’வெல்வெட் நகரம்’ விமர்சனம்

கொடைக்கானல் மலையில் ஏற்பட்ட தீ விபத்து இயற்கையானதல்ல எனக் கோரும் நடிகை கெளரி கொல்லப்படுகிறாள். அத்வைதா எனும் நிறுவனம், மலையில் செய்த சதியை நிரூபிக்கும் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகப் பத்திரிகையாளர் உஷாவிடம் சொல்லிக் கொண்டிருக்கும்போதே கொல்லப்படுகிறார் கெளரி. ஏன் யாரால் கெளரி கொல்லப்படுகிறார் என்பதும், உஷா கெளரியின் கொலைக்கும், மலைக்கிராம மக்களுக்கு நிகழ்ந்த கொடுமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தாரா என்பதும்தான் படத்தின் கதை.

படத்தின் கதை 48 மணி நேரத்திற்குள் நடப்பதாக அமைந்துள்ளது. முதல் நாள் இரவு கெளரி இறக்க, அவர் சேகரித்த தரவுகள் அடங்கிய கோப்பினைத் தேடி பிரியா வீட்டுக்குச் செல்கிறார் பிரியா. அன்றைய இரவு, பிரியாவின் வீட்டுக்குள் நுழையும் மைக்கேல் குழுவின் தலையீடால் என்னாகிறது என்பதுதான் படத்தின் இரண்டாம் பாதி.

பிரியாவாக மாளவிகா சுந்தர் நடித்துள்ளார். அவரது கணவர் முகிலனாக பிரதீப் பெனிட்டோ ராயன் நடித்துள்ளார். இவர்களது வீட்டுக்கு, மைக்கேலாக நடித்துள்ள அர்ஜெயின் குழு வந்த பின், படம் வேறு ட்ராக்கிற்கு மாறுகிறது. டில்லியாக ரமேஷ் திலக், செல்வமாக சந்தோஷ் கிருஷ்ணா, சித்தப்பாவாக கண்ணன் பொன்னையா, ராக்கெட்டாக குமார் என மைக்கேலோடு சேர்த்து ஐவர் கொண்ட குழு அது. மேக்கப் போடுறேன் என கையில் எச்சில் துப்பி, பிரகாஷ் ராகவனின் முகத்தில் தடவுவதெல்லாம் அருவருப்பின் உச்சம். எஸ்.ஐ. குருவாக மதன் குமார் அந்த வீட்டிற்குள் வந்து ஏற்படுத்தும் குழப்பம் படத்தின் பதைபதைப்பிற்கு உதவியுள்ளது. நடிகை கெளரியாகக் கெளரவ வேடத்தில் கஸ்தூரி நடித்துள்ளார்.

பத்திரிகை நிருபராகக் களம் இறங்கும் வரலட்சுமியின் ஆரம்பம் அமர்க்களமாக இருந்தாலும், அதன் பிறகு திருடர்கள் கையில் சிக்கிக்கொண்டு மூலையில் உட்கார்ந்து விடுகிறார். சில நேரங்களில் மாடிப் படியில் ஓடுவது, அடி வாங்குவது என்று அமைதியாகி விடுகிறார். அரிஜய், ரமேஷ் திலக் உள்ளிட்ட திருடர்களாக நடித்திருப்பவர்களும், வரலட்சுமியின் தோழியாக நடித்திருக்கும் மாளவிகா சுந்தர், அவரது கணவராக நடித்திருக்கும் சந்தோஷ் கிருஷ்ணா என அனைவரும் தங்களது வேலையைச் சரியாகச்செய்திருக்கிறார்கள்.

இது கதாநாயகியை பிரதிநிதிப்படுத்தியுள்ள படம் என்றார் இயக்குநர் மனோஜ் குமார் நடராஜன். படத்தில் தெரிந்த முகம் என்றும், பிரதான பாத்திரம் என்று வேண்டுமானால் உஷாவாக நடித்திருக்கும் வரலட்சுமியின் பாத்திரத்தைச் சொல்லலாமே தவிர, வுமன்- சென்ட்ரிக் படம் எனச் சொல்ல இயலாது. வரலட்சுமி கதாபாத்திரத்தில், ஓர் ஆண் நடிகர் நடித்திருந்தாலும் கதையிலோ, படத்திலோ எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது.

பகத் குமாரின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்பட பயணித்திருக்கிறது. ஒரே வீட்டில் நடக்கும் காட்சிகளை வித்தியாசப்படுத்தியிருக்கிறார்.

இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன், படத்தில் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகள் வைத்திருக்கிறார்.ஆனால் பலனில்லை. அதற்கு முக்கிய காரணம், படத்தின் நீளம் . ஒரே பிரச்சினையை பல முறை, பல கோணங்களில் காட்டும் இயக்குநர், ஆரம்பத்தில் தான் சொல்ல வந்த விஷயத்தை மறந்துவிட்டு, க்ளைமாக்ஸில் அதனை இணைத்திருப்பதில் எந்தவித சுவாரஸ்யமும் இல்லை.

சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை பலவித திருப்புமுனைகளோடும், சுவாரஸ்யமாகவும் சொல்ல முயற்சித்திருக்கும் இயக்குநர் மனோஜ்குமார் நடராஜன், தனது முயற்சியில் பாசாகவில்லை என்றே சொல்ல வேண்டும்.