கவுண்டமணி நடிக்கும் கருத்துள்ள படம் ’49 ஓ’

இதுவரை 500க்கும் மேல் படங்களில்   நடித்துள்ள கவுண்டமணி எந்தவொரு படத்தின் விழாவுக்கும் வந்ததில்லை.49 ஓ ஆடியோ விழாவுக்கு மட்டும் வந்திருந்தார்.விழாவில் சத்யராஜும் சிவகார்த்தி கேயனும் கலந்து  கொண்டு விழாவை மேலும் கலகலப்பாக்கினர்.
49 ஓ எப்படிப்பட்ட படம்? இதற்கு  பதிலாக அதில் நடித்த கவுண்டமணி  பேசினார்.அவர் பேசும் போதுIMG_0531

“இந்த படத்தின் இயக்குநர் ஆரோக்கியதாஸ் என்னிடம் வந்து கதை சொன்னார். ஒரு வருடம் அலைந்தார். ஒருநாள் நான் அவரிடம், ‘முன்னாடி விட்ருங்க. பின்னாடியும் விட்ருங்க. நடுவுல ரெண்டே ரெண்டு லைன்ல கதை சொல்லுங்க’ என்று சொன்னேன். ‘ஆறடி தாய் மண்ணு’ என்று சொன்னார். அதைக் கேட்டதும் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

‘தயாரிப்பாளர் யாரு?’ என்று கேட்டேன். ‘டாக்டர் சிவபாலன்’ என்று சொன்னார். ‘அவரை அழைச்சிட்டு வாங்க’ என்றேன். அழைத்துக் கொண்டு வந்தார். டாக்டர் சிவபாலனிடம், ‘உங்களுக்கு கதை பிடிச்சிருக்கா?’ என்று கேட்டேன். ‘பிடிச்சிருக்கு’ என்று சொன்னார். ‘தயாரிப்பீங்களா?’ என்று கேட்டேன். ‘நிச்சயம் தயாரிப்பேன்’ என்று சொன்னார். இப்போது எடுத்து முடித்துவிட்டார்.

டப்பாங்குத்து, கும்மாங்குத்து என்று படம் எடுத்துக் கொண்டிருக்கிற இந்த காலத்தில், இப்படியொரு கதையை தேர்வு செய்தற்காக அவரை மிகவும் பாராட்ட வேண்டும். முற்போக்கு சிந்தனை கொண்ட இளம்இயக்குநர் ஆரோக்கியதாஸ் மிகவும் முற்போக்கான வசனங்களையெல்லாம் எழுதியிருக்கிறார்.

இப்படத்தின் இசையமைப்பாளர் கே. அவர் பெயர் மாதிரியே ‘கே’ட்கிற மாதிரி இசையமைத்திருக்கிறார். பாடலாசிரியர் யுகபாரதி இந்த யுகத்துக்கு என்ன எழுத வேண்டுமோ அதை எழுதி இருக்கிறார். அதை தேனிசை செல்லப்பா பாடியிருக்கிறார்.

இந்த படத்தின் கதையைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால்.. 2 மணி நேர படத்தை யுகபாரதி இரண்டு வரிகளில் சொல்லியிருக்கிறார். ‘விவசாயம் இல்லைன்னா.. உலகம் ஏதுடா..? உயிர் ஏதுடா..? பல கட்டடங்கள் கட்ட வயல்காட்டைஅழிச்சாங்க’ என்று!

இதற்கு என்ன அர்த்தம்..? விவசாயமும், விவசாயிகளும் நம் நாட்டுக்கு அவசியம் தேவை. விவசாயி இல்லை என்றால் நாம் உயிர் வாழ முடியாது. நாம சாப்பிடுகிற சாப்பாட்டை யார் தருவது..? விவசாயிகள் அழியக் கூடாது என்ற புரட்சிகரமான கதையை எழுதி இருக்கிறார்கள். ஆனால், அந்த விவசாயிக்கு அந்த நிலம்தான் மானம், புகழ், உயிர், பெயர், புகழ் எல்லாம். அந்த நிலத்தை விட்டு விடக் கூடாது. அது கால் ஏக்கர், அரை ஏக்கர், முக்கால் ஏக்கராக இருந்தாலும் சரி.. அதிலே தான் அவர்கள் வாழ்க்கை. அதிலே தான் விவசாயம் பண்ண வேண்டும்.

