வைரமுத்து 66 : சொல்லாண்டு தமிழ் வளர்த்து பல்லாண்டு வாழ்க!

நேற்று வந்தது போல் இருக்கிறது  ‘நிழல்கள்’ படம் வந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன .’நிழல்களி’ல்  ’இது ஒரு பொன்மாலைப் பொழுது’ பாடல் மூலம் அறிமுகமானவர் கவிஞர் வைரமுத்து. அந்த பாடல் திரைப்பாடல் வாழ்க்கையில் அவருக்கு  ஒரு புலர் காலைப் பொழுதாக அமைந்தது. படம் என்னவோ தோல்விப்படம் தான். ஆனா அந்தப் பாடல் மாபெரும் வெற்றிபெற்ற பாடலானது

அப்போதிலிருந்து அந்தப் போதி மரம் நாளும் இவருக்கு சேதி சொல்கிறது .இதுவரை 37 நூல்கள்,7 தேசிய விருதுகள் என 40 ஆண்டுகள் தாண்டியும் அந்த ஞான மரம், தமிழ் என்னும் ஞான மரம் இவருக்கு செய்தி சொல்லிக் கொண்டே இருக்கிறது .அதைக்கேட்டுக்கொண்டு கவிதைகளிலும்  பாடல்களிலும் படைத்துக் கொண்டே இருக்கிறார்.

நினைத்தால் நம்பமுடியவில்லை நாற்பதாண்டுகளாக ஒருவர் பாடல் எழுதிக்கொண்டிருக்கிறார்; சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஒருவர் கவிதை எழுதிக் கொண்டிருக்கிறார். அலுக்கவில்லை; சலிக்கவில்லை; நீர்த்துப் போகவில்லை. மேலும் மேலும் ஆழம் அதிகரிக்கிறது; நீளம் அதிகரிக்கிறது; அகலமாகிக்கொண்டே போகிறது.தோல்விகள் ஏதும் இவர்க்கில்லை .தொடு வானம் தான் இவர் எல்லை என்கிற வகையில் இவரது பயணம் போய்க்கொண்டே இருக்கிறது.

வைரமுத்து சாதாரண கவிஞராய்ப்பார்க்க முடியாதவர். தவிர்க்க முடியாத சாதனையைக் கொண்டது அவரது தடம். தாண்ட முடியாத உயரத்தை கொண்டது அவரது  இடம். வரைய முடியாத வண்ணங்கள் கொண்டது அவரது படம்.
கற்பனையால் ககனத்தில் மிதந்து , வரிகளால் வானத்தை அளந்து, சிந்தனையால் சிகரத்தில்  நகர்ந்து
ஆர்வத்தால் பெருங்கடலில் நுழைந்து , பேனாவால்  பிரபஞ்சத்தில் விரிந்து,எழுத்துகளால் எல்லைகளைக்கடந்து
பரந்துபட்டது அவரது படைப்புலகம் .

வைரமுத்துவை வெறும் கவிஞர் என்று கணித்து விட முடியாது. பாடலாசிரியர் என்ற பதுக்கிவிட முடியாது. எழுத்தாளர் என்று எல்லை கட்டமுடியாது. கட்டுரையாளர் என்றும் கட்டிப் போட முடியாது.
தமிழில் எழுத்தில் எல்லா தளங்களிலும் தனது முத்திரையைப்  பதித்திருக்கிறார். கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள், சுயசரிதை, மொழிபெயர்ப்பு, ஆய்வு ,சிறுகதைகள் ,நாவல்கள் , வரலாறு, தொகுப்புக்கட்டுரைகள் என்று எழுத்தின் எல்லா அவதாரங்களிலும் அரிதாரம் பூசாமல் மேடைகண்டு வெற்றி கண்டவர்.ஆனால் எழுத்தின் எல்லா முகங்களிலும் பரிமளித்தவர்,எழுத்து வகைகளில் எல்லா வாகனங்களிலும் ஏறி  நின்றாலும் ,இவர் கவிதைத் தேரில் அமர்வதில் மட்டும் தனி மகிழ்ச்சி அடைபவர்.

