விவசாயிகளின் போராட்ட முறைகளில் மாற்றம் வேண்டும் :விஜய்சேதுபதி பேச்சு!

Photos (6)இம்ப்ரெஸ் ஃபிலிம்ஸ் சார்பில் கத்தார் பன்னாட்டு நண்பர்கள் மற்றும் எஸ்.கவிதா இணைந்து தயாரித்து, பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கியிருக்கும் ‘கொலை விளையும் நிலம்’ ஆவணப்பட அறிமுக விழா  பிரசாத் லேபில் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் நிகழ்ந்துகொண்டிருக்கும் விவசாயிகள் சாவுகளையும் விவசாயத்துக்கு ஏற்பட்டிருக்கும் இன்னல்களையும் விரிவாக பேசியிருக்கும் ‘கொலை விளையும் நிலம்’ ஆவணப்படம் முதலில் திரைத்துறையினர், பத்திரிகையாளர்கள் பார்வைக்கு திரையிடப்பட்டது.

நடிகர்கள் விஜய்சேதுபதி, ஜிவி பிரகாஷ், மூத்த இயக்குநர் பாக்யராஜ், இயக்குநர்கள் என்.லிங்குசாமி, பாலாஜி சக்திவேல், சீனு ராமசாமி, ராஜு முருகன், எழில், சுப்ரமணிய சிவா, ராகவன், தாஸ் ராமசாமி, ’கணிதன்’ சந்தோஷ், ’மெட்ரோ’ ஆனந்த், இசையமைப்பாளர் ஜோஹன் ,தயாரிப்பாளர்கள் முருகராஜ், சக்திவேல், தனஞ்செயன், பூச்சிமுருகன் விவசாய தொழிலாளர் சங்க தலைவர் வெ.ஜீவக்குமார், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பிஆர்.பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

50 நிமிடங்கள் ஓடிய கொலை விளையும் நிலம் ஆவணப்படம் பார்த்தவர்களை கண்கலங்க வைத்தது.

முதலில் பேசிய சீனு ராமசாமி ‘இந்தக் காட்சிகளுக்கு முன்பாக எனக்கு பேச்சே வரவில்லை. உலக அரங்கில் இந்தியாவுக்கு விவசாய நாடு என்ற அடையாளம் தான் இருக்கிறது. அந்த விவசாயத்துக்கு அடிப்படையே விவசாயிகள் தான். அவர்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாவது பெரிய அவலம். இதனை யாருக்கும் பயப்படாமல் துணிச்சலாகவும் தெளிவாகவும் சொல்லியிருக்கும் இயக்குநருக்கு என் பாராட்டுகளும் நன்றிகளும்.

ஏறக்குறைய விவசாயிகளின் எல்லா பிரச்னைகளையும் இந்த ஆவணப்படம் பேசுகிறது. ஒரு விஷயத்தை படிப்பதை விட காட்சிப்படுத்தும்போது அந்த விஷயத்தின் வீரியம் அதிகமாகும். அப்படி காட்சி ஊடகத்தின் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியிருக்கிறது இந்த கொலை விளையும் நிலம் ஆவணப்படம். இந்த படம் காவிரி பிரச்னையின் அரசியலை விளக்குகிறது. விவசாயத்தை அழித்து விவசாயிகளை விரட்டி விட்டு அங்கே ரசாயனத்தை எடுக்க முயற்சிக்கும் வஞ்சக அரசியலை அழகாக விளக்கியிருக்கிறார் இயக்குநர்.

இந்த நாட்டில் ஒரு பல்பு தயாரிப்பவனுக்கு கூட தான் உற்பத்தி செய்யும் பொருளுக்கு தானே விலை நிர்ணயம் செய்ய முடிகிறது. ஆனால் உணவு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளால் தங்கள் விளைபொருளுக்கு விலை நிர்ணயிக்க முடியவில்லை. இடைதரகர்கள் தான் விவசாயி உற்பத்தி செய்யும் பொருளுக்கு விலை நிர்ணயம் செய்கிறார்கள். நாற்பது ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பிரச்னையை நமக்கு அடுத்த தலைமுறை கையில் எடுத்து தீர்வுக்கு வழி சொல்கிறது. இப்போதாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும்.

