வைரமுத்துவுக்கு வயதாகிவிட்டதா?

vairamuthu-newசமீப காலமாக வருகிற சினிமாப் பாடல்கள் பற்றி உண்மையான திரைப்பாடல் ரசிகர்களுக்கு வருத்தமும் கோபமும் உண்டு.

ஒரு காலத்தில் திரை இலக்கியம் என்று கருதப்பட்ட பாடல்கள் இன்று வெறும் அலட்சியம் என்று கூற வைக்கின்றன. வருகிற பாடல்களில் பெரும்பான்மையானவை  காமா சோமா ரகம் அல்லது  காமரச ரகம் என்றே உள்ளன.

மனிதர்களுக்குத்தான் Identity Crisis உள்ளது என்றில்லை. படத்தின் எந்த அடையாளமும் இல்லாது வருகிற  தற்காலப் பாடல்களுக்கும் Identity Crisis உண்டு.. இந்நிலையில்  அண்மையில் வந்துள்ள ‘சத்ரியன்’ படத்தில் கவிஞர் வைரமுத்து ‘மைனா  ரெண்டு ‘ என்கிற ஒரு பாடலை எழுதியுள்ளார்.

படத்தின் நாயகன் ஒரு ரவுடி . அவன் ஒருத்தியை நேசிக்கிறான். அவன் மனம் மாறுகிறான்.அவனை வன்முறைப் பாதையிலிருந்து மீட்க விரும்புகிறாள் காதலி.  எல்லாவற்றையும் விட்டு விட்டு உலக வெளியில் பறக்க விரும்புகின்றன காதல் பறவைகள்.

ஆனாலும் அவனது வன்முறை வாழ்வின் பழைய பகை துரத்துகிறது. ஏற்கெனவே விதைத்த விஷச்செடி விஸ்வரூப மரமாகி பின்னே நடந்து செல்கிறது, திரும்பிப்பார்த்தால் அச்சமூட்டுகிறது.

எல்லாமும் துறந்து மறந்து ஊரை விட்டு தொலை தூரம் போகும்  அவர்களின் மன உணர்வுகள் பற்றியது பாடல்.அது படத்துக்கான சூழல் ,பாத்திரங்களின் மனநிலை, திரையரங்க ரசிகர்களின் ரசிப்புநிலை  எல்லாவற்றுக்கும் ஏற்ப உள்ளது.  எவ்வளவு அழகாக எல்லாமும் கலந்து வைரமுத்து எழுதியிருக்கிறார் பாருங்கள்.

இப்பாடல் யுவனின் இனிமையான இசையில் ஒலிக்கிறது படத்தில் பரபரப்பான க்ளைமாக்ஸை நோக்கிய பயணத்தில்தான் இப்பாடல்  ஒலிக்கிறது. இருந்தாலும்  பார்ப்பவரை வேகத்தடையாக உணர வைக்கவில்லை.  சூழலுக்கே செழுமை சேர்க்கிறது. அது தான் இப்பாடலின் சிறப்பு.படத்தில் காட்சியாகப் பார்க்கும் போது இப்பாடலின் இன்னொரு இனிய பரிமாணம் விளங்கும்.

வைரமுத்துவுக்கு வயதாகிவிட்டதா? அறுபதைத்தாண்டிய அவரது கால வயது நமக்குத் தேவையில்லை.அவரது மன வயது இருபதைத் தாண்ட வில்லை.வயசே ஆகாத வைரமுத்து என்றுதானே கூற வைக்கிறது பாடல் !
காலங் கடந்தும் வடுகபட்டி பெரிசு கம்பீரமாக நிற்க அவரது செய் தொழில் நேர்த்தி தான்  காரணம்,என்பதும் ‘சரக்கு முறுக்குதான்  காரணம் ‘ என்பது  இப்போது புரிகிறது அல்லவா?

இனி பாடல் வரிகள்!

maina2-பல்லவி
மைனா ரெண்டு
மைனா ரெண்டு
வலியோடு வழிதேடும் மைனா ரெண்டு
காதல் உண்டு
கண்ணீர் உண்டு
கண்ணோடு அச்சம் கொஞ்சம் மிச்சம் உண்டு
உளிகொண்டு
மலை வெட்டு – அது
வழியாகித் தீரும் – நீ
துணையாக உன்னை நம்பிப் போவாய் தம்பி
ஒளிகொண்டு
இருள் வெட்டு – அது
விடிவாகித் தீரும் – ஒரு
சிறுபேதை வந்தாளப்பா உன்னை நம்பி
சரணம்
உனக்கொரு பொறப்பு
எனக்கொரு பொறப்பு
இருவரை இணைத்தே
நடக்குது பொழப்பு
கரைகளைப் பற்றிக்கொண்டு
நதி நடை பொடுதடி
கண்ணே என்னைக் கட்டிக்கொண்டு
நீ ஓடடி
நான் வெட்டுக்கத்தி குத்துக்கத்தி விட்டுப்புட்டேன்
ஒன் வெட்டருவாக் கண்ணுக்குள்ள சிக்கிக்கிட்டேன்
நான் கொலைகார ஊரவிட்டுத் தப்பிவந்தேன்
ஒங் கொலுசுக்குள் மணியாக மாட்டிக்கிட்டேன்
என் கைரெண்டும் கத்தி பெண்ணே
கால் ரெண்டும் வேல்கள் கண்ணே
கட்டாயம் காதல் யுத்தம்
வெல்வேன் பின்னே