வீழாது சினிமா – கவிப்பேரரசு வைரமுத்து

எது மாறிக்கொண்டே இருக்கிறதோ அதுவே உயிர்ப்போடு விளங்குகிறது. சினிமா மாறிக்கொண்டே இருக்கிறது. மாற்றத்தைப் புரிந்துகொள்ளாதவர்கள் அது அழியும் என்கிறார்கள். அது தன் வடிவத்தை வாகனத்தை மாற்றிக்கொண்டே இருக்குமே தவிர அழியாது என்கிறார்கள் அறிந்தவர்கள். மாற்றத்தில் இரண்டு வகை. ஒன்று உறையும் பாலைப் போன்றது; இன்னொன்று திரியும் பாலைப் போன்றது. இரண்டும் மாற்றம்தான். உறைந்த பால் தயிராகும்; திரிந்த பால் பாழாகும். பாலுக்கு நேரும் இரு மாற்றங்களைப் போலவே சினிமாவுக்கும் நேர்ந்து நேர்ந்து போகும்.

சினிமா என்பது பெருங்கலை. தன்னைச் சுற்றியிருக்கும் சிற்றுயிர்களையெல்லாம் தன் ஆயிரங்கைகளால் அள்ளிப் புசித்துவிடும் ஆக்டோபஸ் போல, மனிதக் கூட்டம் தனித்தனியாகப் புழங்கிவந்த கலைகளையெல்லாம் உறிஞ்சி உள்வாங்கிச் செரித்தே விட்டது சினிமா. உணவுத் தேவை தீர்ந்தபோது மனிதனுக்கு உணர்வுத்தேவை வந்துவிடுகிறது. அவனது எல்லா உணர்வுகளையும் வருடிக்கொடுக்கும் வசதி சினிமாவுக்கே வாய்த்திருக்கிறது.

ஏன் சினிமா அழியாது என்கிறேன்? சினிமா என் கனவுகளைத் தன் கண்களால் காண்கிறது. நான் காணாத உலகத்தைக் காட்டி, வாழாத வாழ்க்கையை வாழவைக்கிறது. மழை பொழிகிறது – என்னை நனைக்காமலே; தீ எரிகிறது – என்னை எரிக்காமலே; யுத்தம் நடக்கிறது – என்னைக் கொல்லாமலே. யாரோ அழுகிற கண்ணீரில் நான் சலவை செய்யப்படுகிறேன்; யாரோ சிந்தும் ரத்தத்தில் நான் சுத்தமாகிறேன். உலகம் என்னைச் சுற்றுகிறது; நான் நின்ற இடத்தில் நிற்கிறேன்; அதுதான் சினிமா. சினிமாவைக் கண்டுபிடித்த விஞ்ஞானக் கடவுள்களை வணங்குகிறேன். 

ஆனால், கடந்த சில நாட்களாய்த் தூக்கம் தொலைந்து தவிக்கிறேன். ஒரு மூத்த கலைஞனின் சினிமா முற்றிலும் ஏமாற்றமுற்றது என் தலையணைகளில் ஆணி அறைந்துபோய்விட்டது. அறுந்தறுந்துபோன என் தூக்கத்தை முடிந்த மட்டும் முடிச்சுப்போடப் பார்த்தேன்; முடியவில்லை. கலையுலகில் என் முதுகுக்குப்பின்னால் தூக்கி எறிந்த 40 ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் நேர்ந்திருக்கின்றன என்பதை நின்று நிதானிக்க வேண்டிய இடத்தில் நிற்கிறோம்.

தலைமுறைகள் நகர்ந்திருக்கின்றன; விழுமியங்கள் நழுவியிருக்கின்றன; கூட்டுக் குடும்பங்கள் குலைந்திருக்கின்றன; கண்ணீர் தன் கண்களை இழந்திருக்கிறது. சாவுக்கு அழுகிறவர்கள் எள்ளி நகையாடப்படுகிறார்கள். ஒவ்வொரு வீட்டின் குப்பைக் கூடைகளில் மனித மாண்பும் சேர்ந்தே கொட்டப்படுகிறது. 

மரக்கூட்டத்திலிருந்து இலை விழுந்தாலும், மனிதக் கூட்டத்திலிருந்து தலை விழுந்தாலும் சலனமற்றுப் போய்விட்டது துய்ப்புக் கலாசாரத்தில் தொலைந்துபோன சமூகம். 