சுப்ரமணிய சிவா ’நான் ஆரம்ப காலத்தில் உர விற்பனை டீலராக பணிபுரிந்திருக்கிறேன். எனவே விவசாயத்திற்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடனும் தண்ணீரும் தான் இன்றைக்கு விவசாயிகளின் பெரிய பிரச்னை. இன்று விதைக்கும்போதே தண்ணீர் இருப்பது இல்லை. இந்தியாவில் நடந்த பசுமை புரட்சி தான் மூன்றாம் உலகப்போர். அதில் தான் விவசாயிகள் அழிந்தனர். விவசாயம் சிதைக்கப்பட்டது.இந்த படத்தை பார்க்கும்போது அழுதுகொண்டே இருந்தேன். இறந்தவர்கள் அனைவருமே நமது உறவினர்கள். ஆண்டுதோறும் இழப்பு வருவதால் விவசாயத்தை கைவிட்டு விடலாமா என்று என் பெற்றோரே என்னிடம் கேட்கிறார்கள். இங்கே விவசாயிகளுக்கு யாருடைய ஆதரவும் இல்லை.

பத்திரிகையாளர்களாகிய நீங்கள் இந்த ஆவணப்படத்தை அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், அமைச்சர்கள், அதிகாரிகளை பார்க்க செய்யுங்கள்.போதும்’

எழில்:  ‘நானும் டெல்டா பகுதியை சேர்ந்தவன் தான். இருபது ஆண்டுகளுக்கு ஒருமுறை எங்கள் பகுதியில் பஞ்சம் வரும். ஒவ்வொரு முறை பஞ்சம் வரும்போதும் பேசுவோம். பின்னர் விட்டுவிடுவோம். ஒவ்வொரு பஞ்சத்தின் போதும் நிறைய உயிரிழப்புகளை சந்திக்கிறோம். ஆனால் அரசியல்வாதிகளோ ஊடகங்களோ இதற்கு முக்கியத்துவம் தருவதில்லை. இது ஒரு சாபக்கேடாகவே நீடிக்கிறது. டெல்டா பகுதியில் பெரும்பாலும் அறியாமையில் இருக்கும் அதிகம் படிக்காத விவசாயிகள் தான் வாழ்கிறார்கள்.1986 பஞ்சம் வந்தபோது அப்பாவின் மளிகைக்கடையில் மக்கள் அதிகமாக அரிசியைத் தான் கடனாக வாங்குவார்கள். இந்த ஆவணப்படம் அந்த காலகட்டத்தை எனக்கு நினைவுபடுத்தியது. எது எதற்காகவோ போராடுகிறோம். ஆனால் உண்மையில் பெரிய போராட்டம் தேவைப்படுவது இதற்குதான். ஆனால் இதைத் தொட்டால் வேறு ஒரு பிரச்னையை காட்டி திசைதிருப்பிவிடுவார்கள். ஒரு ஆழமான விஷயத்தை அற்புதமாக படைத்திருக்கிறார் இயக்குநர். இதை பொதுமக்களிடம் கொண்டு செல்ல என்ன உதவிகள் தேவைப்பட்டாலும் செய்ய தயாராக இருக்கிறோம். இந்த ஆவணப்படம் மூலம் ஒரு விடிவு வரும் என நம்புகிறேன்’
இணை தயாரிப்பாளர் எஸ்.கவிதா ‘இதே பிரசாத் லேபில் தொடங்கப்பட்டதுதான் இந்த ஆவணப்படம். ராஜீவ் காந்தி சொன்னபோது இது சரியாகுமா? என்று சந்தேகம் வந்தது. ஆனால் அவர் தைரியம் தந்ததோடு உடனே தொடங்கினார். ராஜீவ் சமூகம் தொடர்பான கட்டுரைகள் எழுதியவர். எனவே எனக்கு நம்பிக்கை இருந்தது. ஜிவி பிரகாஷிடம் பாடலுக்கு இசையமைக்க கேட்டோம். அந்த பிசி நேரத்திலும் உடனே ஒப்புக்கொண்டார். அடுத்த மூன்றே நாட்களில் பாடலை பதிவு செய்து அனுப்பினார். சமுத்திரக்கனியிடம் குரல் கொடுக்க சொன்னோம். ராஜீவின் எழுத்தை படித்துவிட்டு அதில் எந்த மாற்றமும் சொல்லாமல் பாராட்டியதோடு குரல் கொடுத்தார். ராஜு முருகன் மாதிரியான ஒரு ஆள் தான் பாடல் எழுத வேண்டும் என்று ராஜீவ் ஆசைப்பட்டார். அவரிடமே கேட்டோம். நல்ல பாடல் ஒன்றை கொடுத்தார். இந்த தயாரிப்பு நிறுவனத்துக்கு டிசைன் செய்து கொடுத்த மதன் கார்க்கிக்கு என் நன்றிகள். பின்னணி இசையமைத்த ஜோஹனுக்கும் நன்றிகள். இதில் அரசியல் சார்பு இல்லை. முழுக்க முழுக்க மக்களுக்கான படம். பேருக்காக செய்யவில்லை. ஊருக்காக செய்தது. இது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். வந்திருந்து நீங்கள் தந்த ஒத்துழைப்புக்கு நன்றிகள். ’

விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர் வெ.ஜீவகுமார் : ‘மருத நிலம் மயான நிலமாக மாறிக்கொண்டிருக்கிறது. அதை எடுத்து சொல்லி நம்மை தட்டி எழுப்பும், உசுப்பி விடும் வேலையை செய்திருக்கிறார்கள். ராஜீவ் காந்தி தொடங்கியிருப்பது வெற்று கோஷம் இல்லை. தீர்வுக்கான படி. இந்த படம் திரையிடுவதற்குள்ளாகவே படத்தில் இடம்பெற்றுள்ள சில குடும்பங்களுக்கு உதவிகள் கிடைத்து விட்டன. வேடிக்கை பார்க்கும் ஆட்சியாளர்கள் மத்தியில் துணிச்சலாக படம் எடுத்து காட்டியிருக்கும் படக்குழுவுக்கு என் நன்றிகள். இதனை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு எங்களுக்கும் உங்களுக்கும் இருக்கிறது.

தயாரிப்பாளர் சக்திவேல்: ’விவசாயிகள் விவசாயத்தை நேசித்துதான் செய்வார்கள்.தஞ்சையில் இதை தொழிலாக பார்த்ததில்லை. பதிலாக தங்களை இயக்கும் சக்தியாகவே பார்ப்பார்கள். விவசாயிகளின் தேவை எதிர்பார்ப்பு பெரிதாக எதுவும் இல்லை. நிலம் விளைய வேண்டும் என்பது மட்டும் தான் அவர்கள் எதிர்பார்ப்பு. இந்த படத்தை பார்த்தபோது பத்து முறையாவது அழுதிருப்பேன். இந்த ஆவணப்படத்தை எடுக்க முயற்சி எடுத்ததே மிகப்பெரிய புரட்சிக்கான விதை தான். இலங்கை தமிழருக்காக எப்படி தமிழினம் போராடியதோ அப்படி ஒரு போராட்டத்தை இந்த ஆவணப்படம் உருவாக்கும்.

