வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை; வெறும் இசை பாடலாகாது : எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேச்சு!

வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை ; வெறும் இசை பாடலாகாது என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசினார்.

 திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நூற்றாண்டு விழா நேற்று மாலை சென்னை பி.டி.தியாகராயர் அரங்கில்  பெற்றது.இவ்விழாவை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ரசிகர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள்.

விழாவில் பின்னணிப் பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் , பி.சுசீலா , வாணி ஜெயராம், டி.எல்.மகாராஜன் , கவிஞர்கள் பூவை. செங்குட்டுவன் , பிறை சூடன் , நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் , மலேசியா டத்தோ வசீர் ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

விழாவில் எஸ்.பி.பாலசுப்ரமணியம்  பேசும் போது ,

” இவ்விழாவை நடத்தும் எம்.எஸ்.வி. யின் இசை ரசிகர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். மாமா கே.வி.மகாதேவன் அவர்கள் பெரிய இசைமேதை மட்டுமல்ல மிகச் சிறந்த மனித நேயம் மிக்கவராக இருந்தார். அவர் கலைஞர்களின் மனம் கோணாமல் வேலை வாங்கினார் .அவருடன் ஈருடல் ஓர் இதயம் போலிருந்தவர் புகழேந்தி அவர்கள் .

எனக்கு ஸ்வர ஞானம் கிடையாது. கேள்வி ஞானம் மட்டும் தான் .நான் எல்லாம் சங்கராபரணம் படத்தில் பாடினேன் என்றால் அந்த ஞானம் ,அது அவர் போட்ட பிச்சை என்பேன். எனக்கு எது வருமோ அதைப் பாடக் கொடுப்பார்.அவர் கவிஞர்களை மதிப்பவர். வார்த்தைகள் எழுத வைத்து மெட்டு போட்டவர்.பாட்டுக்குத்தான் மெட்டு என்பார்.

நான் சொல்கிறேன் அவர் சொன்னது சரிதான். ஒரு பாட்டுக்கு பெயரே அதன் வார்த்தைகள் தான், வார்த்தை இல்லாமல் பாட்டு ஏதய்யா? வார்த்தை இல்லாமல் வெறும் இசை பாடலாகாது. வெறும் ததா தா…. என்று  வரிகள் இல்லாமல்  வெறும் ராகம் பாட முடியுமா?

சிலரைப்  பெரிய இசை மேதைகள் என்பார்கள். யாரையும் மதிக்க மாட்டார்கள். அருகில் யாரையும் சேர்க்க மாட்டார்கள் மனிதாபிமானம் இல்லாமல் இருப்பார்கள். ஆனால் மாமா கே.வி.எம். சிறந்த மனிதாபிமானி. பல பேருக்கு வாழ்வு கொடுத்தவர். நான் எடுப்பார் கைப்பிள்ளை .என்னைப் பலரும் அன்பு காட்டி வளர்த்து இருக்கிறார்கள். அவர்களில் கே.வி.எம். முக்கியமானவர். உரிமையோடு என்னை அன்புடன் நடத்தி வளர்த்தவர். ” இவ்வாறு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசினார்.

விழாவில் கே.வி.மகாதேவன் குழுவில் பணியாற்றிய கலைஞர்கள் குடும்பத்தினர் கெளரவிக்கப்பட்டனர். விழாவில் முன்னதாக சத்யாவின் கீதாஞ்சலி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.