விஜய், அஜீத்துக்கு கதை ரெடி : சுசீந்திரன்

SUSEENDRAN_1_866767gதமிழ்ச்சினிமாவில் நம்பிக்கை தரும் இயக்குநர்களில் சுசீந்திரனும் ஒருவர்.

இதுவரை அவர் எட்டுப் படங்களை இயக்கியுள்ளார். 

விஷால் நடித்துள்ள ‘பாயும்புலி’ சுசீந்திரனின் எட்டாவது படம். இது செப்டம்பர் 4-ல் வெளியாகிறது.

சுசீந்திரனைச் சந்தித்த போது..!

வெளிவரவிருக்கும் ‘பாயும்புலி’ என்ன மாதிரியான படம்?

இது ஒரு காப் ஸ்டோரி. அதாவது போலீஸ் சம்பந்தப் பட்டகதை. விஷால் ஏற்கெனவே போலீஸ் கதையில் நடித்திருந்தாலும் இதில் விஷால்  வேறுபட்டுத் தெரிவார்.

போலீஸின் கம்பீரம் மற்றும் உணர்ச்சிகளை காட்டும் கதை. தன் மீது கை வைத்தால் சாதாரண ஆளே சும்மா விடமாட்டான் போலீஸ் மீது கை வைத்தால் என்னாகும் என்று சொல்கிற கதை. விஷால் இதில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்து இருக்கிறார்.இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில்ஒரு நடிகர் நடித்திருக்கிறார். படம் பார்ப்பவருக்கு சர்ப்ரைசாக இருக்கும்.

‘பாண்டியநாடு’ விஷால் ,’பாயும்புலி’ விஷால், என்ன வேறுபாடு ?

.’பாண்டியநாடு’ படத்தில்  விஷால் பயந்த சுபாவம் கொண்டவராக வருவார். இதில் அதற்கு நேர் எதிர். இரண்டுமே மதுரைப் பின்னணிக்கதைதான்.இருந்தாலும் படத்தின் முதல் பத்து நிமிடத்திலேயே வேறுபாட்டை உணரமுடியும். இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் முற்றிலும் புதிய விஷாலை உணரமுடியும். 
.’பாண்டியநாடு’ படம் இயக்கிய போது எது சொன்னாலும் விஷால் எப்படி எடுத்துக் கொள்வாரோ என்கிற தயக்கம்  என்னிடம் இருந்தது. இதில் அப்படியில்லை.நான் விரும்புகிறதை தயங்காமல் கேட்கிற அளவுக்கு நெருக்கமும் புரிதலும் வந்து விட்டன.

இது உண்மைக் கதையா?


இதைக் கற்பனையாகவே எடுத்து இருக்கிறோம். எந்தக் கதையும் யாரையாவது இது நம் கதைதான் என்று சொல்லவைக்கும் அல்லவா? ஏனென்றால் கற்பனையைவிட சிலநேரம் உண்மை நம்ப முடியாதபடி இருக்கும் இது கற்பனைக் கதைதான், ஆனால் எங்கேயோ கேட்ட கதை போல,பார்த்த கதைபோலத் தோன்றலாம். 

susee14எடுத்த எட்டுப் படங்களில் என்ன உணர்கிறீர்கள்?

எட்டும் எட்டு மாதிரியான அனுபவங்கள் எட்டு மாதிரியான  களங்கள். ஒவ்வொரு பட அனுபவமும் சுவாரஸ்யமானது.அந்த அனுபவங்கள்  எனக்குள் நிறைய பாடங்கள் கற்றுக் கொடுத்தவை. எட்டுப் படங்களில் நிறையவே தெரிந்து கொண்டிருக்கிறேன்.

இந்தப் படங்களில் பரவசம் தந்தது எது?


நிச்சயமாக என் முதல் படமான ‘வெண்ணிலா கபடி குழு ‘ தான். உதவி இயக்குநராக இருக்கும் போது நமக்குப் படம் வருமா? வராதா?அதை நினைத்த மாதிரி எடுக்க முடியுமா? வெளிவருமா? வெற்றி பெறுமா? போன்று கேள்விகள் ஏக்கங்கள் இருக்கும். போராட்டங்கள் இருக்கும். அப்படி முதல் பிரசவமாய் வெளிவரும் முதல்படமே முதல் பரவசம். எனக்கு அப்படிப் பரவசம் தந்த படம் ‘வெண்ணிலா கபடி குழு ‘தான். அதன் திருப்தி ,பெருமை, மகிழ்ச்சி, பூரிப்பு, பெருமிதம் தனி., கனவு நிறைவேறிய அந்த  பரவசத்தை வேறு படங்கள் தந்ததில்லை.இனியும் தராது. 

