‘விழித்திரு’ விமர்சனம்

 சென்னை  மாநகரத்தில்  ஒரே இரவில் நடக்கும் கதைதான்  ‘விழித்திரு’ .

நான்கு வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறுகதைகள், ஒரு புள்ளியில் இணைவதுதான் படக்கதை. நிஜத்தில்ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாத மனிதர்கள். ஆனால், சூழ்நிலை இவர்களை ஒன்றாக இணைக்கிறது. கண்ணுக்குத்தெரியாத வகையில் மாயமான தொடர்பையும் இவர்களுக்குள் ஏற்படுத்துகிறது.

கதை பயணித்து ஒரு புள்ளியில் சேரும் போது விறுவிறுப்பு கூடிவிடுகிறது.

ஊருக்கு செல்லும் கிருஷ்ணா தனது பணத்தை தொலைத்துவிடுகிறார். பணத்திற்காக ஊருக்கு செல்ல  இரண்டு மணி நேரம் டிரைவர் வேலை செய்கிறார்.அவர் காரில் வரும் நிருபர் ஒருவரை அமைச்சரின் ஆட்கள் சுட்டுக் கொல்கிறார்கள்.. கொலையை பார்த்த சாட்சியாகிறார் கிருஷ்ணா.  அவரைக்கொலைக்கும்பல் துரத்துகிறது.

 பார்வையற்றவரான வெங்கட் பிரபு .தனது மகளைத் தொலைத்து விட்டு தேடுகிறார். 

திருடர்களான விதார்த், தன்ஷிகா ஒரு பக்கம் தொழில் செய்கிறார்கள்.

பணக்கார வாலிபன் ராகுல் ஒரு பக்கம் காரில் சுற்றும் போது பிரேக் டவுன் ஆகி சிக்கல்.

 இப்படி வெவ்வேறு பிரச்சினைகளால் சென்னையில் இரவில் சுற்றிக் கொண்டிருக்கும் இவர்கள், இறுதியில் கிருஷ்ணாவுடன் இணைகிறார்கள்.அவரது நிலையறிந்து, அவரைக்  காப்பாற்றவும் முயற்சிக்கிறார்கள். அதை அவர்கள் செய்தார்களா இல்லையா, அவர்களது பிரச்சினைகள் தீர்ந்ததா, என்பது தான் க்ளைமாக்ஸ்.

ஒரே இரவில் நடக்கும் கதையம்சம் கொண்ட, இது போன்ற படங்கள் சில  வந்திருந்தாலும், இயக்குநர் மீரா கதிரவனின் விறுவிறுப்பான திரைக்கதையும் சுவாரஸ்யமான காட்சிகளும் நம்மை  இருக்கை   நுனிக்குத் தள்ளுகின்றன.

கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா, வெங்கட்பிரபு, ராகுல் என்று அனைத்து நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்திற்கு  ஏற்ற விதத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் விஜய் மில்டன், ஆர்.வி.சரவணன் ஆகியோர் இரவு நேர சென்னையை பிரமாதமாக படமாக்கியிருக்கிறார்கள். சத்யன் மஹாலிங்கத்தின் பின்னணி இசை படத்திற்கு பலம்.

படத்தில் இடம்பெறும் நான்கு கதைகளும், கதாபாத்திரங்களும் இறுதியில் ஒரே கோட்டில் சந்திக்க போகிறார்கள், என்பது ஆரம்பத்திலேயே ரசிகர்களுக்கு தெரிந்துவிடுகிறது.என்றாலும் அது எப்படி நிகழப் போகிறது, என்பதற்காகக்காத்திருக்கலாம். அவ்வகையில் திரைக்கதையையும், காட்சிகளையும் இயக்குநர் மீரா கதிரவன் சுவாரஸ்யமாக அமைத்திருக்கிறார்.

வெங்கட் பிரபு கதை கொஞ்சம் சினிமாத்தனம்.

மிகை நடிப்போடு தம்பி ராமையா வரும் காட்சிகள் இழுவை அறுவை ரகம்.

டி.ராஜேந்தரை ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆட வைத்தது வணிகத்திணிப்பு. 

இவை போன்ற சிலவற்றை சரி செய்திருந்தால் படத்தின் வேகம் கூடியிருக்கும்.
மொத்தத்தில், ‘விழித்திரு’ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு படமாக உள்ளது எனலாம்.