‘வேட்டை நாய்’ விமர்சனம்

தாதாவிடம் அடியாளாக இருந்தவன் எப்படி திருந்துகிறான் என்பதை மையப் புள்ளியாகக் கொண்டது இத்திரைப்படம்.

ஆர்.கே.சுரேஷ்  கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் ராம்கி, சுபிக்ஷா, ரமா, நமோ நாராயணன், ஜோதிமணி, விஜய் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சுரபி பிலிம்ஸ் மற்றும் தாய் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளன.முனீஸ் ஈஸ்வரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார். . அறிமுக இயக்குநரான  ஜெய்சங்கர் இந்தப் படத்தை இயக்கி இருக்கிறார். 

சிறு வயதிலேயே அம்மா, அப்பாவை இழந்து தனது அத்தை-மாமாவான ரமா-நமோ நாராயணன்  தம்பதியரின் வளர்ப்பில் வளர்ந்து வந்திருக்கிறார் படத்தின் கதாநாயகனான ஆர்.கே.சுரேஷ். எந்த வேலைக்கும் போகாமல் அந்தப் பகுதியில் தாதா நடிகர் ராம்கியிடம், அடி  ஆளாக இருக்கிறார் சுரேஷ்.இவருக்கு ஒரு கல்யாணத்தைச் செய்து வைப்போம் என்ற எண்ணத்தில் பக்கத்து ஊருக்கு சென்று பெண் தேடுகிறார்கள் ரமா, நமோ கூட்டணி. போய்த் தங்கிய வீட்டிலேயே நாயகி சுபிக்சா 12-வது படிக்கும் மாணவியாக சுரேஷுக்கு அறிமுகமாகிறார்.பார்த்தவுடன் காதலாகி சுபிக்சாவைத் திருமணம் செய்ய விரும்பி பெண் கேட்கிறார் சுரேஷ். முதலில் மறுக்கிறார்கள்  பின்பு திருமணம் நடக்கிறது.

திருமணத்திற்குப் பிறகு சுரேஷ் அடிதடி வேலைக்குப் போவதை அறியும் சுபிக்சா, அந்த வேலைக்கு இனிமேல் போகக் கூடாது என்று தடுக்கிறார்.  விஜய் கார்த்திக்கிடம் இணைந்து அவரது காய்கறி, பழ விற்பனையில் ஈடுபடுகிறார் சுரேஷ். தன்னிடமிருந்து விலகிச் சென்றதால் சுரேஷ் மீது  கோபத்தில் இருக்கிறார் ராம்கி. அதே நேரம் முன்பு எப்போதோ நடந்த ஒரு கொலைக்காக சுரேஷை தீர்த்துக் கட்ட ஒரு கும்பல் முயல்கிறது. சுரேஷ் மீது பொறாமை கொண்ட உடன் இருக்கும் ஒரு நண்பனும் சுரேஷை கொலை செய்ய முயற்சிக்கிறான்.இப்படி மூன்று புறமும் எதிரிகளால் சூழப்பட்டு வாழும் சுரேஷுக்கு கடைசியில் நான்காவது எதிரியாக தற்போது வேலை கொடுத்திருக்கும் விஜய் கார்த்திக்கே வர..  நெருக்கடி அதிகமாகிறது.இவர்களிடமிருந்து சுரேஷ் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் மீதமுள்ள திரைக்கதை.

அடியாள் கேரக்டருக்கு ஆர்.கே.சுரேஷ் கச்சிதமாகப் பொருந்துகிறார். அந்த உடற்கட்டும், முரட்டுத் தோற்றமும், கர்ண கொடூரமான முகம் இதற்கு உதவியாக இருக்கிறது. அடிதடி சண்டையில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் சுரேஷ். இடைவேளைக்குப் பின்னான சில காட்சிகளில் தன்னால் நடிக்கவும் முடியும் என்பதையும் காட்டியிருக்கிறார். 

நாயகி சுபிக்சாவின் அழகான நடிப்பை பாராட்டியே ஆக வேண்டும். இன்னொரு பக்கம் அத்தையாக நடித்திருக்கும் ரமா பொறுப்பாக நடித்திருக்கிறார். இவரது கணவராக நடித்திருக்கும் நமோ நாராயணன் தன் பங்குக்குக் கொஞ்சம் சிரிக்கவும் வைத்திருக்கிறார். 

நடிகர் ராம்கி லோக்கல் தாதாவாக அவ்வப்போது கோபத்தைக் காட்டுபவராக நடித்திருக்கிறார். .கேரளத்து இளைஞராக நடித்திருக்கும் விஜய் கார்த்திக்கும் தனது மென்மையான நடிப்பைக் காண்பித்திருக்கிறார். நாயகியின் அம்மாவான ரேகாவும் மிக இயல்பான நடிப்பைக் காண்பித்திருக்கிறார்.

 ஈஸ்வரனின் ஒளிப்பதிவில் குறைவில்லை. இன்னொரு பக்கம் இசை பரவாயில்லை ரகம்.  முதல் பாதியில் ஒரு கதை.. இரண்டாம் பாதியில் இன்னொரு கதையாகவும் வந்திருப்பதால் படம் சிறப்பு என்று   சொல்ல முடியவில்லை.பரவாயில்லை.