‘K 13’ விமர்சனம்

  பரத் நீலகண்டன் இயக்கத்தில் SP சினிமாஸ் தயாரிப்பில் அருள் நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள  படமிது. இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை தொடர்ந்து அருள்நிதி மீண்டும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரைத் தேர்ந்தெடுத்துள்ளார்  . இந்த K-13   எப்படி என்று  பார்ப்போம்.

திரையுலகில் நீண்ட நாட்களாக உதவி இயக்குநராக இருக்கும் அருள்நிதி எப்படியாவது இயக்குநராகிவிட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார். நண்பர்கள் வற்புறுத்தலால் க்ளப்பிற்கு செல்ல, அங்கு ஷ்ரதா ஸ்ரீநாத் அறிமுகம் கிடைக்கிறது.

மலர்விழியான ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும், மதியழகனான அருள் நிதியும் ஒரு பாரில் சந்தித்து கொள்கின்றனர். ஷ்ரதா ஒரு எழுத்தாளர், அவருக்கு அருள்நிதி மேல் ஒரு ஈர்ப்பு வர, அவரை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றார்.அதன் பின்னர் ஒரு வீட்டில் அருள்நிதி நாற்காலி ஒன்றில் கட்டிப் போடப்பட்டுக் கிடக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் கையறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடக்கிறார்.

இவர்களுக்கு இடையே என்ன நடந்தது? ஷ்ரத்தா  எப்படி இறந்தார்? அதன் பின்னர் இந்த வீட்டில் இருந்து அருள்நிதி எப்படி தப்பித்தார்? இறுதியில் என்ன நடந்தது என்பது தான் இப்படத்தின்  கதை செல்லும் பாதை.

 

 தொடர்ந்து நடக்கும் அடுத்தடுத்த திருப்பங்களே இந்த K-13 படம். படத்தின் பெயர்K-13  என்பது கதை நிகழும் ப்ளாட் எண்ணைக் குறிக்கிறது.

அருள்நிதி தொடர்ந்து ஒரு சஸ்பென்ஸ் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார், அந்த வகையில் இதுவும் அவருக்கு ஒரு சிறந்த படைப்பே, படத்தில் அவரின் கதாபாத்திரமே பெரும்பாலும் வருகிறது. அதனால் எந்த ஒரு இடத்திலும் கவனம் சிதறவிடாமல் அவரின் பதற்றத்தை நம்மிடம் கடத்துகிறார்.

ஷ்ரதா படத்தின் ஆரம்பத்திலேயே இறந்து போகிறார், அதைத் தொடர்ந்து இடைவேளை வரை அவருக்கு பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் அவருக்கான காட்சி தொடங்கும் போது ரசிக்க வைக்கின்றார்.

படத்தில் எந்த ஒரு காட்சியையும் முழுமையாக விவரிக்க முடியாது, ஏனெனில் டுவிஸ்ட் உடைந்துவிடும். அதிலும் அட படம் முடிந்துவிட்டது இவ்வளவு தானா? என்று இருக்க, அதை தொடர்ந்து அருள்நிதி பார்வையில் கதை தொடங்க, அட என்ன இது என்று சீட்டின் நுனிக்கு வரவைக்கிறது.

ஆனால், படத்தின் முதல் பாதியில் இருந்த  விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லாமல்  கொஞ்சம் தடுமாறுகிறது. அருள்நிதியிடம் சேர்ந்து நாமும் கவுன்ஸிலிங் சென்றது போல் இருக்க, கிளைமேக்ஸ் டுவிஸ்ட் நிமிர்ந்து உட்கார வைக்கின்றது.

படத்தின் மிகப்பெரும் பலம் சாம் இசை தான், பின்னணியில் மிரட்டியுள்ளார். ஒளிப்பதிவும் படம் முழுவதும் பெரும்பாலும் ஒரு ரூம் என்றாலும், எங்குமே நமக்கு சலிப்பு தட்டாமல் காட்சிப்படுத்தியுள்ளனர்.

படத்தின் முதல் பாதி செம்ம விறுவிறுப்பு. படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள். கிளைமேக்ஸ் டுவிஸ்ட்.பாராட்டுக்குரியவை.

மொத்தத்தில் K-13  மூலம் நம்மை இருக்கையின் நுனியில் கட்டிப்போட்டுள்ளார் இயக்குநர் பரத் நீலகண்டன்.

 

 

 

Pin It

Comments are closed.