இன்னொன்று – சினிமா என்ற பிரமையை செல்போன் உடைத்திருக்கிறது. அதிலிருந்த பிரமிப்பு வெளியேறிவிட்டது. புகைப்படம் எடுக்கத் தெரிந்த ஒவ்வொருவனும் ஒளிப்பதிவாளராகிவிட்டான்; தற்படம் எடுக்கத் தெரிந்த ஒவ்வொருவனும் நடிகனாகிவிட்டான். வீடியோ எடுக்கத் தெரிந்தவன் தயாரிப்பாளன் ஆகிவிட்டான். எனவே திருவிழா முடிந்த வீதிபோலத் திரையரங்கு தீர்ந்துகிடக்கிறது. 

தமிழ்ச் சமூகத்தில் திரையரங்கு சென்று படம் பார்ப்போர் எண்ணிக்கை சரிபாதிக்கும் கீழே சரிந்திருக்கிறது. கடனைத் திருப்பித்தர வருகிறவனும், திரையரங்கில் படம்பார்க்க வருகிறவனும் அண்ணன் தம்பிகளாகிவிட்டார்கள். பெண்கள் தொலைக்காட்சித் தொடர்களில், மாணவர்கள் கணினிகளில், விடலைப் பயல்கள் செல்போன் சிருங்காரங்களில், மூத்தவர்கள் பத்திரிகைகளில், உழைப்பாளிகள் மதுக்கடைகளில் என்ற தொழில்நுட்பச் சூறையாடலுக்குப் பிறகு விசிறியடிக்கப்பட்ட ஒரு சிறுகூட்டம் மட்டுமே திரையரங்கு தேடுகிறது. அதிலும் படம் முடியும் வரைக்கும் காதலியைத் தீண்டாமல் இருப்பவன்கூட செல்போனை நோண்டாமல் இருப்பதில்லை. ஏனென்றால், திரையில் ஓடுவது வேறொருவன் கதை; செல்போனில் ஓடுவது அவன் சொந்தக் கதை.

இந்தச் சமூகம் இயங்குவது தலை வியாபாரத்தால். வாக்காளன் தலைகளை வைத்தே அரசியல் இயங்குகிறது; வாடிக்கையாளன் தலைகளை வைத்தே வணிகம் இயங்குகிறது; தொழிலாளர்களின் தலைகளை வைத்தே தொழிற்சாலை இயங்குகிறது; ரசிகனின் தலைகளை வைத்துத்தான் திரையுலகம் இயங்குகிறது. நம் நடிகர்கள் அறிவாளிகள். தமக்கென்று தயாரிப்பாளர்களையும் தலைகளையும் தக்கவைத்துக்கொள்ளும் உத்தியும் புத்தியும் உள்ளவரை அவர்கள் வெற்றிபெறுகிறார்கள். படத்தைத் தயாரிப்பதுபோல அதற்கான ரசிகர்களையும் தயாரிப்பதுதான் சந்தை மதிப்பு என்பது அவர்களுக்குப் புரிந்தேயிருக்கிறது.

பெரும்பான்மைப் படங்களுக்கு ஏன் கூட்டம் குறைகிறது? இந்தியாவில் அதிகமாய் நகர்மயம் ஆன மாநிலம் தமிழ்நாடுதான். திரைக்கொட்டகைகள் இருந்த இடத்தில் இன்று மதுக்கடைகள் இருக்கின்றன. பக்கத்து நகரத்திற்கு வண்டிகட்டிச் சென்று நாடோடி மன்னன், பாசமலர் பார்த்த பரம்பரை இன்று இல்லை. இன்று வெளிவரும் படம் ‘இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக’ அடுத்த வாரம் சின்னத் திரையில் அரங்கேறிவிடும். அதற்கு முன்னால் அவசரம் என்றால் இணையத்தில் பதிவிறக்கம் செய்தால் உள்ளங்கைக்கு வந்துவிடும். இந்த இரண்டுக்கும் சிக்காது போனால் அது பார்க்க வேண்டிய படமில்லை என்ற முடிவுக்கு மனசு வந்துவிடும். பிறகு ஏன் திரையரங்கு சென்று சிரமப்படுவது?

ஒரு காலத்தில் கோவில்களுக்கு அடுத்தபடியாய்க் காதலர் சந்திப்பு மையமாகத் திகழ்ந்தது திரைக்கொட்டகைதான். இன்று காதலர் சந்திப்பில் இருந்த அத்தனை கட்டுக்களையும் தொழில்நுட்பம் அறுத்தெறிந்துவிட்டது. எனவே அந்தத் ‘திருப்பணி’க்குத் திரையரங்கம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. 

