இரவு பகல் என்று பாராமல், அட்டை கடி , விஷப் பூச்சி , மழை என்று எல்லா சவாலையும் எதிர் கொண்ட நடிகை: வியக்கும் இயக்குநர்

payam11எஸ் துரை மற்றும் எஸ் சண்முகம் Octospider என்ற புதிய பட நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் ‘பயம் ஒரு பயணம்’  படத்தை மற்றுமொரு பேய் படம் என்று  ஒதுக்கி விட முடியாது என்கிறார் இயக்குநர் மணிஷர்மா.

‘உன்னை போல் ஒருவன்’ பரத், விசாகா சிங்,மீனாக்ஷி தீக்ஷித்,சிங்கம் புலி, ஊர்வசி, ஞானவேல்,யோகி பாபு, ‘லொள்ளு சபா’ மனோகர் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கும் ‘பயம் ஒரு பயணம் ‘ படத்தை இயக்குபவர் புதிய இயக்குநர் மணிஷர்மா.

இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் முடிந்தது.
”பேய் படங்கள் எண்ணிக்கையில் அடங்கா அளவுக்கு வெளிவந்து உள்ளதையும், வெளி வர உள்ளதையும் நான் அறிவேன். ‘பயம், ஒரு பயணம்’ மற்ற பேய் படங்களில் இருந்து நிச்சயம் மாறுப்பட்டதாக இருக்கும். பேய் படங்கள் என்றப் பெயரில்  எடுக்கப் படும் படங்கள் நகைசுவை படங்களாகவோ,அல்லது செண்டிமெண்ட் படமாகவோ தான் இருக்கிறது முழுக்க முழுக்க பயமுறுத்தும் , பயத்தை பிரதானமாக வைத்து எடுக்கப் பட்ட படமாக ‘பயம் ஒரு பயணம் ‘ இருக்கும் என்பதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை.

ஆங்கிலத்தில் வெளி வந்த தி எக்சோர்சிஸ்ட்,தி ஓமன், Evil death, conjuring ஆகியப் படங்களைப் போலவே முழுக்க முழுக்க பேய் படமாகவே இருக்கும்.
இதய மருத்துவரும் , உன்னை போல் ஒருவன் படத்தில் ஒரு பிரதானக் கதாப் பாத்திரத்தில் நடித்தவருமான பரத் இந்தப் படத்தில் கதாநாயகனாக  நடிக்கிறார். பேயாக நடிக்கும் கதாநாயகி பாத்திரத்துக்கு பலரை சிந்தித்தோம் , சிலரை சந்தித்தோம் விசாக சிங்கை பார்க்கும் வரை.

கதை கேட்ட மாத்திரத்திலே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.இவ்வளவு  அழகான பேய் இருக்குமா என்பதிலும் எங்களுக்கு சந்தேகம் தான். அந்த அளவுக்கு அவர் அழகு. பாத்திரத்துக்கு ஏற்ப தன்னை அவர் அகோரப் படுத்த ஒப்புக் கொண்டதே அவர் தொழில் மீது அவருக்கு உள்ள மரியாதையை புரிய வைத்தது. மூணாறில் இடை விடாத 20 நாட்கள் இரவு பகல் என்று பாராமல், அட்டை கடி , விஷப் பூச்சி , மழை என்று எல்லா சவாலையும்  அவர் எதிர் கொண்டு அவர் நடித்தது அவர் மேல் உள்ள மரியாதையை கூட்டியது. தனது தோற்றத்தையும்,படபிடிப்பின் போது  இருந்த அசாதாரண சவாலையும் அவர் மேற்கொண்ட விதத்தை கண்டு படப்பிடிப்பு குழுவில் இருந்த அனைவரும் அசந்து போனோம். வளர்ந்து வரும் இயக்குநர்களுக்கு அவரைப் போன்ற நடிகைகள் கிடைப்பது அதிர்ஷ்டமே  என்பேன்.
ஊர்வசி மேடம் போன்ற வாழும் சாதனையாளருடன்  பணியாற்றுவது எங்களைப் போன்ற புதிய கலைஞர்களுக்கு ஒரு வரப்ரசாதம் எனலாம்.’பயம் ஒரு பயணம்’ படத்தின் மிக பெரிய பலமே படத்தின் இசை தான் என்று கூறலாம்.புதிய இசை அமைப்பாளர் ஒய் .ஆர். பிரசாத் பின்னணியில் மட்டுமின்றி,பாடல்களிலும் பட்டையைக்  கிளப்பி  இருக்கிறார். பொதுவாகவே பேய் படங்கள் என்றாலே பின்னணி இசைக்கு தான் முக்கியத் துவம் இருக்கும். ஆனால் பயம் ஒரு பயணம் ‘ படத்தின் பாடல்கள் நிச்சயம் ஹிட் ஆகும்.
ஒளிப்பதிவை செய்பவர் ஆண்ட்ரு.என்னுடைய தயாரிப்பாளர்களுக்கு நான் காலம் முழுவதும் கடமைப் பட்டு உள்ளேன். படத்தை மேம்படுத்த ஒரு இயக்குநராக் நான் எதைக் கேட்டாலும் அவர்கள் அதைத் தர தயங்குவதே இல்லை. ஒரு புதிய இயக்குநராக இதை விட வேறு என்ன வேண்டும்”என்று  வினவினார் மணிஷர்மா.