விமலின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்கும் சிங்காரவேலன்..!

கடந்த ஜனவரியில் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன்பிறகு வெளியான படங்கள் கூட தியேட்டரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையிலும், போட்டிக்கு புதிதாக பல படங்கள் வெளியான நிலையிலும் ‘மன்னர் வகையறா’வுக்கான வரவேற்பு இன்னும் குறையவே இல்லை என்கிறார்கள் வினியோகஸ்தர்கள்.

மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய விமலும், படத்தை இயக்கிய பூபதி பாண்டியனும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும் இதன் பின்னணியில் வெற்றிக்கான முக்கிய தூணாக இருந்துவருபவர் தான் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்கார வேலன். குறிப்பாக ‘மன்னர் வகையறா’ பட ரிலீசின்போது விமலின் ‘ஜன்னலோரம்’ பட இழப்பீடு விவகாரம் தலைதூக்க, தனது கையில் இருந்து 2 கோடி ரூபாய் கொடுத்து எந்தவித சிக்கலுமின்றி ‘மன்னர் வகையறா’ வெளிவர உதவினார் சிங்காரவேலன்.

அடுத்ததாக விமலின் நடிப்பில் தயாராகிவரும் ‘கன்னிராசி’ படத்தை வெளியிடும் உரிமையையும் சிங்காரவேலனே வாங்கியுள்ளார். படம் மார்ச் மாதம் வெளியாகிறது.

அதுமட்டுமல்ல, இனி விமல் நடிக்கும் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் கொடுத்து உதவிக்கரமும் நீட்ட முன்வந்துள்ளார் சிங்காரவேலன். மேலும் அப்படி தயாராகும் விமலின் படங்களை வெளியிடும் உரிமையையும் தானே வாங்கிக்கொள்ளவும் செய்கிறாராம் சிங்காரவேலன்.