‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’விமர்சனம்

vvv2நல்லபிள்ளையாக துறு துறு முருகனாக டெய்லர் கடை நடத்தி வருகிற விஷ்ணு விஷால், ஊக்கத்தின் உறைவிடமாக உள்ளவர்.  அவர் எம்.எல்.ஏ ரோபோ சங்கருக்கு வலது கையாகவும் இருந்து வருகிறார். விஷ்ணு விஷாலுக்கு நண்பராக சூரி இருக்கிறார். அதே ஊரில் வசிக்கும் நிக்கி கல்ராணி, போலீசாக வேண்டும் என்கிற கனவில் இருப்பவர்.அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அம்முயற்சியைக் கண்டு அவரைக் காதலித்து வருகிறார் விஷ்ணு விஷால்.

விஷ்ணு விஷால் எம்.எல்.ஏ.விடம் செல்வாக்காக இருப்பதால் நிக்கி கல்ராணியின் அப்பா அவரிடம் பத்து லட்சம் கொடுத்து போலீசாக்க வேண்டும் என்று கூறுகிறார். விஷ்ணுவும் தன்னுடைய காதலிக்காக பத்து லட்சத்தை வாங்கி ரோபோ சங்கரிடம் கொடுக்கிறார்.

ரோபோ சங்கர் கட்சியின் அமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகின்றது. சாகும் நிலையில் இருக்கும் அமைச்சர் ரோபோ சங்கரை அழைத்து 500 கோடி ரூபாய் ஒரு இடத்தில் இருப்பதாக சொல்லிவிட்டு இறக்கிறார். அந்த 500 கோடியை அபகரிக்க, அமைச்சர் மனைவியின் தம்பி’பூதம்’   ரவிமரியா திட்டம் போடுகிறார்.

இந்நிலையில், ரோபோ சங்கருக்கு விபத்து ஏற்பட்டு கோமா நிலைக்கு செல்கிறார். மறுபக்கம் நிக்கி கல்ராணி சொந்த முயற்சியால் போலீசாகி விடுகிறார். தனக்கு தெரியாமல் பணம் கொடுத்ததால் விஷ்ணு விஷாலிடம் பத்து லட்சம் பணத்தை திரும்ப கேட்கிறார்.

இறுதியில் ரோபா சங்கர் கோமா நிலையில் இருந்து மீண்டாரா? இவரிடம் இருந்து பத்து லட்சம் பணத்தை திரும்ப வாங்கி, விஷ்ணு விஷால் தன் காதலில் ஒன்று சேர்ந்தாரா? அந்த 500 கோடி எங்கு இருக்கிறது என்று ரவிமரியா கண்டுபிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

படத்தைத் தயாரித்து படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஷ்ணு விஷால், முதல் முறையாக முழு நேர காமெடி படத்தில் நடித்திருக்கிறார்.  அவருக்கு பொருத்தமாகவும் உள்ளது. ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இப்படம் மூலம் வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்லலாம். மேலும் தானே படம் முழுக்க ஆக்கிரமித்து  வர எண்ணாமல் படத்தில் சூரிக்கும், ரோபா சங்கருக்கும் அதிக வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி ஆக்‌ஷன் கலந்த போலீசாக நடித்திருக்கிறார். துடுக்கும் மிடுக்கும் நடிப்பில் காட்டிக் கவர்கிறார்.
புஷ்பா புருஷன் என வரும் சூரிக்கு  இப்படம் நல்ல  பெயர் வாங்கி தந்திருக்கிறது. ஒரு மோதிரத்திற்காக ‘ இலவச’ திருமணம் செய்து கொண்டு படம் முழுவதும் புஷ்பா புருஷனாக பிறரிடம் அவதிப்படுவது கலகலப்பு. கிளைமாக்ஸ் காட்சியில் ரோபோ சங்கர்  திரும்பத் திரும்பச் சொல்லும் கதை திரையரங்கில் சிரிப்பு சரவெடி.  அவருக்கு இப்படவாய்ப்பு ஒரு விஸ்வரூப வாய்ப்புதான். ஆடுகளம் நரேன், ரவிமரியா,மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

காமெடி படத்தை கொடுத்து வெற்றி கண்டு வரும் இயக்குநர் எழில், இந்த படத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு வயிறு குலுங்க சிரிக்குமளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார்கள். சிறந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து அவர்களிடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். முதல் பாதியை விட இரண்டாம் பாதியை அதிகம் ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.சிறு சிறு லாஜிக் மீறல்கள் எல்லாம் சிரிப்பொலியில் காணாமல் போய் விடுகின்றன. இப்படம் சிரிப்பை மட்டுமே குறிவைத்து எடுக்கப்பட்டுள்ள படம் எனலாம்.

சத்யா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.  சக்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு அதிகம் கை கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில்‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ கலகலப்பு மத்தாப்பு.