’ ஹாஸ்டல்’ விமர்சனம்

பெயரை வைத்தே ஹாஸ்டல் என்பது சார்ந்து மனதில் சில எண்ணங்கள் எழும்.இளைஞர்கள்,பிரம்மச்சாரிகள் வாழ்க்கை, வயது வந்தோர்க்கான விஷயங்கள் ,சுதந்திரம்,லூட்டிகள் போன்ற சிலவற்றை ஊகிக்கலாம், இதில் திகில் ,பேய் என்பது கூடுதல் சேர்மானமாகியுள்ளது.

கல்லூரி மாணவரான அசோக் செல்வன் தனது நண்பர்களுடன் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வருகிறார். அந்த விடுதிக்கு நாசர் தலைமைப் பொறுப்பில் உள்ளார். அவர் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி.மிகவும் கண்டிப்பானவர். தன்னை அந்த விடுதியில் ஒருநாள் இரவு மட்டும் தங்க வைக்குமாறு அசோக் செல்வனிடம் பிரியா பவானி சங்கர் கேட்கிறார், அவரும் யாருக்கும் தெரியாமல் பிரியாவை அங்கே கூட்டி வருகிறார். ஹாஸ்டலுக்குள் வரும் இளம்பெண்ணான பிரியா, அங்கிருந்து யாரிடமும் மாட்டிக்கொள்ளாமல் எப்படி வெளியேறினார் என்பதே ’ஹாஸ்டல்’ படத்தின் கதை.

மலையாளத்தில் 2015 ஆம் ஆண்டு வெளியான ’அடி கப்யாரே கூட்டமணி’ என்ற திகில் கலந்த நகைச்சுவை படத்தின் தமிழ் வடிவமே இந்த ‘ ஹாஸ்டல்’ திரைப்படம். மலையாளத்தில் வெளியான படத்தை, தமிழ் மக்களுக்கு ஏற்ப சிறு மாற்றங்களுடன் எடுத்துள்ளனர்.

இந்தப் படத்தில் அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், சதீஷ், நாசர், முனீஸ்காந்த் போன்றோர் நடித்துள்ளனர். சுமந்த் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரவீந்திரன் இப் படத்தைத் தமிழில் தயாரித்துள்ளார்.

அசோக் செல்வன் -பிரியா பவானி சங்கர் இணை பார்ப்பதற்கு அழகு. அசோக் செல்வனின் நண்பர்களாக வரும் சதீஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் செய்யும் லூட்டிகளும் சேட்டைகளும் சில இடங்களில் மட்டும் ரசிக்க வைக்கின்றன.

அசோக் செல்வன் முதல் முறையாக முழுநீள காமெடி படத்தில் நடித்திருக்கிறார். கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்ய உழைத்துள்ளார். ஆனால் பல் வகை நடிப்புக்கு வாய்ப்பில்லை. அசோக் செல்வன் நகைச்சுவை நடிப்பிலும் போராடி பாஸ் ஆகி விட்டார்.

பிரியா பவானி சங்கருக்கு நடிக்க வாய்ப்புள்ள கதாபாத்திரம்தான். அதைச் சரியாகவும் பயன் படுத்தியுள்ளார்.

சதீஷ் வழக்கம் போல தனது அசட்டுத்தன டைமிங் காமெடி மூலம் சிரிக்க வைக்க முயல்கிறார்.அசோக் செல்வனின் நண்பர்களாக நடித்திருக்கும் கிரிஷ் , KPY யோகி இருவரும் தங்கள் பங்கிற்கு குறை வைக்கவில்லை.

ஹாஸ்டல் படத்தை மொத்தமாக தாங்கிப் பிடிப்பது நாசர் மற்றும் முனிஸ்காந்த் தான். இருவர் கூட்டணி பல இடங்களில் சிரிக்க ரசிக்க வைக்கிறது. ஒவ்வொரு முறையும் முனிஸ்காந்த் நாசரை அழைத்துக்கொண்டு ஒவ்வொருஅறையாகச் சோதனை செய்யும் காட்சிகள்,அவ்வப்போது பிரியாவை சங்கரை மறைக்க அசோக் செல்வன் தவிக்கும் காட்சிகள் கவரும் . இரண்டாம் பாதியில் பேயாக வரும் நிஷா தன் வேலையைச் சரியாகச்செய்து பதிகிறார்.

ஹாஸ்டல் வார்டனாக வரும் நாசர், கிளைமாக்ஸில் பேயை விரட்ட நினைத்து பேயிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகள் ரசிக்கலாம் .

போபோ சசியின் இசையில் கானா பாடல்கள் ஆட்டம் போட வைக்கும் ரகம்.

இளைஞர்களை மையமாக வைத்து எடுத்துள்ளதால் படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்கள்.
ஆண்களின் ஹாஸ்டல் என்ற ஒரே ஒரு களத்தில் முழுப் படத்தையும் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரவீன் குமார்.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் முழுக் கதையும் நகர்கிறது.அப்படிப்பட்ட கதையைப் படமாக எடுப்பது என்கிற சவாலை எதிர் கொண்டு சமாளித்துள்ள இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணனைப் பாராட்டலாம்.

மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தப் படத்திற்குத் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி அமைத்து
எடுத்து இருந்தால் சுவாரஸ்யமாக அமைந்திருக்கும்.