கவிதை எழுதினாலும் நாவல் எழுதினாலும்  கட்டுரை எழுதினாலும் ஆய்வு எழுதினாலும் எல்லாவற்றிலும் தன் கவி முகத்தை இவரால் மறைத்துக் கொள்ள முடியாது .எழுத்தின் வகைமைகள் மாறுபட்டிருந்தாலும் வெளிப்படும் எல்லா வரிகளிலும் கவிதை ஈரம் நிறைந்திருக்கும் ;கவிஞன் என்கிற கதாபாத்திரம் மறைந்திருக்கும். இதை அவரால் தவிர்க்கவே முடியாது. அதுதான் அவரது பலம் .ஒரு சிறுகதை படித்தாலும் கவித்துவ வரிகள் அங்கங்கே கலந்து கிடக்கும். நாவலிலும் அதன் சாரத்தை பார்க்க முடியும்.

தனது திரைப்பாடல் ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு இடத்தில் தனது முத்திரையைப் பதித்திருப்பார்.எவ்வளவு பெரிய நகை செய்யப்பட்டாலும் பின்புறத்தில் செய்தவரின் முத்திரை இருப்பது போல் இவரது கவிதைகள் தேடிப் பார்த்தால் ஏதாவது முத்திரை இருக்கவே செய்கிறது .அந்தத் தர முத்திரை இருப்பது தமிழ் பலம்.அது தான் இவரது தகுதியின் சான்று.

இவர் மரபை அறிந்து நவீனத்துக்கு நகர்ந்ததால் இவரது கவிதைகளை புதுமையின் வெளிச்சம் எனப்புரிந்து கொள்ள முடியும் .இலக்கணமே அறியாதவர்கள் இலக்கணத்தை மீறுவதாகக்கூறுவது கேலிக்குரியது. இன்று நவீனம் என்று சொல்லிக் கொள்வோர் பலரும் மரபு அறியாதவர்கள். அறியாத ஒன்றை அறியாத ஒருவர் அது பற்றி அவதூறு செய்வது அறியாமையின் அடையாளம் .
ஆனால் வைரமுத்து அப்படிப்பட்டவர் அல்லர். மரபிலிருந்து தோய்ந்து வெளியே வந்தவர். பலரும் புதுமை என்று ரசிக்கும் இவரது பல பாடல்களில் தொன்மையின் ஈரமிருக்கும் .அதை நவீன வாகனத்தில் ஏற்றி நம்மை ரசிக்க வைத்ததுதான் இவரது தனித்திறமை எனலாம்.

கண்ணதாசன் திரைப் பாடல்களில் ஆன்மீகப் பரப்பின் அகலம் தெரிந்தது .ஆனால் அதற்கான காலச்சூழல் அவருக்கு அமையப்பெற்றது .வைரமுத்து காலம் வேறு. அவர் தன்னால் முடிந்த அறிவியல் பரப்பை தனது வாகனம் பயணிக்கும் களமாகக் கொண்டு முடிந்தவரை அறிவியலையும் அழகியலையும் வாழ்வியலையும் உளவியலையும் தன் பாடல்களில் பரப்பியவர்.

பேருண்மைகளை பாடல்கள் வழியே புதுக்கியவர்; அறிவியல் தகவல்களை நாம் அறியாமல் பாடல்களில் உள்ளே  பதுக்கியவர்; வழக்கமான வழக்காறுகளை ஒதுக்கியவர்.

அவரது மொழி நடையில் வரிகளில்  வார்த்தைகள் பதுக்கம் இருக்காது; பதுங்கிக் காணாமல் போவதில்லை; அதே நேரம் வெளியே   பிதுங்கித் தள்ளுவதுமில்லை. இசையின் வாகனத்தில் இனிமையான பயணமாக அமையும் வகையில் உள்ளவை அவரதுபாடல்கள்.
ஒவ்வொரு திரைப்பாடலும் சமைக்கப்படும் பொழுது அதன்மூலம் பலரையும் திருப்தி செய்யவேண்டும் என்கிற கட்டுப்பாடுகளும் நிபந்தனைகளும் கொண்டது .இந்தச் சூழலில்தான் திரைப்படத்தில் பாடல்கள் உருவாகின்றன. படத்தின் இயக்குநர் ,கதையின் சூழல், பாத்திரத்தின் குரல் ,நடிப்பவர்களின் தன்மை, படத்தின் வணிக பரப்பு, கதை நடக்கும் காலம் போன்ற அனைத்தையும் அறிந்து கொண்டு அனைத்திற்கும் ஈடு செய்யும் வகையில் தான் அந்த வரிகள் அமைக்கப்படவேண்டும் ,இவ்வளவு நிபந்தனைகளுக்குட்பட்டு வரும் வரிகளில் இவர் காட்டிய கரிசனத்தால்தான் இவ்வளவு நல்ல பாடல்கள் வந்திருக்கின்றன.

