100 பாடல்கள் போதும். என் வாழ்வு நிறைவு பெறும் : இசையமைப்பாளர் டி. இமான் பேச்சு !

100 பாடல்கள் போதும், என் வாழ்வு நிறைவு பெறும் என்று இசையமைப்பாளர் டி. இமான் கூறினார்.

சினிமாவில் 100 வது படம் இசையமைத்த மகிழ்வைப் பகிர்ந்து கொள்ளும் விதத்தில் இசையமைப்பாளர் டி. இமான் ஊடகங்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசும் போது ,

” நான் சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவன். குட்டி பத்மினி மேடம் தான் என்னை ‘கிருஷ்ண தாசி’ தொடர் மூலம் அறிமுகப்படுத்தினார். அவர்களது ‘காதலே சுவாசம்’ முதலில் வெளியாகவில்லை. என்றாலும் அதுவே என் முதல் படம். நான் இசையமைத்து வெளிவந்த முதல் படம் ‘தமிழன்’. அதுவே என் வெளிவந்த முதல் படமாக இருந்தது. அதைத் தயாரித்த ஜீவி சாரை என்னால் மறக்க முடியாது. 5000 எபிசோட்கள் சின்னத்திரை தொடர்கள் அனுபவம் , 250 விளம்பரப் படங்களின் அனுபவம் போன்றவை எனக்குச் சினிமாவில் பெரிதும் உதவுகின்றன.

நான் என் பெருமையாக நினைப்பது 125 பாடகர்களை அறிமுகம் செய்ததைத்தான். நான் 100 ப டங்களுக்கு இசை அமைத்ததை பெரிதாக நினைக்கவில்லை. இந்த எண்ணிக்கை 200 என்றோ 500 என்றோ 1000 என்றோ போவதில் பெரிய ஆர்வமில்லை. உங்கள் முக்கியமான பாடல்களாக உள்ள தொகுப்பில் இடம் பெறும்படி 100 பாடல்கள் இசையமைத்தால் போதும் . அதில் மன நிறைவடைவேன். நான் பணியாற்றும் போது சின்ன படம் என்றோ பெரிய படம் என்றோ பார்ப்பதில்லை. எல்லாவற்றையுமே என் முதல் படம் என்றே முக்கிய படம் என்றே நினைத்து இசையமைக்கிறேன்.” என்றவர் தன் 100 படம் வரையிலான இசைப் பயணத்தில் துணை நின்றவர்கள் என்று ஒரு நீ ஈஈஈளமான பெயர்ப் பட்டியலை வாசித்து நன்றி கூறினார்.