‘மெய்ப்பட செய் ‘ விமர்சனம்

தங்கள் காதலுக்கு வரும் பிரச்சினையால் ஊரை விட்டு சென்னை வந்து பிழைத்துக் கொள்ளலாம் என்று தன் நண்பர்களுடன் வருகிறார்கள் காதலர்கள். சென்னை வந்து இன்னொரு பிரச்சினையில் சிக்குகிறார்கள் அதை எப்படி எதிர்கொண்டு
வெல்கிறார்கள் என்பதுதான் கதை.

தஞ்சை மாவட்டத்தில் வாழ்ந்து வரும் நாயகன் ஆதவ் பாலாஜி, நாயகி மதுனிகா இருவரும் வெவ்வேறு சமூகத்தினர், காதலிக்கிறார்கள். எனவே பிரச்சினை வருகிறது. குறிப்பாக நாயகியின் தாய் மாமன் தமிழ்செல்வனால் சிக்கல் நேர்கிறது. இதனால் இந்த ஜோடி காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொண்டு மூன்று நண்பர்களுடன் ஊரை விட்டு வெளியேறி சென்னை செல்கிறார்கள்.

சென்னை வந்து வாடகைக்கு வீடு எடுத்து வாழத் தொடங்கும் இவர்கள், அந்த வீட்டின் உரிமையாளராக இருக்கும் தாதாவால் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள்.

அவர்கள் ஒரு கொலைக்கு நேரில் பார்த்த சாட்சியாக இருக்கிறார்கள் . அந்த தாதாவால் அந்த நண்பர்களுக்கு நேர்ந்த பிரச்சினை என்ன? என்பதுதான் மீதிக் கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஆதவ் பாலாஜி தோற்றத்தில் மோகன்லாலை நினைவூட்டுகிறார்.புதுமுகம் என்று தோன்றாமல் காதல், சென்டிமென்ட், சண்டைக்காட்சி என்று அனைத்து வகைகளிலும் தனது திறமையை நிரூபிக்க முயன்று இருக்கிறார். நாயகி மதுனிகா இயல்பான முகம், இயல்பான நடிப்பு. அந்தப் பாத்திரத்திற்கு அழகாகப் பொருந்துகிறார். கதாநாயகியின் தாய்மாமன் வேடத்தில் நடித்திருக்கும் பி ஆர் தமிழ் செல்வன் அந்த வேடத்திற்குப் பொருந்துகிறார். ஆடுகளம் ஜெயபாலன் அதிகம் பேசாமலேயே அச்சமூட்டும்படியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருடைய தோற்றமும் வசன உச்சரிப்பும் அவரது பாத்திரத்தின் கொடூரத்தை சொல்லாமல் சொல்கிறது.போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் ஓஏகே சுந்தர் அதிகார அழுத்தத்திற்குட்பட்ட போலீஸ் அதிகாரியாகத் தனது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளார்.

ஒரு காதல் கதை ,அதற்கு சாதி தடை என்று ஆரம்பிக்கிற படம் ,பாலியல் குற்றங்கள் சார்ந்து திசை மாறுகிறது.

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு விரைவான கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் வேலன். அவர்களுக்குத் தண்டனையாக,படத்தில் துணுக்குறும் காட்சியை வைத்து முடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் ஆர் .வேல் கிராமத்துக் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகிறார். பரணியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அடிக்கடி வரிசையாக சிறு சிறு இடைவெளிகளுக்குள் மூன்று பாடல்கள் ஒலிப்பது சற்று சோர்வூட்டுகிறது. சுமாரான செலவுத்திட்டத்தில், கிடைத்திருக்கும் நடிகர்களை வைத்துக்கொண்டு கிராமத்துப் பின்னணியில் ஒரு நிறைவான படத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இந்த முயற்சியில். தங்கள் கைக்கு எட்டிய உயரத்திற்குப் பூப்பறித்துள்ளார்கள். மொத்தத்தில் ‘மெய்ப்பட பேசு’ புதியவர்களின் முயற்சி.