சாலைகளில் ஓடும் குதிரைகளுக்கும் பந்தயத்தில் ஓடும் குதிரைகளுக்கும் வேறுபாடு உண்டு .இவர் நாற்பதாண்டுகளாக பந்தயக்களத்தில் குதிரை ஓட்டி வருகிறார். அதில் வெற்றியும் பெற்று வருகிறார். இடையில் எத்தனையோ பேருக்குக் குதிரைகள் சறுக்கி விழுந்தன.இவரது குதிரை மட்டும் கம்பீரமாக ஓடிக்கொண்டிருக்கிறது காலத்தையும் தாண்டி.

இவரது கவிதையில் புதிய தேடலுண்டு. சந்தத்தின் இன்பமுண்டு. தத்துவத்தின் தாக்கமுண்டு.படிப்பவரை ஈர்க்கும்; கவர்ச்சியில்  கனியும்.

இவர் ,தான் எழுதும் போது தேய்மான வழக்குகள் கூடாது என்ற தீர்மானம் கொண்டவர்;கூறியது கூறல் கூடாதென்ற கொள்கை கொண்டவர்;பழகியதைப் பகிர கூடாது என்ற பகுத்தறிவு கொண்டவர். இவர் எழுதிய திரைப்பாடல்கள் பலதரத்தன; பல நிறத்தன. பல முகத்தன.

பொதுவாகத்  திரைப்பாடல்கள்  இசைக்காகப் புகழ்பெற்றவை, கதைக்காகப் புகழ்பெற்றவை ,சூழலுக்காகப்புகழ்பெற்றவை, குரலுக்காகப் புகழ் பெற்றவை,காட்சிப்படுத்தலுக்காகப் புகழ் பெற்றவை, சந்தத்திற்காகப் புகழ் பெற்றவை ,வரிகளுக்காகப்புகழ் பெற்றவை, ஓசை நயத்துக்காகப் புகழ்பெற்றவை,நடித்த நட்சத்திரங்களுக்காகப் புகழ்பெற்றவை, செய்யப்பட்ட விளம்பரங்களுக்காகப் புகழ்பெற்றவை என இப்படி எந்த வகையில் புகழ் பெற்றாலும் அந்தப் புகழைத்தாண்டி இவரது வரிகள் நாலு படி மேலே எடுத்துக்காட்டும் படியாகத்தான் இவரது படைப்பூக்கம் அப்பாடலில் இருக்கும்.

செவியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த வைரமுத்துவின் பாடல்கள்தான் எத்தனை எத்தனை?

இவரது பாடல்களில் எதைச் சொல்ல? எதை விட ? எதை எடுப்பது ?எதைத் தவிர்ப்பது?
இவரது பாடல்களின் வரிகளை ஒப்பீடு செய்யும் வேலையில் கிறங்கி இறங்கி அதை விளக்கிடும் முயற்சி என்பது குன்றை முட்டும்  குருவி முயற்சி. ஆகாயத்தை அங்குல அளவியாலா அளக்கமுடியும்? இருந்தாலும் சில குறிப்புகளை இங்கே பார்ப்போம்.

இயற்கையை வியந்து ரசிக்கும் ஒரு கலைஞனாக ’வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும்’ என்று தன்னைச் சுற்றியிருக்கும் பிரபஞ்சமே படிக்க வேண்டிய பாடம் என்பதை எடுத்துக்கூறித் தொடங்கியது இவரது பாடல் பயணம்.

காதலன் காதலி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் உணர்வு வெளிப்பாட்டை பிரகடனப்படுத்துகின்றன இந்த வரிகள் ’எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்;  உனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம் ’என்று தன் காதலின் ஆழத்தை  உணர வைக்கிறான் காதலன்.

’ அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது ’ என்று எங்கெங்கு காணினும் காதலியின் முகத்தை காணும் காதலனின் மனதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார் கவிஞர்.
வாலிப மனதின் காதல் ஏக்கத்தை பற்றி கூறும்போது ’இவன் இழுத்து விடும் பெருமூச்சில் ஈரச்சேலை காயும் என்று கிண்டலாகச் சொல்லும் அவர்,விரக வெப்பத்தைக்கூறும் போது
’உள்ளங்கள் சூடு பட்டு மலர் கொஞ்சம் வாடும் ’என்கிறார் இன்னொரு பாடலில்.

