படமாகும் எம்.ஜி.ஆர் வாழ்க்கை!

   ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர். அவர்களின் வாழ்க்கை வரலாறு ‘எம். ஜி. ஆர்.’ என்னும் பெயரில் திரைப்படமாகத் தயாரிக்கப் படுகிறது.

தற்போதைய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர். வேணுகோபால் மற்றும் அமைச்சர் . கே. பாண்டியராஜன் முன்னிலையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் இத்திரைப்படத்தின் முதல்நாள் படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

செய்தி, மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அமைச்சர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இத்திரைப்படத்தில் எம் ஜி ஆர் ஆக சதீஷ்குமார், பேரறிஞர் அண்ணாவாக இயக்குநர் எஸ். எஸ். ஸ்டேன்லி மற்றும் சிங்கம் புலி, பிளாக் பாண்டி, ஏ. ஆர். தீனதயாளன், முத்துராமன் மற்றும் பலர் நடிக்கின்றனர். முன்னாள் முதல்வர்கள் வி. என். ஜானகி, ஜெ. ஜெயலலிதா ஆகியோருக்கான உருவ ஒற்றுமையுள்ள நடிகைகளின் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.
‘காமராஜ்’ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இத்திரைப்படத்திற்கும் திரைக்கதை வசனம் எழுதுகிறார். படத் தொகுப்பு, எஸ். பி. அகமது, ஏ . எம். எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ. பாலகிருஷ்ணன் தயாரித்து இயக்குகிறார்.

புரட்சித் தலைவர் எம். ஜி. ஆரின் திரைப்படங்கள் துவக்க நாளன்றே, அனைத்து ஏரியாக்களும் விற்பனையாவது வழக்கம். அந்த மரபின் அடையாளமாக ஆனந்தா பிக்சர்ஸ் உரிமையாளர்  சுரேஷ் அவர்கள் ஒரு தியேட்டருக்கான விநியோக உரிமையை பெற்றுக் கொண்டார். இத்திரைப்படம், உலகெங்கிலுமுள்ள தமிழர்களை சென்றடைய எம். ஜி. ஆரின் தீவிர பக்தர்களுக்கு அந்தந்த பகுதி திரையரங்குகளில் திரையிட விநியோக உரிமை வழங்க ரமணா கம்யூனிகேஷன்ஸ் திட்டமிட்டுள்ளது.

எம். ஜி. ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தயாரிக்கப்படும் இத்திரைப்படத்தின் டீசர், எம். ஜி. ஆரின் பிறந்த நாளான வரும் ஜனவரி 17 அன்று வெளியிடப்படும். வரும் ஏப்ரலில் இத்திரைப்படம் திரைக்கு வருகிறது.