களை இயக்குநர் நினைவூட்டிச் செல்கிறார்.


முதல் பாதியில் மிகவும் இயல்பாகவும், மிகவும் கவனமாக கையாண்டு கதையை நகர்த்திச் சென்ற இயக்குநருக்கு இரண்டாம் பாதியை சுவாரஸ்யப்படுத்த தவறியது ஏனோ.? 


அடல்ஸ் ஒன்லி விஷயங்களை பட்டியல் போட்டு அன்லிமிட்டடாகப் புகுத்தியிருப்பது படத்தின் கண்ணியத்தைச் குறைத்து விட்டது. இதனால் 96 படம் போல் வந்திருக்க வேண்டியது மலினமாகிவிட்டது.
தர்புகா சிவாவின் இசையில் பாடல்களை விட பின்னணி இசை நன்று.

ஏற்கெனவே பார்த்த படங்களின் சாயலில் பல காட்சிகள் உள்ளது ஒரு பலவீனம்.
ஓ மை கடவுளே , 96 படங்கள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
இரண்டாம் பாதியில் தொய்வடையும்  சில காட்சிகளில் இயக்குநர் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பார் காட்சிகள் வெகு நீளம். இருந்தாலும் முதல் இயக்கத்தில் தர்புகா சிவாவுக்கு வெற்றி .