’ நீ மல்லிகை மலரை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்ந நீ பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால் பட்டுப்பூச்சிகள் மோட்சம் பெறும் ’ என்று காதலியின் மேன்மையை புதிய சிந்தனையாக எழுதியவர்.
’ எடுத்துக்கொடுக்கையிலேயே இரு விரல் மோதும்; நகங்கள் உரசிக் கொண்டால் அனல் உருவாகும் ’ என்று பதின் பருவத்தின் தயக்க உணர்ச்சிகளுக்கு விளக்கம் தருகிறார்.
காதலியின் மென்மை பற்றி நாயகன் கூறும் போது,’மொட்டுகளே மொட்டுகளே மூச்சுவிடா மொட்டுகளே,
கண்மணியாள் தூங்குகிறாள் காலையில் மலருங்கள்’ என்றவன்,
’பொன் அரும்புகள் மலர்கையிலே மெல் மெல்லிய சத்தம் வரும்…
என் காதலி துயில் கலைந்தால் என் இதயம் தாங்காது’  என்கிறான். அதையும் தாண்டி,’காதலி மூச்சு விடும் காற்றையும் சேகரிப்பேன்,காதலி மிச்சம் வைக்கும் தேநீர் தீர்த்தம் என்பேன்’ என்கிறான்.
 இன்னொருவன்  ’தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது ,
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்;பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளியெல்லாம் சேகரிப்பேன்’ என்கிறான்.அத்துடன் விட்டானா? ‘தேவதை குளித்த துளிகளை அள்ளித்தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்  ’ என்கிறான்.

’கண்ணே உன் கால் கொலுசில் மணியாக மாட்டேனா?
மஞ்சத்தில் உறங்கும்போது சிணுங்க மாட்டேனா  ? ’என்கிறான் ஒருவன்.’எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன் எந்த இடம் அது தொலைந்த இடம்? அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன் கால்கொலுசில் அது தொலைந்ததென்று ,உந்தன் காலடி தேடி வந்தேன்’  என்கிறான் மற்றொருவன்.

 ஒரு பாடலில் குழந்தையை ’ இடுப்பில் உள்ள நந்தவனம் ’ என்கிறார் .இன்னொரு பாடலில் காதலியை ’ பிப்டி கேஜி தாஜ் மஹால் ’ என்கிறார்.
தூங்காத கண்கள் கொண்ட காதலர்களின் மனநிலையைக் கூறும்போது ’நான் தூங்கவில்லை கனவுகள் தொல்லை’ என்கிறான் அவள் ’ நான் தூங்கவில்லை அதனால் கனவுகள் இல்லை ’ என்கிறாள் . இப்படி இருவரும் தூங்காத கண் கொண்ட காதலர்களே எனக் கூறுகிறார் கவிஞர்.
காதலரின் மோக அழுத்தத்தை கூற வந்தவர் ’ தழுவிடும் பொழுதிலே இடம் மாறும் இதயமே’ என்கிறார்.
காதலியிடம் சரணடைந்த காதலனின் கூற்றாக ’ நீ காற்று நான் மரம். என்ன சொன்னாலும் தலையாட்டுவேன் ’ என்கிறார்.

காதலுக்கு எத்தனை பொழிப்புரைகள் தான் எழுதி இருக்கிறார்.சைவக் காதல், அசைவக் காதல் என இரு வகையில் பிரித்தும் சொல்லியிருக்கிறார்.காதலுக்கு ஏழு நிலைகள் எனவும் பட்டியலிட்டிருக்கிறார்.

புகழ்பெற்ற ஓர் இசைக்கலைஞரின் வீழ்ச்சியைக் குறிப்பிடும்போது
 ’ சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது மானே ’ என்கிறார்.
அதே கலைஞன் குடிக்கு அடிமையாகி வாழ்க்கை சீரழிந்த போது ’ இருமலைத்தான் சுரம்பிரித்தான் ’ என்கிறார்.சுற்றம் நட்பு மறந்த அவலத்தைக் கூறும்போது ’ ரசிகரின் கடிதத்தை கிழித்து விட்டான்’ என்கிறார்.