ஓர் அதிர்ச்சியான உண்மையைச் சொல்கிறேன். ஒரு பெரிய நகரத்தில் ஒரு பழைய திரையரங்கம். அந்தத் திரையரங்கத்தை இன்னும் உயிரோடு வைத்திருப்பது பிச்சைக்காரர்கள். ஒரு 30 பிச்சைக்காரர்கள் அந்தத் திரையரங்கத்தின் இரவுக் காட்சிக்கு வாடிக்கையாளர்களாம். கட்டணஞ் செலுத்தி உள்ளே வந்து கட்டையைச் சாய்த்துவிடுவார்களாம்; விடிந்ததும் வெளியேறுவார்களாம். அந்த வாடிக்கையாளர்களை இழப்பதற்கு உரிமையாளருக்கு உள்ளம் இல்லையாம். 

எந்த மாற்றம் நேர்ந்தாலும் சினிமா இருக்கும். திரையரங்கம் என்ற ஊடகத்தை விட்டு சினிமா வெகுவிரைவில் வெளியேறிப் போய்விடும்; அல்லது திரையரங்கு வாமன அவதாரமெடுக்கும். தான் ஊற்றிவைக்கப்படும் எல்லாப் பாத்திரங்களிலும் சம்மணங்காலிட்டு அமர்ந்து கொள்ளும் தண்ணீரைப் போல, நகத்தளவு திரையிலும் தன்னை அமர்த்திக்கொள்ள சினிமா தயாராகிவிட்டது. இனி மனிதன் சொல்வதை சினிமா கேட்காது; சினிமா சொல்வதைத்தான் மனிதன் கேட்க வேண்டும்.

மாற்றத்தின் சுழற்சியில் நாம் இழக்கக்கூடாததை இழந்துவிடக்கூடாது. தமிழ் சினிமா தொழில்நுட்பத்தில் தோய்ந்த அளவுக்குக் கதைத் தேடல் நிகழ்த்தவில்லை. முன்பு கதாசிரியன் என்று ஒருவனும், வசனகர்த்தா என்று ஒருவனும் ஒன்றாகவோ தனித்தனியாகவோ இருந்தார்கள். இன்று அவர்கள் அன்றில்களைப்போல, டைனோசர்களைப் போல காணாமல் போனார்கள். மீண்டும் கதாசிரியர்கள் மாண்புற வேண்டும்.

திரைப்பாட்டு மொழிகூடத் திரிந்திருக்கிறது. சிலப்பதிகாரத்தையும், இதிகாசங்களையும், பதிகங்களையும், பாசுரங்களையும், சிற்றிலக்கியங்களையும், செவ்வியல் தமிழையும் ஒரு காலத்தில் கற்பிக்கும் கலைக்கருவியாக இருந்த திரைப்பாட்டு, இன்று இலக்கியம் வராமல் பார்த்துக்கொள்வதற்குப் பெருஞ்செலவு செய்கிறது. மீண்டும் நல்ல தமிழ் வேண்டும். இசை சப்தத்தைக் கடந்து சங்கீதமாக வேண்டும்.

கதாநாயகனுக்கும் நகைச்சுவை நடிகனுக்கும், கதாநாயகிக்கும் கவர்ச்சி நடிகைக்கும் தனித்தனியாக இருந்த உடல்மொழிகள் தேய்ந்தழிந்துபோயின. கதாநாயகனே நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகியே கவர்ச்சி நடிகையுமாகிவிட்டார்கள். இந்த மாற்றம் மீண்டும் மாற்றமடைய வேண்டும். காட்சிக் கலையில் வல்லமை காட்டுகிறார்கள் நம் படைப்பாளிகள். ஆனால், உலகப் படங்களைப் பார்ப்பது என்ற எல்லையோடு நின்றுவிடாமல், உலக இலக்கியங்களைப் பயில்வது என்ற உயரத்தையும் எட்ட வேண்டும்.  பூமியிலிருந்து தொடங்கி மீண்டும் பூமிக்கே வந்து சேரும் மழை மாதிரி, எல்லாக் கலைகளும் இலக்கியத்தில் தொடங்கி இலக்கியத்தில்தான் முடிகின்றன. 

திரைக்கலை இல்லையென்றால் மனித மனங்கள் துருப்பிடித்துப்போய்விடும். சினிமா தன் சிறு குறைகளைக் களைந்துகொண்டே சிறகடிக்க வேண்டும். குறைகளைக் களையும் திறமை எங்கள் திரைக் கலைஞர்களுக்கு உண்டு.

குழிவிழுந்த கல்லைக் குறையென்று கருதாமல் அதைத் தொப்பூழாய்ச் செதுக்கிவிடும் நுட்பமான சிற்பியைப் போல, காலத்தின் குறைகளையும் நிறைவு செய்துவிட்டால் எந்த மாற்றத்திலும் சினிமா இறந்து போகாது. சினிமா நூறாண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம். ஆனால், எப்போதும் அதன் வயது 18 தான்.