பத்திரிகையாளர் நெல்லை பாரதி:  ‘சினிமாவைப் பற்றி அத்தனை விஷயங்களும் தெரிந்திருக்கும் ராஜீவ் காந்தி வணிக ரீதியான படத்தை எடுக்க முனையாமல் இப்படி ஒரு நல்ல பதிவை ஆவணப்படமாக்கியதற்கு சினிமா பத்திரிகையாளர் சங்கம் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். எந்த சாயம் வெளுத்தாலும் நிவர்த்தி செய்துவிடலாம். ஆனால் விவசாயம் வெளுத்துவிட்டால் நாம் விளங்க மாட்டோம்’
Photos (16)பூச்சி முருகன் : ‘லாபத்தை கருதாமல் ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்க எடுக்கப்பட்ட படம் இது. நிச்சயம் மக்களின் வரவேற்பை பெறும். அரசு விவசாயிகளின் மரணங்களை இயற்கை மரணங்கள் என்கிறது. ஆனால் விவசாயிகளின் மரணங்கள் அத்தனையும் கொலைகள் என்பதை ஆதாரங்களுடன் இந்த ஆவணப்படத்தில் சொல்லியுள்ளார் ராஜீவ் காந்தி. தயவுசெய்து இதை பத்திரிகைகளாகிய தாங்கள் மக்களிடத்தில் கொண்டுசெல்ல வேண்டும்.  கூடிய விரைவில் ஒரு நல்லது நடக்கும்.’

லிங்குசாமி : ‘என் சொந்த ஊர் ராமநாதபுரம். பஞ்சம் பிழைக்கவே தஞ்சாவூர் வந்தோம். ஆனந்தம் படத்தில் ஒரு காட்சியில் வறண்டுபோன பாலையில் இருந்து தஞ்சையின் பசுமையை நோக்கி கேமரா நகர்வது போல காட்சி யோசித்திருந்தேன். ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லாதது போல் தெரிகிறது. அந்த அளவுக்கு டெல்டா வறண்டுவிட்டது. நான் நீச்சல் கற்றுக்கொண்டதே காவிரி ஆற்றில் தான். நான் படித்தது மூலங்குடி என்னும் ஊரில். கேரளா, லங்கோவி போன்ற பசுமையை அங்கே காணலாம். கனவுலகில் இருப்பதுபோல இருக்கும். ஆனால் இப்போது ஊர்ப்பக்கம் போனால் நான் நம்ப முடியாத அளவுக்கு காய்ந்துபோய் கிடக்கிறது. ஊரில் விவசாயத்துக்கு ஆளே கிடைக்கவில்லை என்கிறார்கள். இந்த விஷயங்களை பார்த்தாலும் கேட்டாலும் படித்தாலும் கூட இதுபோன்ற ஆவணப்படம் அவசியம். காட்சியாக்கும்போது ஒரு விஷயத்தின் உணர்வு அதிகமாகிறது. இன்னும் கொஞ்சம் நீளம் மட்டும் குறைத்திருக்கலாம். இப்படி ஒரு பதிவு செய்த க.ராஜீவ் காந்திக்கும் தயாரித்தவர்களுக்கும் என் பாராட்டுக்கள். இதற்கு பாராட்டுவதா கண்ணீர் விடுவதா என்றே தெரியவில்லை. அனைவர் சார்பாகவும் க.ராஜீவ் காந்திக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’.

பிஆர் பாண்டியன்:  ‘நவம்பர் 4 ஆம் தேதி தஞ்சை டெல்டாவில் விவசாயி தற்கொலை துவங்கியது. அன்றே அடுத்த மரணம் நிகழ்ந்தது. அன்று தொடங்கிய விவசாயிகளின் மரண ஓலம் இன்னும் அடங்கவில்லை. அந்த மரண ஓலத்தை இளைஞர் ராஜீவ் காந்தி அப்படியே பதிவு செய்திருக்கிறார். நாம் இந்த படத்தில் பார்த்த கேட்ட அத்தனையும் உண்மை. சிறு பிசிறுகூட மாற்றமில்லை.சில குடும்பங்களின் நிலை நம்மை தூங்க விடாமல் செய்துவிடும். இந்த ஆவணப்படம் டெல்டா அல்லாத மாவட்ட மக்களுக்கும் கொண்டுசெல்லப்பட வேண்டும். விவசாயிகள் சார்பாக இவருக்கு நன்றிகள். ராஜீவ் காந்திக்கு எந்த நேரத்திலும் விவசாயிகள் துணை நிற்பார்கள்’