அதே படத்தில் இன்னொரு பாடலில் தன்னுடைய பிறப்பின் துயரம் உணர்ந்தவள் பாடுவதாக ’ என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே கர்ப்பத்திலேயே நான் கலைஞ்சிருப்பேனே ’ என்கிறார். இதைவிட துயரத்தின் உச்சம் என்ன? அதே கவிஞர் புதுமை மனம் கொண்ட பெண்மை குறித்து  எழுதும் போது ‘   மங்கம்மாளின் வாளைக் கையில் வாங்கி வந்தவளோ?,சுப்ரமணிய பாரதியின் சோற்றைதின்று வந்தவளோ? ,கராத்தே கற்றவளோ? கவிபாடும் தேவதையோ? ’ என்கிறார்.சதந்திரவெளியில் சஞ்சரிக்கும் மனமுள்ள இன்னொருத்தி பற்றிக்கூறும் போது ‘பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வேர்வை போக்கிடும் நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு
வாழ்வே வாழ்பவர்க்கு ’ எனப்பாட வைக்கிறார். அத்துடன் போதாமல் ‘அட இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை,இன்றே வரவேண்டும் என் தீபாவளி பண்டிகை ’ என பிடிவாதம் உரைக்கவைக்கிறார்.
 இடையிடையே, ‘விடியாத இரவென்று எதுவுமில்லை,முடியாத துயரென்று எதுவுமில்லை,வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை,வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை’ என நம்பிக்கையையும் நடவு செய்கிறார்.  

தன் துயரத்தைப் பதுக்கி மறைத்து வாழும் ஒரு மூத்த கதாபாத்திரத்தைப் பேச விடும்போது ’மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல  ’ என்றும்  ’ உள்ளே அழுகுறேன் வெளியே சிரிக்கிறேன். நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன்.’என்றும் அனுதாபத்தை அள்ள வைக்கிறார்.

’ பனிவிழும் மலர்வனம் உன் பார்வை ஒரு வரம் ’ என்ற வார்த்தைகள் அந்த பாடலுக்கு அழகு சேர்த்தது போல ஆலிங்கனங்கள் பரவசம் இங்கு  அனுமதி இலவசம்.தன்னைமறந்த அனுபவம் ரெண்டு கண்களில் அபிநயம்   ’ போன்ற பாடல் வரிகளில்  அழகு சேர்த்தன.

’வக்கணையா தாலி வாங்கி வாசலுக்கு வாறதெப்போ? உன் பாதம்பட்ட மண்ணெடுத்து நான் பல்லு வெளக்க போறது எப்போ? ’ கிராமத்துக் குமரியின் மனதை வரைந்தவர்,

’ தாய்ப்பாலுக்கு கணக்கு பார்த்தால் காசு மிஞ்சுமா ? ’ என்று தாய்மையின் பெருமையைப் பறைசாற்றியவர்,
காதலிக்காக எதையும் செய்பவன் ’ வருட வரும் பூங்காற்றை எல்லாம் வடிகட்டி அனுப்பிவைப்பேன் ’ என்ற பாட வைக்கிறார் .

மனித மன முரண்பாடுகளைச்சுட்டும் போது ’தலைகீழா பிறக்கிறான் தலைகீழா நடக்கிறான்’ என்று தத்துவம் சொல்கிறார்.

‘தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் நாம்,
 தண்ணீர், கரையில் முடிக்கிறோம் நாம்’ என்று இரண்டு வரியில் வாழ்வின் சூத்திரத்தை விளக்கி விடுகிறார்.

இவரது வரிகளில் அழகியல் ஆலாபனை பெற்ற பாடல்கள் எத்தனையோ உண்டு.
‘ மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்; ஒரு கறுப்புக்கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம் ‘ என்பதும் ’நெஞ்சு பொறு கொஞ்சம் இரு தாவணி விசிறிகள்வீசுகிறேன் மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன் ‘  எனக்கூறுவதும்

 ’இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள் தேவையில்லை
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே தேவையில்லை ‘  எனக்கூறுவதும் அழகியல் அல்லவா?
’வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும்   ‘  எனக்கூறுவதும்

