‘7 நாட்கள்’ விமர்சனம்

7natgal1ஏழு நாட்களில் நடக்கும் சஸ்பென்ஸ் க்ரைம் கதை தான் இந்த ‘7 நாட்கள்’ படம். . காரணமறியாத அடுத்தடுத்த கொலைகள், பழிக்கு பழி, துரோகம் என்று செல்கிறது கதை.

பிரபு  ஒரு கோடீஸ்வரர். அமைச்சரே அவரது பாக்கெட்டில் . அவர் தனது மகனுக்கு, அவரைவிடப் பெரிய வசதியான இடத்தில்  பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்கிறார். 7 நாட்களில் திருமணம் செய்யத் தேதி குறிக்கப்படுகிறது.

இச்சூழலில் சில பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்படுகிறார்கள். அவர்களோ பிரபுவின் மகனுடன் நெருங்கிப் பழகியவர்கள். போலீசின் பார்வை பிரபுவின் மகன் மீது .. தனது பண பலத்தின் மூலம் போலீசிடம் இருந்து தனது மகனை பிரபு காப்பாற்றுகிறார்.  ஆனாலும் ஒரு மர்ம நபர் அவரை போனில் மிரட்டுகிறார்.அவரது மகன் தொடர்பான் சிடி இருப்பதாகக் கூறுகிறான்.

அந்த மர்ம நபர் யார், உண்மையான கொலையாளி யார்? என்பதை கண்டறியும் பொறுப்பை பிரபு தனது வளர்ப்பு மகனும், சைபர் க்ரைம் உயர் போலீஸ் அதிகாரியான கணேஷ் வெங்கட்ராமிடம் ஒப்படைக்க, மர்ம நபர் சிடி யை சக்தியிடம் ஒப்படைக்கிறார். இதனால், கணேஷ் வெங்கட்ராம் சக்தியை துரத்தினாலும், அந்த சிடி மட்டும் யார் கைக்கும் கிடைக்காமல் இருக்க, அதில் என்ன இருக்கிறது, கொலைகள் செய்வது யார், என்ற கேள்விகளுக்கான பதிலே உச்சக்கட்ட காட்சி.

சக்தி, இந்த படத்தில்  அலட்டாமல் நடித்துள்ளார். ஓடிக்கொண்டே இருந்தாலும், அவ்வபோது வரும் செண்டிமெண்டான காட்சிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி சாபாஷ் பெறுகிறார்..

நாயகி நிகிஷா பட்டேலுக்கு பெரிய வேலை ஏதும் இல்லை என்றாலும், அவரை கலாய்க்கும் பிளாக்கி என்ற நாய் பேசும் வசனங்கள் ஒவ்வொன்றும் சிரிப்பு வெடிகள்தான்.

போலீஸ் அதிகாரி வேடம் ஏற்றிருக்கும் கணேஷ் வெங்கட்ராம், காக்கி யூனிபார்ம் இல்லாமல் கோட் சூட்டில் ஸ்டைலாக இருப்பதோடு, தனது கதாபாத்திரத்தை ரசிகர்கள் மனதில் நிற்கும் விதத்தில் மாறுபட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார். பிரபு, எம்.எஸ்.பாஸ்கர் என்று மூத்த நடிகர்கள் தங்களது பணியை சிறப்பாக செய்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
இயக்குநர் கெளதம் வி.ஆர், தனது திரைக்கதை மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துவதோடு, நாயகனின்  நண்பனாக நாய் ஒன்றை அறிமுகப்படுத்தி, அதற்கு வி.எஸ்.ராகவன் குரலில் மைண்ட் வாய் கொடுத்து நமக்கு அவ்வபோது கிச்சு கிச்சு மூட்டவும் செய்கிறார்.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்களை விட பின்னணி இசைக்கு பாஸ் மார்க் தரலாம.  எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக உள்ளன.

படத்ம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே கதைக்குள் நம்மை இழுத்துவிடும் அளவுக்கு ரொம்ப திறமையான திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் கெளதம் வி.ஆர், இரண்டாம் பாதியில் வைத்த டூயட்  திணிபு போல உள்ளது. இருந்தாலும் பிளாஷ்பேக் போன்ற விஷயங்களை ரொம்ப சுருக்கமாக சொல்லியிருப்பது, சண்டைக்காட்சிகளையும், சேசிங் காட்சிகளையும் கச்சிதமாக கையாண்டிருப்பது  நன்று.