லிங்கா நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி கால்ஷீட் வேண்டும்: விநியோகஸ்தர்கள் கோரிக்கை

linga-kumbiduமழை விட்டும் தூவானம் விடாத மாதிரி இன்னமும் லிங்கா பிரச்சினை ஓயவில்லை.கன்னித்தீவு கதையைப் போல தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது
ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் நஷ்ட ஈட்டுத் தொகையில் பாதிப் பணம் இன்னமும் தங்களுக்கு வழங்கப்படவில்லையென்று பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் புகார் கூறியுள்ளனர். இதுதொடர்பாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது விநியோகஸ்தர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில் விநியோகஸ்தர்கள் கூறியிருப்பதாவது:-

‘லிங்கா’ திரைப்படம் வாங்கி வெளியிட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டி பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைந்து லிங்கா பட விநியோகஸ்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தின.

ரூ.33.50 கோடி நஷ்டத்தை ஈடுகட்ட முடியாது. 10 கோடி மட்டுமே தர முடியும் என கூறினார்கள். இதற்கிடையில் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் ரஜினி வீட்டு முன் பிச்சை எடுக்கும் போராட்டத்தை அறிவித்தனர்.

இதன் பின்பு ரஜினி சார்பில் இப்பிரச்சினையில் தலையிட்டு கணக்கு வாங்கிய திருப்பூர் சுப்பிரமணியம், “ரஜினி சார் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். தற்போது 12.50 கோடியை வாங்கிக் கொள்ளுங்கள். பாக்கியுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட வேந்தர் மூவிஸ் தயாரிக்கும் படத்திற்கு ரஜினி சார் குறைந்த நாட்கள் கால்ஷீட் கொடுப்பார். அப்படத்தில் கிடைக்கும் லாபத்தை வைத்து உங்களுடைய எஞ்சிய நஷ்டத்தை ஈடுகட்டிக் கொள்ளுங்கள்” என்றார்.

நாங்களும் அவரது பேச்சை நம்பி 12.50 கோடி பணத்தை பெற்றுக் கொள்ள சம்மதித்தோம். மீடியா முன் ‘லிங்கா’ நஷ்டஈடு விவகாரம் முடிவுக்கு வந்தது என நாங்களே அறிவித்தோம்.

திருச்சி ஏரியா – 1.39 கோடி, நெல்லை ஏரியா 80 லட்சம், செங்கல்பட்டு – 2.30 கோடி, மதுரை ஏரியா 1.40 கோடி ஆக மொத்தம் 5 கோடியே 89 லட்சம் ரூபாய் மட்டுமே இதுவரையிலும் கொடுக்கப்பட்டுள்ளது. எஞ்சிய தொகையான 6 கோடியே 61 லட்ச ரூபாய் இன்றுவரையிலும் கொடுக்கப்படவில்லை.

இது குறித்து தாணுவிடம் கேட்டால் “திருப்பூர் சுப்பிரமணியிடம் இருக்கிறது…” என்கிறார். திருப்பூராரிடம் கேட்டால் “மதுரை அன்புச்செழியனிடம் இருக்கிறது..” என்றார். ஒரு கட்டத்தில் “பணமெல்லாம் இல்லை…” என்றார் திருப்பூர் சுப்பிரமணி. சங்கம் தலையிட்டு பேசி முடிக்கப்பட்ட இவ்விஷயத்தில் நாங்கள் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டுள்ளதாக கருதுகிறோம்.

ரஜினியின் தூதராக செயல்பட்ட திருப்பூர் சுப்பிரமணி முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். உண்மையிலேயே திருப்பூர் சுப்பிரமணி ரஜினியின் துதுவர்தானா என்கிற சந்தேகம் எங்களுக்கு வந்திருக்கிறது.

இனியும் பொறுமை காக்கும் நிலையில் நாங்கள் இல்லை. ரஜினி சார்பில் கொடுக்கப்பட்ட 12.50 கோடி முழுமையாக சம்பந்தபட்ட ‘லிங்கா’ பட விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களிடம் இடைதரகர் தலையீடின்றி உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

‘லிங்கா’ பட வெளியீட்டின்போது விநியோகஸ்தர்கள் பாக்கி தொகைக்கு ஈடாக கொடுத்த காசோலை சம்பந்தமாக வேந்தர் மூவிஸ் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

12.50 கோடி சமரசத்திற்கு ஒப்புக் கொண்டபோது விநியோகஸ்தர்கள் மீது வேந்தர் மூவிஸ் மற்றும் தியேட்டர்காரர்கள் எந்தப் பிரச்சினையையும் கிளப்பமாட்டார்கள் என கொடுக்கப்பட்ட வாக்குறுதி இப்போது மீறப்பட்டுள்ளது.

எம்.ஜி. அடிப்படையில் திரையிட்ட தியேட்டர்காரர்கள் நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி சார் வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு கொடுத்த வாக்குறுதிப்படி கால்ஷீட் தர வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே எம்.ஜி. அடிப்படையில் படம் திரையிட்டவர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் போதுமான இழப்பீடு கிடைக்கும்.

எனவே இந்த விஷயத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி பேசி முடிவெடுக்க, இன்னும் ஒரு வார காலத்திற்குள் ‘லிங்கா’ படத்தை வாங்கி திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களின் கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை சம்பந்தமாக பேசி முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.