லிங்கா நஷ்ட ஈடு விவகாரம் : சிங்காரவேலன் தமிழக அரசிடம் முறையீடு!

linga2rs லிங்கா நஷ்ட ஈடு விவகாரம் தொடர்பாக வீதியில் இறங்கி போராடுவதை தள்ளி வைத்து விட்டு 1993ல் அ.தி.மு.க. அரசு பிறப்பித்த அரசு ஆணையின்படி நஷ்ட ஈட்டைப் பெறுவதற்கு தமிழக அரசின் உள்துறைச் செயலருக்கு, லிங்கா படத்தை வாங்கி, திரையிட்டு நஷ்டமடைந்தவர்களின் சார்பில் சிங்காரவேலன் தரப்பில் அனுப்பப்பட்டுள்ள புகார் மனுவை வாசகர்கள் கவனத்திற்கு இங்கே வெளியிட்டுள்ளோம்!

சிங்கார வடிவேலனாகிய நான் மெரினா பிக்சர்ஸ் என்ற பெயரில் படவெளியீட்டு நிறுவனம் ஒன்றை துவக்கி முதல் படமாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘லிங்கா’ என்ற படத்தை திருச்சி – தஞ்சாவூர் பகுதிகளில் வெளியிட்டேன்.

இதற்காக வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கு மினிமம் கியாரண்டி என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்து 7 கோடியே 13 லட்ச ரூபாய் செலுத்தி இருந்தேன். அதில் என் முதலீடாக 1 கோடி 25 லட்சமும் திரையரங்குகளில் வசூலித்த பணம் 5 கோடியே 88 லட்சமும் கொடுத்தேன். மினிமம் கியாரண்டி அடிப்படையில் திரையிடக் கூடாது என்று தமிழக அரசின் 1993ம் ஆண்டு ஆணை பற்றி G.O. (Ma) No:260/19.10.1004) எனக்கு தெரியாது. கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியான ‘லிங்கா’ படம் எதிர்பாராத வசூலை பெறவில்லை. இதனால் பணம் கொடுத்த திரையரங்க உரிமையாளர்கள் பணத்தை திரும்ப கேட்டு என்னை நச்சரிக்க ஆரம்பித்தனர்.

நானும் வேந்தர் மூவிஸ், ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கியதோடு மின்னஞ்சலிலும் தகவல் தெரிவித்திருந்தேன். ஆனால், உரிய பதில் அவர்களிடமிருந்து வராததால் சக விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களோடு இணைந்து சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் கடந்த ஜனவரி 10ம் தேதி உண்ணாவிரதம் இருந்தேன்.

அதன்பிறகு என்னையும் மற்ற விநியோகஸ்தர்களையும் தொடர்பு கொண்டு நடிகர் ரஜினிகாந்தின் பிரதிநிதியான திருப்பூர் சுப்பிரமணி என்பவர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மொத்த இழப்பான 37.5 கோடி ரூபாயில் முதல் கட்டமாக டெபாசிட் அடிப்படையில் திரையிட்டவர்களுக்கென்று 12.5 கோடி நிவாரணம் வழங்குவது என்றும், MG அடிப்படையில் திரையிட்டவர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு படம் நடித்து கொடுத்து நஷ்டத்தை சரிகட்டுவார் என்றும் வாய்மொழியாக உத்தரவாதம் அளித்தார்.

இதனை நம்பி மார் 20ம் தேதி 35,00,000 ரூபாய் பணத்தை முதல் கட்ட நிவாரணமாக பெற்று திரையரங்க உரிமையாளர்களுக்கு கொடுத்தேன். பின்னர் ஏப்ரல் 29ம் தேதி ஒரு கோடியே 4 லட்சம் ரூபாயை திருச்சி திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்திற்கு அனுப்பி வைத்தனர். நான் பெற்று கொண்ட ஒரு கோடியே 39 லட்சமும் டெபாசிட் அடிப்படையில் திரையிட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

MG அடிப்படையில் திரையிட்டு நஷ்டமடைந்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீடு தொகை ஒரு கோடியே 75 லட்சம் ஆகும். என்னுடைய முதலீடு ஒரு கோடியே 25 லட்சம் ஆகும்.

தமிழகம் முழுவதும் டெபாசிட் அடிப்படையில் திரையிட்டவர்களின் பணத்தை மட்டும் திருப்பித்தருமாறு பஞ்சாயத்து பேசிய திருப்பூர் சுப்ரமணி கூறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஆனால் MG அடிப்படையில் திரையிட்டவர்களுக்கும், எங்களுக்கும் நிவாரணமாக கால்ஷீட் தருவதாக கூறியதை தற்போது மறுத்துவரும் திருப்பூர் சுப்ரமணி எங்கள் இரு தரப்பினருக்கும் நஷ்ட ஈடு வழங்க முடியாது என்று தற்போது தெரிவித்துள்ளார். இது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது.

1992ம் ஆண்டு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடையே சலசலப்பு ஏற்பட்டு 3 நாட்கள் திரையரங்குகள் மூடப்பட்டதால் அப்போதைய முதல்வரக இருந்த ஜெயலலிதா அவர்களின் தலையிட்டதன் பேரில் அப்போதைய உள்துறை செயலாளர் முன்னிலையில் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின்படி மினிமம் கியாரண்டி அடிப்படையில் திரையிடக்கூடாது என்றும் வசூலாகும் தொகையை சதவீத அடிப்படையில் மட்டுமே பிரித்துக் கொள்ள வேண்டும் எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் கலைப்புலி தாணு, திருப்பூர் சுப்ரமணியம் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.

ஒப்பந்தப்படி அனைத்து திரையரங்குகளையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும். மேலும் திரைத்துறையில் இது போன்ற பிரச்சினைகள் ஏதும் எழுமாயின் அதனை அரசு அமைத்த கமிட்டி மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும் என 1994ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதாவால் அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘லிங்கா’ படத்தின் இழப்பை ஈடுகட்ட தயாரிப்பாளர் கொடுத்த 12.5 கோடி ரூபாயை அரசு அமைத்த கமிட்டியின் கவனத்திற்கு கொண்டு வராமல் நடிகர் ரஜினிகாந்தின் பிரதிநிதியான திருப்பூர் சுப்ரமணி தன்னிச்சையாக செயல்பட்டு ஒருதரப்பு மட்டும் பயனடையும் வகையில் பணத்தை பிரித்து கொடுத்துள்ளார். கோவை ஏரியாவில் அவருடைய கட்டுப்பாட்டில் உள்ள பல திரையரங்குகளில் டெபாசிட் அடிப்படையில் ‘லிங்கா’ படத்தை திரையிட்டு நஷ்டமைடந்தனர் என்பதால் அவருக்கு முழு நிவாரணம் கிடைக்கும் வகையில் ஒருதலைப்பட்சமாக அவர் நடந்து கொண்டுள்ளார் என்பது தெரிய வருகிறது.

அவரின் முடிவால் MG அடிப்படையில் தமிழக முழுவதும் திரையிட்டு நஷ்டமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட திரையிரங்கு உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் ஒரு ரூபாய் கூட நிவாரணம் பெறாமல் மிகுந்த தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே இந்த விவகாரத்தில் தலையிட்டு அரசாணைப்படி கமிட்டி அமைத்து எங்களுக்கு உரிய நிவாரணம் பெற்று தரும்படி கேட்டுக் கொள்கிறேன்

—————————————————-

மேற்கண்ட புகார் மனுவை சிங்காரவேலன் அனுப்பியுள்ளார் .