`வீரையன்’ விமர்சனம்

உதவாக்கரை ஒருத்தன் உதவும் கரமாக மாறுகிற கதை. அகப்பட்பதைச் சுருட்டி கிடைக்கிற காசில் குடித்து வெட்டியாகச் சுற்றும் வாலிபர் இனிகோ பிரபாகர் .அவருடன் அவரது நண்பர் மற்றும் திருநங்கை ஒருவரும் வேலையின்றி ஊர்சுற்றி வருகிறார்கள்.  குடிகாரன் என்று தெரிந்தும் அவரைக் காதலிக்கும் ஷைனி . இது ஒரு பக்கம். 

மற்றொரு பக்கத்தில் தன்னால் படித்து, ஒரு நிலைக்கு வந்த பிறகு தன்னை ஒதுக்கிய தம்பிகளிடம் தனது மகனை படிக்க வைத்து ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வருவதாக சபதமிட்டு அதனை நிறைவேற்ற போராடும் ஆடுகளம் நரேன்.

உள்ளூர் அரசியல் பிரமுகர்  வேல ராமமூர்த்தி. பள்ளிக்கு செல்லும் அவரது மகளும்,  டிரைவரும் காதலித்து வருகின்றனர். 

இந்நிலையில், வேல ராமமூர்த்தியின் மகளும், டிரைவரும் ஊரை விட்டு ஓட முயல இனிகோ பிரபாகர் அந்த டிரைவருடன் சண்டையிட்டு அவரை அடிக்கிறார். இந்நிலையில், அங்கு வரும் நரேனின் மகன் அந்த சண்டையை தடுக்கிறான். இது குறித்து வேல ராமமூர்த்திக்கு தகவல் போகிறது. நரேனின் மகன் தனது மகளை காதலிப்பதாக  நினைத்து அவனைப் பள்ளியிலிருந்து நீக்கும்படி செய்துவிடுகிறார். 

 தனது பள்ளி படிப்பு தடைபட்டதாக இனிகோ பிரபாகரை நரேனின் மகன் திட்ட, அவனை படிக்க வைப்பதாக இனிகோ வாக்கு கொடுக்கிறார். இதையடுத்து தனது தந்தைக்கு தெரியாமல் டுட்டோரியல் பள்ளியில் சேர்ந்து படிக்கிறார். 
கடைசியில் நரேனின் மகனை இனிகோ படிக்க வைத்தாரா? நரேனின் ஆசையை அவரது மகன் நிறைவேற்றினாரா? நரேனுக்கு உண்மைகள் அனைத்தும் தெரிந்ததா? அந்த காதல் ஜோடி என்ன ஆனார்கள்?  என்பதே படத்தின் மீதிக்கதை.

கோழிதிருடனாக இனிகோ பிரபாகர்அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே கோழிதிருடி ஓட ஓட துரத்தப்படுகிற காட்சி  அப்பாடா என்ன ஒரு சேசிங்.
வேலையில்லாமல் தனது நண்பர்களுடன் சேர்ந்து சேட்டை செய்யும் இளைஞனாக  அவர் நடித்திருக்கிறார். நண்பனாகவும், ஒரு அண்ணனாகவும், காதலனாகவும் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் ஷைனி கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

ஆடுகளம் நரேன் பண்பட்ட  நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இயலாமையும் ஏக்கமும் கொண்ட ஏழைத்தகப்பனாக ஆர்ப்பாட்டமின்றி அசத்தியுள்ளார்.

வேல ராமமூர்த்தி, தென்னவன் துரைசாமி, சஞ்சரி விஜய் ,கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா ,நங்கை   பிரீத்திஷாஉள்ளிட்ட மற்றவர்களும் சிறப்பாகவே நடித்திருக்கின்றனர். . 

1989ல் கதை நடக்கிறது. எனவே செல்போன் போன்ற நவீனம் எதுவும் நுழையாமல் காட்சி அமைத்துள்ளார்கள். 

தஞ்சையின் பசுமை அழகு என்றால்  ஆங்காங்கே உள்ள கோவில்கள் படத்துக்குப் புது நிறம் ஏற்றுகின்றன.படத்தின் திரைக்கதை மெதுவாகவே நகர்கிறது என்றாலும் அதையே தன் பாணி என்று எடுத்துள்ளார் இயக்குநர் எஸ்.பரீத்.

ஒரு பக்கம் தந்தை – மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் படமாக்கியிருக்கிறார்.

 உதவாக்கரையாக நினைத்து பாவித்து வரும்  ஒருவன் மனம் மாறி அவனையே குலதெய்வமாக நினைக்கும் நிலைக்கு வருகிறான் என்பதை படத்தின் மூலம் இயக்குநர் சொல்ல வந்திருக்கிறார்.  

படத்தில் சிலகாட்சிகளின் நீளம்  படத்திற்கு பலவீனம். 
எஸ்.என்.அருணகிரியின் இசையில் பாடல்கள் கேட்கும்  படி உள்பிளன. வி.முருகேசின் ஒளிப்பதிவில்  தஞ்சையின் பசுமை காட்சிகளும் 90-களில் உள்ளது போல சிறப்பாகவே வந்திருக்கிறது. ஒரு வகையில்  படம் கல்வியின் அவசியத்தைச் சொல்கிறது எனலாம்.

படத்தில் குறைகள் இருக்கலாம்.ஆனால் `வீரையன்’  எடுக்கப்பட்ட நோக்கம் குறை கூறமுடியாதது.