‘வீட்ல விசேஷம்’ விமர்சனம்

அந்தக் காலத்தில் குடும்பக்கட்டுப்பாடு விளம்பரங்களில் குறிப்பிடுவார்கள் ‘மருமகன் வந்த பின்னே மாமனார் தந்தை ஆவதா? ‘என்று. அந்த ஒரு வரிக் கருத்தை கதையாக்கிக் கொண்டு தான் இந்தப் படம் உருவாகியுள்ளது. இது ஏற்கெனவே இந்தியில்
‘பதாய் ஹோ’என்ற பெயரில் வெளிவந்து பெரிய வெற்றி பெற்றது.அதுவே இப்போது ‘வீட்ல விசேஷம் ‘ என்ற பெயரில்
தமிழில் மறுஉருவாக்கம் செய்து வந்துள்ளது.
தமிழுக்காகப் பிராந்தியத் தன்மையோடு சில மாற்றங்களைச் செய்து கொண்டு உருவாகி உள்ளது. ஆர்ஜே பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் இயக்குகியுற்றனர்.

சரி படத்தின் கதை என்ன?

சத்யராஜ் ரோடு ரயில்வே ஊழியர்.அவரது மனைவி ஊர்வசி. இத் தம்பதியின் மூத்த மகன் ஆர்ஜே பாலாஜி, பள்ளி ஆசிரியர். இளைய மகன் பள்ளி செல்லும் பிள்ளை.

ஆர்ஜே பாலாஜியும், அபர்ணா பாலமுரளியும் காதலர்கள்.திருமணம் செய்துகொள்ளும் முடிவுக்கு வரும் போது, ஆர்ஜே பாலாஜியின் அம்மா ஊர்வசி கர்ப்பமடைந்து விடுகிறார்.

இத்தனை வயதுக்குப் பின் அம்மா கர்ப்பமாக இருப்பதை அறிந்து அனைவரும் பாலாஜியைக் கேலி செய்ய.. பாலாஜிக்கு தன் அம்மா, அப்பா மீது வெறுப்பு வருகிறது. அந்த வெறுப்பைக் காட்டும் நேரத்தில் அவரின் காதலும் உடைகிறது. இறுதியில் ஆர்.ஜே.பாலாஜியின் பிரச்சினைகள் எப்படி முடிவுக்கு வந்தன? என்பதுதான் இந்தப் படத்தின் கதைப் போக்கு.

அதன் பிறகு நடக்கும் நடக்கும் பல்வேறு வகையான சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்பே படம். அந்த சம்பவங்கள் கலகலப்பாகவும் சிரிப்பூட்டும் வகையிலும் இருப்பது படத்தின் சிறப்பு.

சற்றுத் தவறாக புரிந்து கொண்டால் படத்தின் நிறம் மாறி விடக்கூடிய அளவிற்கு ஒரு சர்ச்சையான உள்ளடக்கம் கொண்டது இக்கதை.

ஆனாலும் அதை மிக லாவகமாகக் கையாண்டு பார்க்கும் பார்வையாளர்களைச் சமரசப் படுத்தி விடுகிறார்கள்.மூத்தவர்களிடம் அன்பு காட்ட வேண்டும் என்ற கருத்தையும் சொல்லியிருக்கிறார்கள்.

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஆர்ஜே பாலாஜி அளவான நடிப்பு மூலம் அமர்க்களப்படுத்துகிறார். அவ்வப்போது நம்மைச் சிரிக்கவும் வைக்கிறார்.பலவகை நடிப்பு வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி மனதில் பதிகிறார். பாலாஜிக்கு ஜோடி அபர்ணா பாலமுரளி.முதிர்ச்சியான முகத்தைக் காட்டினாலும் நடிப்பிலும் முதிர்ச்சி காட்டியுள்ளார்.

சத்யராஜ் மற்றும் ஊர்வசி ஜோடி படத்திற்குப் பெரிய பலம்.படத்தின் மிக முக்கியமான வேடங்களில் இருவரும் அனாயசமாக நடித்திருக்கிறார்கள். தாத்தா ஆக வேண்டிய வயதில் அப்பாவாகும் சூழலைச் சமாளிக்கும் காட்சிகளில் சத்யராஜின் நடிப்பு திரையரங்குகளில் கைத்தட்டல் வாங்கும்.சின்ன சின்ன முக பாவனைகளில் ஊர்வசி தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கார்த்திக் முத்துக்குமாரின் ஒளிப்பதிவும், கிரிஷ் கோபாகிருஷ்ணனின் இசையும் படத்தில் இயக்குநர்களின் எண்ணத்தோடு பயணித்துள்ளன.

ஏற்கெனவே வேறு மொழியில் வந்த படத்தின் மறு உருவாக்கம் என்பது தெரியாத வகையில் தமிழுக்கு ஏற்றபடி காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர்கள் ஆர்ஜே பாலாஜி மற்றும் என்.ஜே.சரவணன் பாராட்டுக்குரியவர்கள்.இக்கதை மூலம் ‘ஐம்பதிலும் ஆசை வரும் ஆசையுடன் பாசம் வரும்’ என்ற பாடலுக்கு புதிய பொழிப்புரை எழுதியுள்ளார்கள்.

இந்த ‘வீட்ல விசேஷ’த்தை வீட்டில் உள்ள அனைவரும் சென்று பார்த்து ரசிக்கலாம்.