’ஸ்கெட்ச்’ விமர்சனம்

விக்ரம், தமன்னா நடிப்பில் விஜய்சந்தர் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வழங்க மூவிங் பிரேம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ஸ்கெட்ச்’.

தன் முதலாளிக்காக அவர் சொல்லும் வேலையை எல்லாம் ஸ்கெட்ச் போட்டு முடித்துக் கொடுக்கும்  நாயகனின் கதைதான்  திரைப்படம்.  

தவணை முறையில் வாகனங்களை வாங்கிவிட்டு சரியாக பணம் கட்டாதவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்யும் வேலை பார்க்கிறார்  விக்ரம்.  

அப்படிப்பட்ட விக்ரம்  தன்னுடைய முதலாளிக்காக தன் உயிரை பணயம் வைத்து  காரை கடத்தி வருகிறார் . ஆனால் அதே காரிலேயே போதைப் பொருளை  கடத்த முனைகிறார் வில்லன் பாபுராஜ். போதைப் பொருளும், காரும் போலீஸில் பிடிபட.. இது பாபுராஜுக்கு பெரிய அவமானமாகி விடுகிறது.

பழிக்குப் பழி வாங்க தன்னை ஏமாற்றிய விக்ரம் மற்றும் அவரது நண்பர்களுக்கெதிராக ஸ்கெட்ச் போடுகிறார் . விக்ரமின் ஆட்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்பட, இதை செய்வது ரவுடிபாபுராஜ். தான் என்று அவரை தூக்க விக்ரம் திட்டம் போட, பாபு ராஜோ விக்ரமைத்தூக்க திட்டம் போட அதை விக்ரம் எப்படி எதிர்கொள்கிறார்..? தப்பித்தாரா.. இல்லையா..? என்பதுதான் இடைவேளைக்கு பின்னான கதை.

கெட்டப் மாற்றுவது, உடம்பை வருத்திக் கொள்வது என்று படத்திற்கு படம் புதிய முயற்சியில் ஈடுபடும் விக்ரம், இந்த படத்தில் ரொம்ப சாதாரணமாக தோன்றுகிறார். வட சென்னைப்பின்னணியிலான கதையில்   நடிப்பில் சற்றே வித்தியாசத்தை காட்டியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளிலும், வில்லன்களிடம் வசனம் பேசும் இடங்களிலும் மாஸ் காட்டியிருக்கும் விக்ரம், பல நேரம்  அடக்கி வாசித்திருக்கிறார். காதல் காட்சிகளில் சேது பட நினைவு  வருகிறது.

பிராமணப்பெண்ணாக  நடித்திருக்கும் தமன்னா, நடிப்பை விட தோற்றத்தால் ரசிகர்களைக் கவர்ந்துவிடுகிறார்.

குறைவான காட்சிகளில் வரும் சூரி, குறைவாக சிரிக்க வைத்தாலும், விக்ரமின் நண்பர்களில் ஒருவராக நடித்திருக்கும் வினோத் தனது வசனங்கள் மூலம் திரையரங்கமே அதிரும் வகையில் சிரிக்க வைக்கிறார். 

சில படங்களில்  நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்கா இதில் சில காட்சிகளில்  தமன்னாவுக்கு  தோழியாக வந்து நடித்திருக்கிறார். அவர்தான் விக்ரமை காதலிக்கிறார் என்பதை காட்சிகளிலேயே நகர்த்தி கடைசியாக சஸ்பென்ஸை உடைத்து தமன்னாவுக்கு காதலை புரிய வைத்திருப்பது சுவையான  கட்டம்!

ஆர்.கே.சுரேஷ், போலீஸ் கமிஷ்னர் ஆகியோரை பெரிய பில்டப்போடு காட்டினாலும் அவர்களது வேடம் எடுபடாமல் போகிறது.குறிப்பாக போலீஸ் கமிஷ்னராக வருபவர்பார்த்தால் ரவுடி போலவே இருக்கிறார். ராயபுரம் குமார் என்ற வேடத்தில் பாபு ராஜா தோற்றத்திலும் நடிப்பிலும் மிரட்டுகிறார்.

எஸ்.எஸ்.தமனின் இசையில் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம் சேர்த்திருந்தாலும், பாடல்கள் திரைக்கதைக்கு வேகத்தடையாக அமைந்துள்ளது.ஆனால் தனியாகப்பார்த்தால் பாடல்கள் நல்ல ஒளி ஒலி விருந்து.அந்த அளவுக்கு வண்ணமயமாக உள்ளன.

சுகுமாரின் ஒளிப்பதிவு ராயபுரத்த்தைஅசலாக  காட்டியிருக்கிறது.

வட சென்னையை மையமாக வைத்து உருவாகும் படங்கள் என்றாலே ”ஏய்…டேய்…” என்று கத்துவதும், வெட்டுவதும் குத்துவதும்என்றிருக்கும். ஆனால் இது வேறு வித ஸ்டைலில் உள்ளது. இயக்கியவிஜய்சந்தர், ட்விஸ்ட் மூலம் திரைக்கதையை பரபரப்பாக நகர்த்தியிருப்பதோடு நல்ல  கருத்தையும்  சொல்லியிருக்கிறார்.

 விக்ரமை மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும்படி காட்சிகளை  வைத்திருக்கிறார்.  வழக்கமான  படத்திற்கான கரு தான் கதை என்றாலும், அதற்கு இயக்குநர் விஜய்சந்தர் அமைத்திருக்கும் திரைக்கதையும், காட்சிகளும் படத்திற்கு பலம் .விக்ரமின் நண்பர்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்படும் போது, கொலைகளை செய்வது இவராகத்தான் இருக்கும், என்று ரசிகர்கள் யூகிக்க, அங்கே இயக்குநர் வைத்த  திருப்பத்தால், அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களை தொற்றிக் கொள்கிறது.

வேகமாக நகரும் திரைக்கதைக்கு நச்சென்று இருக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் பெரிய பலம் . குறிப்பாக ராயபுரம் ரவுடிக்கு விக்ரம் ஸ்கெட்ச் போட்டு அதை செயல்படுத்தும் காட்சி ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறது. 

மொத்தத்தில்,  விக்ரமை மாஸ் ஹீரோவாக ரசிகர்களை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறது இந்த ‘ஸ்கெட்ச்’.