‘8 தோட்டாக்கள் ‘ விமர்சனம்

8thottakal-movie-reviewதொலைந்து போன தோட்டாக்கள் பற்றிய கதை.நாயகன் வெற்றி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் . அவர் குற்றவாளியை மப்டியில் கண்காணிக்கும் போது தனது துப்பாக்கியைத் தொலைத்துவிடுகிறார்.

8 தோட்டாக்கள் போட்டு நிரப்பப் பட்ட அந்தத் துப்பாக்கி  வேறு ஒருவரது கைக்கு கிடைக்க, அதை வைத்து அவர் என்ன செய்கிறார், அந்த 8 தோட்டாக்கள் யார் யார் உயிரைப் பலி கொள்கிறது என்பது தான் ‘8 தோட்டக்கள்’ படத்தின் கதை.

துப்பாக்கியைத் தேடும் போது டிவி நிருபரான நாயகி  அபர்ணா முரளியுடன்  நாயகன் வெற்றி காதல் கொள்கிறார். வெற்றியின் துப்பாக்கி விவகாரத்தை செய்தியாக சேனலுக்கு அபர்ணா கொடுக்கிறார். அதனால் இவர்களது காதலிலும் விரிசல் ஏற்படுகிறது.

இந்த நிலையில் காணாமல் போன துப்பாக்கியால் பெரிய குற்றச் செயல் ஒன்று நடக்க, நாயகன் சஸ்பெண்ட் ஆகிறார். அவரே குற்றவாளியாகவும் பார்க்கப்பட, இறுதியில் இந்த பிரச்சினைகளில் இருந்து அவர் விடுபட்டாரா, துப்பாக்கியும் அதை வைத்து குற்றச் செயல்கள் செய்பவரும் பிடிபட்டாரா, அவர் யார், அவரிடம் துப்பாக்கி எப்படிப் போனது, என்கிற கேள்விகளுக்குப் பதிலே  படத்தின் முடிவுக்கான பயணம்.

நாயகன்வெற்றி, வேண்டா வெறுப்பாகப் போலீஸ் வேலையில் இருக்கும் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்., படம் முழுவதுமே அவர் ஒரே மாதிரியாக நடிப்பது சலிப்பு.

படத்தில் ரொம்ப முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள எம்.எஸ்.பாஸ்கர் குணச்சித்திர நடிகராக ஜொலிக்கிறார்.

படம் முழுவதுமே மப்டியில் வரும் போலீசாக, நாசர் வரும் இடங்களும், குற்றவாளிகளை விசாரிக்கும் காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளன எனலாம்.

கதாபாத்திர தேர்வுகளில் கவனம் செலுத்தியுள்ள இயக்குநர் ஸ்ரீகணேஷ், படத்தின் ஆரம்பத்தில் திரைக்கதையை நேர்த்தியாக கையாண்டிருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் 8 தோட்டாக்களை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே காட்சிகளை திணிக்கிறார்.

பாடல்களே தேவையில்லாத படமிது. அதனால் இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி கே.எஸ் போட்டுள்ள பாடல்கள் எடுபடவில்லை. பின்னணி இசையில் பலவிதமான ஆங்கிலப் படங்களின் சப்தங்கள் . தினேஷ் கே.பாபு-வின் ஒளிப்பதிவில் ஆரம்ப காட்சிகள் அமர்க்களம். படம் முழுவதும் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிறமும் கவர்கிறது.

நாயகன் துப்பாக்கி தேடும் போது கிடைக்கும் க்ளூவை வைத்து அடுத்த கட்டத்திற்கு போவார் என்று பார்த்தால், நாயகியுடன் கட்டிப்பிடித்து காதல் செய்கிறார்.டூயட் பாடுகிறார்.  தேவையில்லாத இடங்களில் பாடல்களை திணித்து திரைக்கதையை திக்கு திசை தெரியாமல் நகர்த்துகிறார்.

பரபரப்பாக இருக்க வேண்டிய திரைக்கதையில் நச்சென்று வசனத்தை வைக்காதது குறை.
வில்லனைச் சுற்றி கதையை நகர்த்தியுள்ள இயக்குநர் காட்சிகளில் விறுவிறுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், செண்டிமெண்டுக்குக் கொடுத்துள்ளார்.அதனால், இறுதியில் வில்லனை நாயகனாக்க நினைத்திருப்பது எடுபடாமல் போகிறது.

திரைக்கதையைச் சாமர்த்தியமாக கையாளும் படங்கள் வரிசையில் இந்தப் படமும் இருந்திருக்க வேண்டும். ஆனால், இயக்குநரின் பலவீனமான காட்சிகளால் லாஜிக் மீறல்களாலும் வீரியம் குறைந்த தோட்டாக்களாகவே இந்த ‘8 தோட்டாக்கள்’ உள்ளது.

Pin It

Comments are closed.