‘யானை’ விமர்சனம்

இயக்குநர் ஹரியின் படங்களுக்கென்று ஒரு சூத்திரம் உள்ளது .ஒரு பரபரப்பான ஆக்சன் படமாக அது இருக்கும். இடை இடையிடையே நகைச்சுவைகள் சென்டிமென்ட் என்று விறுவிறுப்பான் படமாகக் கொடுப்பது அவர் பாணி.அதே பாதையில் வந்திருக்கும் படம் தான் ‘யானை’.

ஹரி பெரும்பாலும் சூர்யாவை வைத்து வெற்றிகரமான ஆக்சன் படங்களைக் கொடுத்திருப்பவர். இப்போது தனது மைத்துனர் அருண் விஜயை வைத்து யானையை உருவாக்கி இருக்கிறார்.

அருண் விஜய் உடன் பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், அம்மு அபிராமி, போஸ் வெங்கட் என பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

‘யானை’ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் வைத்திருந்த எதிர்பார்ப்பை படம் முழுமையாக பூர்த்தி செய்ததா? பார்க்கலாம்..

யானையின் கதை தான் என்ன?

ஊருக்குள் கௌரவமாக வாழ்ந்து வரும் பிஆர்வி குடும்பத்தின் இளைய மகன்ம் ரவி ( அருண் விஜய்), குடும்பத்தின் மீதும், தனது அண்ணன்கள் சமுத்திரனி, வெங்கட் போஸ், சஞ்சீவ் மூவரின் மீதும் அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். என்னதான், அருண் விஜய் தனது அண்ணன்களை உடன்பிறந்தவர்கள் என்று நினைத்தாலும், அவர்கள் மூவரும் இவரை இரண்டாம் தாய் வயிற்றில் பிறந்தவர் என்பதால் சற்று விலகலோடுதான் பார்க்கிறார்கள்.இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பிஆர்வி குடும்பத்தின் மீது இருக்கும் பகையுடன் இருக்கும் ஜெயபாலன் குடும்பத்தில் இருந்து பழைய பகையைத் தீர்த்துக்கொள்ள, ஜெயிலில் இருந்து வெளியே வருகிறார், வில்லன் லிங்கம் { ராமச்சந்திர ராஜு ). முதலில் சமாதானக் கரம் நீட்டும் அருண் விஜய், பகையை சுமுகமாக தீர்க்கவே நினைக்கிறார்.அதற்கான பல முயற்சிகளை எடுக்கிறார். ஆனால், அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிகிறது.
வெற்றிவேல் பி ஆர் வி குடும்பத்தின் கௌரவத்துக்கு சவாலாக நெருக்கடியான ஒரு சம்பவம் நடக்கிறது.இதனால் அந்தக் குடும்பமே நிலை குலைந்து போகிறது.

சந்தர்ப்ப வசத்தில் அருண் விஜய், தன் அண்ணன்களுக்கு எதிரியாகத் தெரிகிறார்.உடனடியாக வீட்டை விட்டு அண்ணன் சமுத்திரக்கனியால் வெளியேற்றப்படுகிறார் அருண் விஜய். இதன்பின், மீண்டும் குடும்பம் ஒன்று சேர்ந்ததா? பகையுடன் திரிந்துகொண்டிருந்த லிங்கம், பிஆர்வி குடும்பத்தை என்ன செய்தார்? அருண் விஜய் இவற்றை எப்படி எதிர்கொண்டார்? என்பதே படத்தின் மீதிக் கதை..

ஒரு ஆக்ஷன் அதிரடி நாயகனாக அருண் விஜய்க்கு அறிமுகம் மட்டுமல்ல அழுத்தமான காட்சிகளும் உண்டு.வீரம், காதல், பாசம் என்று பல முனைகளிலும் கலந்து கட்டி அடிக்கிறார். குறிப்பாகச் சண்டை காட்சிகளில் மிரட்டுகிறார்.
கதாநாயகியாக வரும் பிரியா பவானி ஷங்கர், நுணுக்கமான முக பாவனைகளால் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.

நடிகை ராதிகா தனது அனுபவ நடிப்பை வழங்கியுள்ளார். அண்ணனாக வரும் சமுத்திரக்கனி அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுகிறார். வில்லனாக வந்து, கடைசியில் அனைவரையும் கண்கலங்க வைத்துவிடுகிறார் நடிகர் ராமச்சந்திர ராஜு.

சமுத்திரக்கனியின் மகளாக வரும் நடிகை அம்மு அபிராமியின் நடிப்பு படத்திற்குப் பலம். யோகி பாபு ஜிம்மி என்ற பாத்திரத்தில் வருகிறார் .அருண் விஜய்யுடன் அவர் வரும் காட்சிகள் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளன.
மற்றபடி, அப்பாவாக வந்த நடிகர் ராஜேஷ், அண்ணன்களாக வந்த போஸ் வெங்கட், சஞ்சீவ், ஐஸ்வர்யா, இமான் அண்ணாச்சி என அனைவரும் அளவாகச் சரியாக நடித்துத் தங்களுக்குக் கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளனர்.

சாதாரண கதையைத் திரைக்கதையாக மாற்றும் இயக்குநர் ஹரியின் திறமை பல இடங்களில் பளிச்சிடுகிறது.முற்பாதியில் கச்சிதமாகச் சென்று கொண்டிருந்த படம் இரண்டாவது பாதியில் சில நகைச்சுவைக் காட்சிகள், பாடல்கள் வந்து மிதவேகம் எடுக்கிறது.

அதைத் தவிர்த்து இருந்தால், படம் இன்னும் விறுவிறுப்பு கூடி இருக்கும். ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் தனி நிறம் காட்டுகின்றன. வழக்கமான டூயட் பாடலாக இல்லாமல் புது பாணியில் பாடல்கள் உள்ளன. பின்னணி இசை படத்திற்குக் கூடுதல் பலத்தைச் சேர்க்கிறது. எஸ். கோபிநாத்தின் ஒளிப்பதிவு மிரட்டுகிறது. ஆண்டனியின் எடிட்டிங் நேர்த்தி,.அனல் அரசின் சண்டைக் காட்சிகளில் கனல் பறக்கிறது.

எவ்வளவுதான் யதார்த்தம் பேசுகின்ற படங்கள், உலக சினிமா முயற்சி என்று வந்து கொண்டிருந்தாலும் வணிக நோக்கில் ஆன பொழுதுபோக்கு படங்களுக்கான இடம் என்றும் உண்டு. அப்படிப்பட்ட ரசிகர்களை முழுமையாகத் திருப்தி செய்யும் வகையில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார் .

படத்தின் பின்புலக் காட்சிகள் தென் தமிழ் நாட்டின் மண்ணைப் பதிவு செய்துள்ளன. ராமேஸ்வரம் ,கச்சத்தீவு என்று கடலில் சிரமப்பட்டு பல காட்சிகளை எடுத்துள்ளார்கள்.காட்சிகளில் மட்டுமல்ல ஆங்காங்கே பாத்திரங்கள் பேசும் வசனங்களிலும் பொறி பறக்கிறது.

படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை ஏராளமான நட்சத்திரங்களை வைத்து வேலை வாங்கி ,ஹரி தான் ஒரு கடுமையான உழைப்பாளி என்பதை நிரூபித்துள்ளார்.

அருண் விஜய்யை ஒரு மாஸ் ஹீரோவாக சில படிகள் மேலே உயர்த்தி உள்ள இந்தப் படம் ஆக்சன் பட ரசிகர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும் விருந்தாக அமைந்துள்ளது.