Photos (2)பாலாஜி சக்திவேல் : ‘ இந்த ஆவணப்படம் என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு செய்தியாக படிப்பதைவிட ஆவணப்படமாக பார்க்கும்போது அதிகமாக பாதிப்பு தந்து மனதில் பல கேள்விகளை எழுப்புகிறது. இது அரசியல் படம் இல்லை என்றார்கள். இது அரசியல் படம் தான். மக்கள் அரசியலை பேசிய படம். இயக்குநர் கடைசியாக ஒன்று சொல்கிறார். போராடாமல் எதுவும் நடக்காது. இங்கே விவசாயத்துக்காக விவசாயிகள் மட்டுமல்ல அனைவருமே போராட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருக்கிறார். இந்த படம் ஒரு புனைகதையோ, உணர்ச்சிகரமான படமோ அல்ல. அத்தனையும் உண்மை. தாய்மார்கள் விட்ட கண்ணீரும் பிள்ளைகளின் முகங்களும் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இந்த தாக்கம் நிச்சயம் பெரிய ரசாயன மாற்றத்தை உண்டாக்கும். உண்மையை சொல்ல நீளம் பிரச்னை இல்லை. சேர வேண்டிய இடத்தை சேர வேண்டும். அதுதான் முக்கியம். எனக்கு நீளம் ஒரு பிரச்னையாக தோன்றவில்லை. ஜிவி.பிரகாஷ், சமுத்திரக்கனி, ராஜு முருகன் என அனைவருமே இந்த படத்தின் அவசியத்தை உணர்ந்து உண்மையாக தங்கள் பங்களிப்பை தந்திருக்கிறார்கள். இதை பொதுமக்களிடம் கொண்டுசெல்லும் பொறுப்பு ஊடகங்களுக்கு இருக்கிறது. அதற்கு என்ன உதவிகள் வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம்’

ஜிவி.பிரகாஷ் :  ‘இது மிக முக்கியமான பதிவு. இதில் என்னுடைய பங்களிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.  இப்படி ஒரு முயற்சி எடுத்ததற்காகவே இயக்குநர் க.ராஜீவ் காந்திக்கும் கவிதாவுக்கும் பாராட்டுகள். பத்திரிகையாளர்கள் இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதில் என்னை சேர்த்துக்கொண்டதற்கு நன்றி. வலிமையாகவும் ஆழமாகவும் வரிகளைத் தந்த இயக்குநர் ராஜு முருகனுக்கு நன்றிகள். என் குழுவினரும் இந்த பாடலுக்காக மிகவும் சிரத்தை எடுத்து பணிபுரிந்தனர். பாடலை பதிவு செய்த சூர்யா, பாடகர்கள் ராஜகணபதி, அனிதா ஆகியோருக்கும் என் நன்றிகள். ஒரு நல்ல நோக்கத்துக்கான முயற்சியை பத்திரிகையாளர்கள் ஆதரிப்பீர்கள் என்று நம்புகிறேன்’
விஜய்சேதுபதி :‘ என்னை கண்கலங்க வைத்த ராஜீவ்காந்திக்கு மரியாதை கலந்த வணக்கம். இந்த ஆவணப்படம் என்னை பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வீடுகளுக்கே என்னை அழைத்து சென்று உட்கார வைத்தது. அழுதுவிட்டேன். இது யாரால் நடக்கிறது எதனால் நடக்கிறது என்று வெகுநாட்களாகவே பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நாம் போராடுவதும் போராடும் முறைகளும் எட்ட வேண்டிய காதுகளுக்கு பழகி விட்டது என்று நினைக்கிறேன். எதோ தினமும் காலையில் டிபன் சாப்பிடுவது போல வழக்கமான ஒன்றாகி விட்டது என நினைக்கிறேன். இந்த ஆவணப்படம் இன்னும் சிறிது குறைக்கப்பட்டு பெருவாரியான மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். போராடும் முறைகளிலும் புதிய மாற்றங்கள் வேண்டும். ஆட்கள் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் நம் நிலைமை மாறவில்லை. போராட்டங்களை முன்னெடுக்கும் தலைவர்கள் இந்த போராட்டங்களை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதை பற்றியும் வேறு போராட்ட வழிமுறைகளையும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டி கேட்டுக்கொள்கிறேன். மரணம் பிறர் வீட்டுக் கதவைத் தட்டும்போது கண்டுகொள்ளாமல் தான் இருப்பார்கள். ஆனால் அது நம் வீட்டுக் கதவை தட்டும்போது தான் அய்யோ அம்மா என்று அடித்துக்கொண்டு அலறுவார்கள். அதுவரை காத்திருக்காமல் இந்த ஆவணப்படம் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும்’.