ஒரு  வெள்ளை மனசுக்காரியின் ஆசைகளைப் பட்டியலிட்டவர்,
’சேற்று வயலாடி நாற்று நட ஆசை,
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை,
வானவில்லைக் கொஞ்சம் உடுத்திக்கொள்ள ஆசை,
பனித்துளிக்குள் நானும் படுத்துக்கொள்ள ஆசை, 
சித்திரத்தின் மேலே சேலை கட்ட ஆசை     ’  எனக்கூறுவதும்   
’இது கட்டும் பாட்டு ஈரம் சொட்டும் பாட்டு
கட்டிச்செந்தேனாய் நெஞ்சில் கொட்டும் பாட்டு
தாய்ப்பாலைப்போல் ரத்தத்தில் ஒட்டும் பாட்டு  ‘  எனப்பாடுவதும்  
அழகியல் ஆராதனை அல்லவா?
’ உன் புடவை முந்தானை சாய்ந்ததில்
இந்த பூமி பூப்  பூத்தது’

’இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யார் சொன்னது?’ ‘  எனக்கூறுவதும் அழகியலின் ஆலாபனையல்லவா?  

’ நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய், நீயொரு திருமொழி சொல்லாய்,அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ,கொற்றப் பொய்கை ஆடியவள் ,வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய் ’ என்றெல்லாம் எழுதிப் பாடலில் தமிழின் தொன்மைச்சொற்களையும் சொட்டவைக்கிறார்.
  வன்முறை தவிர்க்க எண்ணி, ’பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு?
பூப்பறிக்க கோடரி எதற்கு?’ என்று வெள்ளைக்கொடி தூக்கியவர்,
பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு?
ஆசை துறந்தால் அகிலம் உனக்கு! ‘ என்கிறார் அன்பை உயர்த்தி.
நிலையாமை பற்றிக்கூற வந்தவர்,  ‘மண்ணின் மீது மனிதனுக்காசை,
மனிதன் மீது மண்ணுக்காசை,மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது
இதை மனம்தான் உணர மறுக்கிறது  ’ என்கிறார் தத்துவ முத்தாய்ப்பாக.

’தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து என்னோடு நீ பாடிவா சிந்து ’என்று ஒரு காதல் பாடலில் பாஸ்கல் விதியைப் படிக்கவைக்கிறார்.
’கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் 
காதல் என்று அர்த்தம்,
கடலை வானம் கொள்ளை அடித்தால்
மேகம் என்று அர்த்தம்  ’ எனப்போகிற போக்கில் அறிவியலை அள்ளித் தூவுகிறார்.
’இன்னிசை பாடிவரும் காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லையென்றால் ஒரு பாட்டொலி கேட்பதில்லை’ என்று ஊடகம் இல்லாமல் வெற்றிடத்தில் ஒலி பரவுவதில்லை என்கிற அறிவியல் கருத்தை அமிழ்த்து வைக்கிறார்.
’சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா?’ என்று ஒரு காதல் பாடலில் நிலவில் முதலில் காலடி எடுத்து வைத்த மனிதனின் சரித்திரக் குறிப்பை ஏற்றுகிறார். ’ஒற்றைத் துளியில ஒற்றைத் துளியில
ஒரு லட்சம் ஒரு கோடி உயிரு இருக்குது, அத்தனை உயிரையும் அடிச்சு துரத்திட்டு
ஒற்றை உயிர் ஒற்றை உயிர் கருவில் வளருது
ஞானத்தங்கமே..’ உயிரியல் உண்மையை  ஒட்டுக்கேட்க வைக்கிறார்.  

’ஷெல்லியின் பைரனின் கல்லறைத் தூக்கத்தைக் கலைத்திடுவோம்’ என்று ஒரு காதல் பாடலில் ஆங்கிலக் கவிஞர்களை அழகாகச்செருகி வைக்கிறார்.

மண்ணின் வாசத்தை மட்டுமல்ல  மனிதர்களின் பாசத்தையும் குறிக்கும் பாடல்கள் ஏராளம் எழுதியுள்ளார். ’தென்கிழக்கு சீமையிலே செங்காத்து பூமியிலே’ யில் பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீடு போகும் ஒரு கிராமத்துப் பெண்ணின் மன உணர்வுகளில் ‘செங்காட்டு மண்ணும் நம் வீட்டுப் பொண்ணும் கை விட்டுப் போகக் கண்டா கண்ணீர் வருமே’
என் அண்ணன் பாட,’ தங்கச்சி கண்ணில் கண்ணீரை கண்டால் தன்மானம் கூட அண்ணன் விட்டுத் தருமே’,எனத் தங்கை பாடும் வரிகளில் பிரிவின் துயரம் கசிகிறது.