கதைகளை எப்படி உருவாக்குகிறீர்கள்?


முதலில் திரைக்கதையை தயார் செய்தபிறகுதான் யார் நடிப்பது யார் தயாரிப்பது என்று அடுத்த கட்டத்துக்குச் செல்கிறேன். ஆனால் ‘பாயும்புலி’ மட்டும் விஷால்தான் கதாநாயகன் என்று மனதில் வைத்துக் கொண்டு பிறகு கதை எழுதினேன். இப்படி எழுதுவது ஒரு வகையில் சிரமம்தான். எது யோசித்தாலும் அவரது கதாநாயக பிம்பம் கண்முன் நிற்கும். ‘பாண்டியநாடு’ வெளியாகும் முன்பே இந்தப் படத்துக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டார். எனவே அவருக்காக கதை எழுதினேன்.

சொந்தக்கதை தவிர்த்து மற்றவர் கதைகளில் 2 படங்கள் இயக்கி உள்ளீர்கள். அந்த இரண்டுமே ஓடவில்லையே?


மற்றவர் கதைகளில் எடுத்ததில் ‘அழகர்சாமியின் குதிரை’ ஓடவில்லை என்றாலும் தேசிய விருது பெற்றது. ‘ராஜபாட்டை’ ஓடவும் இல்லை. பெயரும் இல்லை. ஒரு கட்டத்தில் . ‘ராஜபாட்டை’  படப்பிடிப்பின் போதே இது சரியாக வராது என்று எனக்கே தோன்றியது.

அடுத்த கதை தயாராகிவிட்டதா? யாருக்கான கதை?


பொதுவாக நான் கதை திரைக்கதை உருவாக்க நாலைந்து மாதங்கள் எடுத்துக் கொள்வேன்.
அடுத்த கதை தயாராகி விட்டது. இது , மோகன்பாபு, பவன் கல்யாண் மாதிரி நடிகர்களுக்கான கதை. 
என் படங்களில் எப்போதும் ஒரு செண்டிமெண்டல் டச் இருக்கும். எவ்வளவோ காட்சிகள் இருந்தாலும் ஏதாவது ஒரு காட்சியாவது கண்கலங்க வைக்க,ஒருதுளி கண்ணீர் சிந்தவைக்க வேண்டும். கண்ணோரம் நீர் கசியவைக்க வேண்டும்; நீர் கசிய வைக்கும் அப்படி.வைத்தால்தான் அது சினிமா ..செண்டிமெண்ட் இல்லாமல் சினிமா இல்லை. அப்படி இப்படத்திலும் காட்சிகள் இருக்கும்.

சினிமா சிரமமா?


சினிமா சிரமம்தான் உதவி இயக்குநராக இருந்த போது ஒரு வகையான போராட்டம்   என்றால் முதல்பட வாய்ப்பின் போது இன்னொரு வகையான போராட்டம் ஒரு படம் வெற்றி பெற்றால் வேறுவகை, வெற்றிகளை தக்க வைக்க இன்னொருவகை என்று போராட்டமும் பதற்றமும் தொடர்ந்து கொண்டே வரும்.

நான் உதவி இயக்குநராக 11 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். பல மாதிரி அனுபவம் பெற்று இருக்கிறேன். அதனால் போராட்ட ம் எதையும் எதிர் கொள்ளும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. திடீரென இயக்குநர் ஆனவர்களுக்கு இது இருக்காது.

நண்பர்களுக்கு படஇயக்குநர்  வாய்ப்பு கொடுத்து தயாரிக்கிறீர்களே?


என்னுடன் ஒரே அறையில் 11 ஆண்டுகள் இருந்தவர் ரமேஷ் சுப்ரமணியன். அவருக்காக ‘வில் அம்பு’ படம் தயாரிக்கிறேன். ‘வீரதீரசூரன்’ கதையை நண்பர் சங்கர் தயாளுக்காக கொடுத்திருக்கிறேன்.
– நமது நிருபர்