இயக்குநர் க.ராஜீவ் காந்தி :  ‘நவம்பர் முதல் ஃபிப்ரவரி வரை மட்டுமே 150 விவசாயிகள் பலியானார்கள். அது இன்று 250 ஐத் தாண்டி விட்டது. விவசாயிகள் பலியை சொந்தக் காரணங்களுக்காக இறந்தார்கள் என்று அரசு அறிக்கை அனுப்பியதே நான் இந்த படத்தை எடுக்க முக்கிய காரணம். சொந்தக் காரணங்களுக்காக எப்படி மரணம் நிகழும்? ஒரு இடத்தில் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு அவர்களது தொழில் நசுக்கப்பட்டால் அது நிச்சயம் குடும்பத்தில் எதிரொலிக்கும். பெரும்பாலான குடும்ப பிரச்னைகளுக்கு பொருளாதார சிக்கல் தானே முக்கிய காரணம். அப்படி நிகழும் மரணங்களுக்கு வறட்சி தானே காரணம்? எல்லா பிரச்னைகளுக்குள்ளும் அரசியல் இருக்கிறது. அரசியலுக்குள் எல்லா பிரச்னைகளுமே இருக்கின்றன என்பதை நம்புபவன் நான். ஐந்தரை மணி நேர ஃபுட்டேஜை ஐம்பது நிமிடமாக்கியதில் எனது உயிர் நண்பன் ராஜேஷ் கண்னனுக்கும் பெரிய பங்கு இருக்கிறது. அவருக்கு நன்றிகள். இது ஆவணப்படமா இல்லை டாக்கு ட்ராமாவா என்றெல்லாம் விமர்சனங்கள் எழலாம். கவலை இல்லை. நான் விருதை குறி வைத்தோ விழாக்களை குறி வைத்தோ இந்த படத்தை எடுக்கவில்லை. மக்களிடம் இந்த உணர்வை கடத்தி அவர்களை தட்டி எழுப்பவே ஆசைப்பட்டேன். இந்த படம் உருவாகி இந்த அளவுக்கு பேசப்பட காரணமாக இருந்த கவிதா அக்காவுக்கு என் நன்றிகள்’
Photos (32)
நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய க.நாகப்பன் ‘விவசாயிகள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள், எப்படி மறைந்தார்கள், எப்படி வீழ்ந்தார்கள் என்பதெல்லாம் நமக்கு தெரியும். ஆனால் எப்படி எழப்போகிறார்கள் என்பதற்கான விதை தான் இந்த ஆவணப்படம். இந்த விதை விருட்சமாக வேண்டும். அது நம்முடைய கையில் தான் இருக்கிறது. உங்களை எழுப்புவதற்கும் உசுப்புவதற்கும் இந்த ஆவணப்படம் போதும்’

முன்னதாக நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், சினிமா பத்திரிகையாளர் சங்கம், சினிமா பிஆர்.ஓ சங்கம் சார்பில் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் சிறப்பு செய்யப்பட்டது.