கத்தாழங்காட்டுவழியில் ‘வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா, வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா ‘ எனப் பிரிவின் வலியோடு ஒலிக்கும் போது, ’அண்ணே போய் வரவா?அழுதே போய்வரவா? ‘ என்பவள்,’மண்ணே போய் வரவா? மாமரமே போய் வரவா ?’என்கிறாள் .அந்தளவுக்கு இயற்கையோடு இயைந்த வாழ்க்கை வாழ்ந்தவளின், இடப்பெயர்ச்சியின் துயரத்தை அந்தப் பாடலில் வெளிப்படுத்தி இருப்பார். தொடர்ச்சியாக ‘தவளைக்கும் பொம்ளைக்கும் ரெண்டு இடந்தானே’ என்ற வரியின் மூலம் பெண்ணின் துயரக் குரலை பதிவு செய்யும் அதே சூழலில் நீரிலும் நிலத்திலும் வாழும் ‘இருவாழ்வி’ தவளை என்கிற பேருண்மையையும் பதிவுசெய்கிறார்.

அவள், அணில் வால் நேசத்தையும் புலிவால் நேசத்தையும் ஒப்பிட்டுப் பேசுவாள். பிறந்தவீட்டடு அண்ணனின் அன்பு மனம் மெலிதான அணில் வாலைப் போன்றது என்றும் புகுந்த வீட்டு கணவன் நெஞ்சம் புலி வாலைப் போல் வீரமும் முரட்டுத்தனமும் கொண்டது என்றும் ஒப்பிட்டுப் பாடுகிறாள். அத்தனையும் இவரது வரிகளில்.
இப்படி எத்தனையோ பாடல்களில் அவர் தனது முத்திரையைப் பதித்திருக்கிறார்; முகவரியை எழுதி இருக்கிறார்.

நீண்ட நாட்களாக எழுதுபவர்கள் போகப்போக சலிப்படைந்து விடுவர். ஆனால் இவர்,சலிப்போ சோர்வோ அடைவதில்லை. ஆனால் இவர் குன்றாத உற்சாகத்துடன் குறையாத படைப்பூக்கத்துடன் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்.
புதுமை தேடும் உள்ளத்துடன் இன்னும் பயணப்பட்டு கொண்டிருக்கிறார்.
‘ ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது’ என்று எழுதியவர் ஒவ்வொரு வரியிலும் தன் முகவரியை எழுதுகிறார்.
வைரமுத்துவின் அரசியலை சித்தாந்தத்தை  ஏற்காதவரும் அவரது படைப்பூக்கத்தை ஒப்புக்கொள்வர். அதனால்தான் தடுமாறாத தாளகதியாய்,வற்றாத ஜீவ நதியாய்,இளைக்காத இலக்கிய மனத்துடன் எழுதிக் கொண்டிருக்கிறார்.

சிந்தனையில் எழுத்தில் புதுமையை நாடும் இவர் பழசை மறக்காதவர் தொன்மங்களை துறக்காதவர், பழைய மரபு என்னும் ரத்தம் இவரிடம் இருப்பதால்தான் புதிய புதிய சிந்தனைகள் விரிய , இயங்க முடிகிறது.

பண்டிதர் நடையும் இவர் பழகுவதில்லை ;புதுமை என்கிற பெயரில் வரும் மூர்க்கமான பூடகமொழியும் இவருக்கு விருப்பமில்லை. ஆனால் இடைப்பட்டதாக உள்ளத்தை வெளிப்படுத்தும் உணர்ச்சிமிகு மொழி நடையால் எழுச்சி மிக்க எழுத்தால் இவர் தமிழ் வாசக மனங்களையும் ,திரையிசைப்பாடல் ரசிகர்களையும் கைப்பற்றி வைத்திருக்கிறார் .அந்த சாம்ராஜ்யத்தை சரியாமலும் காப்பாற்றி வருகிறார். .கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு இன்று 66 வது பிறந்தநாள் வளரட்டும் ஒளிர் தமிழ் போல் வளரட்டும் அவரது படைப்பும் வயதும்.!சொல்லாண்டு தமிழ் வளர்த்து பல்லாண்டு வாழ்க!

-அருள்