‘ பருந்தாகுது ஊர்குருவி’
விமர்சனம

இது ஹாரர் த்ரில்லர் படங்களின் காலம் .அந்த வரிசையில் காடும் காடு சார்ந்த பின்னணியை பெரும் பலமாக வைத்து உருவாகி இருக்கும் படம் தான் ‘பருந்தாகுது ஊர் குருவி’
கோ.தனபாலன் இயக்கியுள்ளார்.இயக்குநர் ராமின் மாணவர் இவர். நிஷாந்த் ரூசோ, காயத்ரி ஐயர் , விவேக் பிரசன்னா ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் ராட்சசன் வினோத் சாகர், அருள் டி சங்கர், கோடங்கி வடிவேல், ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தை லைட்ஸ் ஆன் மீடியா தயாரித்துள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒரே இரவில் நடக்கும் சர்வைவல் திரில்லராக உருவாக்கி உள்ளது இப்படம்.ஓர் அடர்ந்த காட்டுக்குள் ஒருவனைக் கொலை வெறியோடு ஒரு கும்பல் கொல்லத் துரத்துகிறது. அவனைக் காப்பாற்ற முயற்சி செய்கிறான் கதாநாயகன். முடிவு என்ன என்பதுதான் படம்.

சின்ன சின்ன களவுகள் குற்றச் செயல்கள் செய்துவிட்டு சின்ன சின்ன வழக்குகளில் கைதாகி வெளியே வருபவர் ஆதி (நிஷாந்த் ரூசோ) மிளகுகள் விளையும் அந்தக் காட்டில் யாரையோ கொலைவெறித்தாக்குதலில் வெட்டிப் போட்டிருப்பதாகக காவல்துறைக்குத் தகவல் வருகிறது.
இடத்தை அடையாளம் காண வழிகாட்டச் சொல்லி சம்பந்தப்பட்ட இடத்திற்கு காவல் அதிகாரி போஸ், ஆதியை இழுத்துக்கொண்டு போகிறார்.

அங்கே சென்றவுடன், ஆதியின் கையுடன் பிணத்தின் கையையும் கைவிலங்கு போட்டுப் பூட்டிவிட்டுச் செல்கிறார். போன் பேசிவிட்டு வரும்வரை, சடலத்தைக் கவனித்துக் கொள்ளுமாறு கூறுகிறார்.
ஆதி, பூட்டப்பட்ட கைவிலங்கிலிருந்து தன்னை விடுவிக்க முயல்கிறார்.அப்போது தான் தெரிகிறது அது பிணம் அல்ல உயிருள்ள உடல் என்று.இறந்ததாகக் கருதப்பட்டு அங்கே கிடந்த நபரின் அசைவில் உயிர் இருப்பது தெரிகிறது.

அப்போது, அந்த நபரின் அலைபேசிக்கு போன் வருகிறது. அது யாரோ ஒரு பெண் குரல். அவரைக் காப்பாற்றுமாறு ஆதியிடம் கெஞ்சிக் கேட்கிறார்.உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நபரின் பெயர் மாறன் என தெரிகிறது. ஆதி. சிறிது நேரத்தில் மீண்டும் இவர்கள் இருக்கும் இடத்தை தேடி கொலைகார கும்பல் வருகிறது.
அந்த நபரை ஆதி காப்பாற்றினாரா? அவரைக் கொல்லத் துடிக்கும் கும்பல் யார்? போன்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்வதே படம்.

ஆரம்ப காட்சியில் பிணம், அதனுடன் அருகில் இருக்கும் நாயகன் ,அருகே பாம்பு என்று காட்டி ரசிகர்களை நிமிர்ந்து அமர வைத்து கவனம் ஈர்க்கிறார் இயக்குநர்.ஆனால் அந்த ஈர்ப்பைப் படம் முழுக்க தக்க வைக்கத் தவறி விடுகிறார்.

சர்வைவல்-த்ரில்லர் வகை கதையாக இருந்தாலும்,அந்த வகைப் படத்திற்கான வேகம் போகப் போக குறைய ஆரம்பிக்கிறது.நடித்தவர்கள் மேல் குறையில்லை.அவரவர் தங்கள் பங்கைச் சரியாக செய்திருந்தனர்.

படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது ஒளிப்பதிவும் பின்னணி இசையும் தான்.

காடும் காடு சார்ந்த பகுதிகளைக் கண்முன் நிறுத்தி அழகான பின்புலத்தைக் காட்சியாக ஒளிப்பதிவு செய்துள்ளார் அஷ்வின் நோயல்,

நம்ப முடியாத வகையில் விவேக் பிரசன்னாவின் கதாப்பாத்திரம் உயிருடன் இருப்பதை ரசிகர்களால் ஏற்க முடியவில்லை. இறுதிக்கட்ட காட்சிகள் தெளிவாக இல்லாதது போல் தோன்றுகிறது.

நல்ல பின்புலத்தை வைத்துக்கொண்டு திரைக்கதையில் ஆங்காங்கே நிலவும் தொய்வைச் சரி செய்திருந்தால் நம்பகமான திரில்லர் படமாக மாறி இருக்கும்.