ஒரு வருஷம் விளைச்சல் இல்லை என்றால் அடுத்த வருஷம் விளையும். ‘நல்லா விளையலை.. அதுனால நிலத்தை வித்துட்டேன்’ என்று சொல்லக் கூடாது. ஒரு வியாபாரி, தன் வியாபாரத்தில் நஷ்டமானாலும் அடுத்து வேறு வியாபாரத்தில் ஈடுபட்டு ஜெயிக்கிறான் அல்லவா.. அதுமாதிரிதான்.

அந்த விவசாயிகளைத் தேடி யார், யாரெல்லாம் வருகிறார்கள்? அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் ஓனர்கள், தொழிலதிபர்கள், கார்பரேட் கம்பெனிக்காரர்கள்…! எதுக்கு வருகிறார்கள்? துக்கம் விசாரிக்கவா..? அல்லது சந்தோஷம் கொண்டாடவா..? அந்த கால் ஏக்கர் நிலத்தையாவது வாங்கிவிடலாம் என்றுதான் வருகிறார்கள்.

சிலர் விற்கிறார்கள். அந்த இடத்தில் கட்டிடம் கட்டுகிறார்கள். அப்புறம் விளைநிலம் எங்கே இருக்கும்..? அப்புறம் எப்படி நாம் சாப்பிடுவது..? அப்படியிருக்கக் கூடாது. ‘விவசாயிகள் விவசாயிகளாகத்தான் இருக்க வேண்டும்’ என்று சொல்வதுதான் இந்த 49-ஓ திரைப்படம்.

இந்தத் திரைப்படம் விவசாயிகளைப் பற்றி சொல்லுகிற கதை. நம்மூர் விவசாயிகளைப் பற்றி மட்டுமல்ல, எல்லா ஊர் விவசாயிகளைப் பற்றியும் சொல்லுகிற கதை. இந்திய விவசாயிகளைப் பற்றி மட்டுமல்ல, அமெரிக்க விவசாயி, இங்கிலாந்து விவசாயி, ஆப்ரிக்க விவசாயியாக இருந்தாலும் சரி.. விவசாயி விவசாயிதான். இதில் வித்தியாசம் என்னவென்றால், அமெரிக்காவில் ஜீன்ஸ் பேண்ட் போட்டு விவசாயம் பண்ணுகிறான்.

நம்மூரில் வேட்டிகட்டிக் கொண்டு விவசாயம் பண்ணுகிறான். அதுதான் வித்தியாசம்! அவன் நெல் விளைவிக்கிறவனாக இருந்தாலும் சரி.. கொள்ளு விளைவிக்கிறவனாக இருந்தாலும் சரி, கோதுமை விளைவிக்கிறவனாக இருந்தாலும் சரி… உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் சரி, ஒரு விவசாயியின் நிலத்தைக் காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் மக்கள் வயிறார சாப்பிட முடியும். இதுதான் 49-ஓ திரைப்படம்.

பலதரப்பட்ட மக்கள் சொல்வார்கள்… இது ஏ கிளாஸ் படம்.. இது பி கிளாஸ் படம் என்று! ஆனால், இந்த ‘49-ஓ’ திரைப்படம் ஏ,பி,சி,டி,இ,எப், ஜி என்று இஸட் வரைக்குமான அனைவருக்கும் பொதுவான திரைப்படம். இது கிராமத்துக்கும் பிடிக்கும். சிட்டிக்கும் பிடிக்கும். அப்படிப்பட்ட படம்தான் ‘49-ஓ’. ‘49-ஓ’ மூவி இஸ் பெஸ்ட் மூவி. இதுவொரு நல்ல படம். எல்லாரும் பார்க்க வேண்டிய படம்.

அப்புறம் ‘49-ஓ’ என்றால் என்ன..? நோட்டா என்றால் என்ன..? நாம யாருக்கு ஓட்டுப்போட வேண்டும்..? ஏன் போட வேண்டும்..? எதுக்குப் போட வேண்டும்..? ஓட்டுப் போடுவதால் நமக்கு என்ன நன்மை..? ஓட்டு போடலாமா? வேண்டாமா..? இதுக்கெல்லாம் இந்தப் படத்தில அருமையான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறேன். இதுதான் ‘49-ஓ’.

நான் மறுபடியும் மறுபடியும் சொல்லுகிறேன். அதிகமாக பேச விரும்பவில்லை. ‘49-ஓ’… திஸ் இஸ் பெஸ்ட் மூவி. எல்லாரும் மிஸ் பண்ணாமல் பாருங்கள்!” இவ்வாறு கலகலப்பாகவும் கருத்தாகவும் சொல்லி முடித்தார் கவுண்டமணி.