ஹாலிவுட்டில் தடம் பதிக்கும் நெப்போலியன்!

தொன்றுதொட்டே தமிழனுக்கும் கலைக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. நம் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்க்கும் வகையில், கைபா பிலிம்சின் மூலம் அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கைபா பிலிம்ஸ் “டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்” என்ற தனது முதல் ஹாலிவுட் திரைப்படத்தை அறிமுகபடுத்துவதில் பெருமிதம் கொள்கிறது.

தென்னிந்திய திரையுலகின் மாவீரனாக அழைக்கப்படும் நெப்போலியன் இத்திரைப்படத்தின் மூலம் அமெரிக்க திரையுலகிற்கு அறிமுகமாகிறார். எதிர்நாயகனாக தனது திரைப்பயணத்தைத் துவங்கி, நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நெப்போலியன், கதாநாயகனாக உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், தனது தளராத முயற்சியால் அரசியலிலும் களம் கண்டு, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அரசின் சமூகநீதி துறை இணையமைச்சராகவும் உயர்ந்து சாதனை புரிந்திருக்கிறார்.

இத்திரைப்படத்தில் அருங்காட்சியக பொறுப்பாளர் என்ற ஒரு முக்கியமான வேடமேற்றிருக்கும் நெப்போலியன், இதன் மூலம் சர்வதேச அரங்கில் ஒரு நடிகராக அறிமுகமாகிறார்.

குற்றப்பின்னணியுடைய இக்கதைக்கு தனித்துவமான அமானுஷ்யங்கள் திகில் சேர்க்கிறது. இத்திரைப்படத்தை எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குநர் சாம் லோகன் கலேகி இயக்குகிறார். நைன் ரூஜாக தற்காப்புக் கலை வல்லுநர் ஜெஸ்ஸி டீன் நடிக்கிறார். ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஹிப்-ஹாப் பாடகர் எமினெம்மின் இளைய சகோதரர் நாதன் மாதேர்ஸ், இத்திரைப்படத்தின் மூலம் புலனாய்வு அதிகாரியாக அறிமுகமாகிறார். இசையமைத்ததோடு மட்டுமில்லாமல் ஸ்விப்ட்டி மக்வே நடித்தும் அசத்தியிருக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகர் மற்றும் இசை அமைப்பாளரான தேவன் ஏகாம்பரமும் அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு ஆடி, போர்ப்ஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களுக்கு விளம்பரப்படம் தயாரிக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் இஸ்தவன் லேட்டங் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே உயர்தரத்திலான ஒளிப்பதிவு சாதனங்களை இத்திரைப்படத்திற்கும் உபயோகித்துள்ளதால் தரம் பெரிதும் பேசப்படும் என்கிறார்.

பெண்களை முன்னிலைபடுத்தும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வரும் இவ்வேளையில், ஒரு க்ரைம்- அமானுஷ்ய கூட்டணி நல்லதொரு வரவேற்பையும், கூடுதலான எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெஸி ஜென்சென் ஒரு துடிப்பான காவல்துறை அதிகாரியாக (பில்லி ஜீன் ஃபின்னிக்) களம் காண்கிறார். அடுத்த ஆண்டு திரைக்கு வரவிருக்கிற இத்திரைப்படத்தில் ஜெஸி, அயல்நாட்டு இராணுவப்பணியை முடித்துவிட்டு தனது சொந்த ஊரான லேக் ஓரியன் பகுதிக்கு திரும்புகிறார்.

அமைதியான அந்த பகுதியில் நடைபெறும் தொடர் கொலைகளும், விவரிக்க முடியாத அமானுஷ்ய நிகழ்வுகளும் அவரை பெரிதும் பாதிக்கிறது. விசாரணையை துவக்குகிற அதிகாரி பின்னிக், தனது கேள்விகளுக்கான பதில்களை விட, அதிக கேள்விகளையே எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், தனது மரித்துப் போன நண்பருடைய சகோதரரை எல்லிஸ் (பாபி லேனென்) சந்திக்க, காதல் மலர்கிறது.

விசாரணை வட்டம் விரிவடைந்துச் செல்ல செல்ல, இந்த அசாதாரண நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் நைன் ரூஜ் என்ற ஒரு அமானுஷ்ய சக்தி என்றும் இந்த நிகழ்வுகள் அதன் மறுபிறப்பைச் சுட்டிக்காட்டுவதாகவே உணர்கிறார் அதிகாரி ஃபின்னிக்.

காவல்துறை தலைவரும் (ஜெர்ரி நார்ஷ்), சமூக தலைவர் பாஸ்டர் வில்ஹெம்மும் (ஜான் சி ஃபார்மன்) இந்த கோட்பாடினை உடனடியாக மறுக்கின்றனர்.

நைன் ரூஜ் முதன் முதலாக டெட்ராய்ட்டின் நிறுவனரான அண்டோயின் காடில்லாக் என்பவரை 1700ல் பிரஞ்சு படைகள் இந்த நகரை நிர்மாணிக்க முயலும் போது தாக்கியதாக சொல்கிறார்கள்.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்குப் பின், நைன் ரூஜ் மீண்டும் உயிர்த்தெழுந்து பழிவாங்க துடிக்கிறது. டெட்ராய்ட் நகரை அழிவிலிருந்து காப்பதற்கு அதிகாரி ஃபின்னிக் அயராது உழைக்க வேண்டிய ஒரு இக்கட்டான நிர்பந்தம் ஏற்படுகிறது.இதுதான் கதை.

இப்படத்தின் அறிமுகவிழா இன்று சென்னையில்  நடைபெற்றது.  தயாரிப்பாளர்  டெல் கணேசன்,நெப்போலி    யன் கலந்து கொண்டனர்.