‘கொம்பு வச்ச சிங்கம்டா’ விமர்சனம்

நேட்டிவிட்டி நாயகன் சசிக்குமார் , மடோனா செபாஸ்டியன், அருள்தாஸ், சங்கிலி முருகன், ஶ்ரீபிரியங்கா, ரஞ்சனா நாச்சியார் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் என மூன்று படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இதுவரை குறிப்பிட்ட சமூகத்தை பற்றிய கதையாக எடுத்து வந்த எஸ்.ஆர். பிரபாகரன் அனைத்து சமூகத்தினருக்குமான சமூக நல்லிணக்கம் வலியுறுத்தும் ஒரு புதுக்கதையை எடுத்துப் படமாக்கியிருக்கிறார் .பெரியார் வலியுறுத்திய சாதி மதங்களைக் கடந்த தத்துவங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில்தான் ஜாதி வெறி அரசியல் நடத்துபவர்கள் கொட்டம் அடங்கும், சமூகத்தில் அமைதி நிலவும் என்ற கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

படத்தின் கதை என்ன?

கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சியில் மக்கள் செல்வாக்குடன் வாழ்ந்து வருகிறார் மகேந்திரன். இவருடைய ஒரே மகன் சசிகுமார். இவருக்கு ஐந்து நண்பர்கள். சிறுவயதிலிருந்தே சாதி, மத வேறுபாடின்றி பழகி வருகிறார்கள்.

சசிகுமார் பெரியாரின் கொள்கையைப் பின்பற்றி சமத்துவம், சகோதரத்துவம் என ஊரைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற நினைக்கிறார். ஒத்த கருத்துள்ள நண்பர்கள் இணைந்து செயல்படுகிறார்கள்.இதனால் அவருக்குப் பல பிரச்சினைகள்.

அதே நேரத்தில் அங்கு உள்ளாட்சித் தேர்தல் வருகிறது. இதில் எதிர்பாராதவிதமாக ஒரு கொலைச் சம்பவம் நிகழ்கிறது. பிறகு அது ஜாதி பிரச்சினையாக மாறிவிடுகிறது. அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் என்ன? கொலைக்கான பின்னணி என்ன? என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் சசிகுமார் வழக்கமான நடிப்பில் முத்திரை பதிக்கிறார். கதாநாயகி மடோனா செபாஸ்டியன் பாடல்களுக்கு மட்டுமே பயன்பட்டு உள்ளார். சொல்லும்படியான நடிப்பு வாய்ப்புக் காட்சிகள் அவருக்கு இல்லை.

என்.கே.ஏகாம்பரம் தன் ஒளிப்பதிவில் கரூரின் அழகைக் காட்சிப்படுத்தியுள்ளார்.பகைமை கொண்டு துரத்தும் காட்சிகள் பரபரப்பூட்டு கின்றன.குறிப்பாக அந்த சோளக்கொல்லைச் சண்டை காட்சிகள்.
சசிகுமார் படங்களில் பாடல்கள்கிராமிய மணம் கமழும். இதில் அது மிஸ்ஸிங்.பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார் ரகம்.

வன்முறைக் காட்சிகள் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.சில காட்சிகள் அலுப்பூட்டுகின்றன.காட்சிகள் தொய்வு ஏற்படும் போதெல்லாம் சூரி தனது சேட்டைகளைக் காட்டி கலகலப்பூட்டுகிறார்.
இயக்குநர் மகேந்திரனுக்கு அழுத்தமான கதாபாத்திரம்.

ஜாதி அரசியல் எந்தளவிற்கு சமூகத்தில் ஊடுருவியுள்ளது என்பதை இயக்குநர் வெளிப்படுத்தியுள்ளார்.
கதையின் நோக்கம் உயர்ந்ததுதான். ஆனால் இன்னும் அழுத்தமாகச் சொல்லி இருக்கலாம் என்று தோன்றுகிறது.